காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: கலைஞர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி வெற்றி பெறலாம். மாணவர்கள் சிறு பூசல்களைப் பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியப் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகள் தானே குறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொதுப்பிரச்னைகளைப் புத்திசாலித் தனமாகவும், பொறுமையாகவும் கையாளுதல் அவசியம். ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகையில், வியாபாரிகளுக்குக் கிடப்பில் கிடந்த சலுகைகளும், கைக்கு வந்து சேரும். இந்த வாரம் வேலை பொருட்டு நீங்கள் அதிகப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணி புரியும் பெண்களுக்குத் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன்படி நடந்தால், நல்ல பெயரைப் பெறலாம்.

ரிஷபம்: வேலைக்குச் செல்லும் பெண்கள் காரியங்கள் முடியும் வரை அதிலேயே கவனமாக இருப்பது நல்லது. கல்விக்கான வேலைகள் அதிகம் இருந்தாலும், மாணவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். கலைஞர்கள் உடனிருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். தகுந்த ஆலோசனையுடன் சுய தொழிலிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பணியில் இருப்பவர்கள் பிரச்னைக்குரிய நபர்களின் செயல்பாடுகளை முறியடிக்க அமைதியாய்ச் செயல்படுவது நல்லது. வியாபாரிகள் பங்குச் சந்தையின் நிலவரத்தை உணர்ந்து செயல்படுவதுதான் புத்திசாலித் தனம். கோடை நெருங்குவதால், முதியவர்கள் உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியம். மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டாமலிருக்கவும்.

மிதுனம்: மாணவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். பெண்கள் முக்கிய விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல்பட்டால், குடும்ப அமைதிக்குப் பங்கம் வராமலிருக்கும். புகழேணியில் இடம் பிடிக்க, கலைஞர்கள் சில நெருக்கடிகளைத் தாண்டி வர வேண்டியிருக்கும். பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் திறமையான நபர்களை அருகில் வைத்துக் கொண்டால், வேண்டிய வேலைகளைப் பக்குவமாக முடித்து விடலாம். பணியில் இருப்பவர்கள் எந்தச் சூழலிலும், கோபம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலைகள் சீராக நடக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காகக் கல்விக் கடன் பெறும் முயற்சிகளில் சிறிது தேக்க நிலை இருக்கும். இந்த வாரம் நண்பர்கள் நடுவே சிறு விஷயங்களுக்குக் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள், பொது இடங்களில் வேண்டாத விஷயங்களை அலசாமல் இருப்பது நல்லது.

கடகம்: மாணவர்கள் மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடுக்காமலிருந்தால், வீண் செலவுகளைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம் கலைஞர்கள், தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக ஒப்பந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரிகள் போட்டிகளில் வெற்றி பெற ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் உழைப்பீர்கள். பெண்கள் அக்கம் பக்கத்தாருக்குத் தங்கள் பொருள்களை இரவலாகத் தருவதைத் தவிர்ப்பது நல்லது. பணப் பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால், நஷ்டம், கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் பேச்சைக் குறைத்து கடமையில் கண்ணாக இருப்பது அவசியம். மாணவர்கள் தாங்கள் விரும்பிய, சலுகைகளைப் பெற சற்றுப் பொறுமை காக்கவும். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள், உடன் இருக்கும் நண்பர்களுக்காக அதிகப் பணம் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

சிம்மம்: பெண்கள் உறவினரின் மனம் குளிரும் காரியங்களைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். கலைஞர்கள் தாங்கள் பங்கேற்கும் விழா விருந்து ஆகியவற்றில் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம். வியாபாரிகளுக்குப் பழைய கடன் தொல்லைகள் மூலம் சில பிரச்னைகள் தலை காட்டும். எனவே கணக்கு வழக்குகளை முறையாக வைப்பதில் கவனம் செலுத்துங்கள். சுய தொழில் புரிபவர்கள் வங்கியில் கடன் தவணைகள் சரியாகக் கட்டப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்வது நல்லது. கலைஞர்கள் முக்கியமான ஒப்பந்தங்கள், முடிவுகள் ஆகியவற்றில் அதிக அவசரம் வேண்டாம். நிதானத்துடன் செயல்பட்டால், நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்பட இயலும். மாணவர்கள் புத்திசாலித்தனமாய்ச் செயல்படுவதன் மூலம், வேண்டாத பிரச்னைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

கன்னி: கலைஞர்களுக்குச் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் அனுசரணையும் குறையாமலிருக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகாமலிருக்க, உங்கள் பணியில் மட்டும் ஈடுபடுவது நல்லது. பெண்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொண்டால், உறவுகள் கசக்காமல் இருக்கும். உங்களைத் தவறாகப் புரிந்து விலகியிருந்த பங்குதாரர்கள் மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வார்கள். வியாபாரிகள் தொழிலாளர் பிரச்னைகளைச் சுமூகமாகத் தீர்த்துக் கொண்டால், நஷ்டப்பட வேண்டியிருக்காது. இந்த வாரம் பெண்களின் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருந்தாலும், செலவுகளில் கட்டுப்பாடாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாமல் பணி புரிவது நன்மை தரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உறவுகள் நடுவே நல்ல பெயரும் இருக்கும். மாணவர்கள் மன உறுதியுடன் செயல்படுவது நல்லது.

துலாம்: கலைஞர்கள் தங்கள் திறமையின் அடிப்படையில் வரும் வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்தினால், வாழ்வில் வளமும் நலமும் கூடும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், அவர்களும் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் விளையாட்டுத் தனத்தை விடுத்து உங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொண்டால் எதிர்காலம் வளமாக இருக்கும். பெண்கள் பேச்சில் சினம் கலவாமல் பார்த்துக் கொண்டால், சிறப்பான பெயரும், செயல்பாடும் உங்கள் வசமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். வியாபாரிகள் நீண்ட தூரம் வாகனங்களில் பயணம் செல்லும் போது கவனமாக இருங்கள். வீண் தொல்லைகள் உருவாகாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரிடம் கவனமாக இருக்கவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொள்ளவும்.

விருச்சிகம்: எதிரிகள் அவ்வப்போது சில தடைகளைத் தந்து கொண்டிருந்தாலும், பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் மன உறுதியால் அனைத்தும் தாண்டி விடுவார்கள். வியாபாரிகள் பணப் பெட்டிச் சாவி, பத்திரங்கள் முதலியவற்றை உங்கள் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். வேலை தேடச் சென்ற பிள்ளைகள் பெருமையையும், பொருளையும் அள்ளிப் பெற்றோர்களை மகிழ்விப்பார்கள். பெண்களின் ஏற்றத்திற்குக் கணவரும் உறுதுணையாய் இருப்பதால், இல்லம் புதுப் பொலிவுடன் விளங்கும். மனதில் இருந்த பயம், மறதி யாவும் விலகுவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் வளைய வருவர். கலைஞர்கள் அவ்வப்போது தலை காட்டும் உடற் சோர்வு, உள்ளச்சோர்வு, இரண்டையும் விரட்டி அடித்து விட்டால், மேலும் சிறப்பான முறையில் உங்கள் திறமை பரிமளிக்கும். வேலையில் இருப்பவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எவரையும் நம்பிப் பண உதவி செய்வதைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றமிராது.

தனுசு: கலைஞர்கள் தங்கள் திறமையால் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இயந்திரங்களை இயக்கும் இடங்களில் பணி புரிபவர்கள் இயந்திரங்களின் பராமரிப்பில், தகுந்த கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பதவியில் இருப்பவர்கள் பாரபட்சமின்றிப் பிறர்க்கு உதவி செய்வதை மேற்கொண்டால், பணியாளர்களின் ஆதரவு குறையாமலிருக்கும். அலைச்சலின் நடுவேயும் பெண்கள் சில பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் வேலையாட்களிடம் பங்குதாரர்களைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும். இந்த வாரம் திருப்திகரமான பணப் புழக்கம் இருப்பதால், சேமிப்பில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்களை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதியவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டாம். பெண்கள் கலைப் பொருட்கள், பொழுது போக்கு சாதனங்கள், ஆகியவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: சில சமயம் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடும், பிணக்கும் தோன்றி மறையும். எனவே எந்தச் சூழலிலும் பணி புரிபவர்கள் பக்குவமாக நடந்து கொள்வதே நல்லது. மாணவர்கள் நெருங்கிய நட்புடன் வீண் வாக்குவாதத்தில் இறங்க வேண்டாம். வேலையில் முழுக் கவனம் செலுத்தினால், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிலும் வெற்றியே! வியாபாரிகள் செலவு என்னும் பட்டியலில் கவனம் செலுத்தி வந்தால், வரவிற்குள் வாழ்வது என்பது எளிதாகும். கலைஞர்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சஞ்சலம், சபலம் இரண்டுக்கும் அணை போட்டால், அருமையான வாழ்வைப் பெறலாம். பெண்கள் உணவு, ஓய்வு இவை இரண்டிலும் முறையாக இருந்தால், வேலையும், மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று மோதாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் அதிகமாகக் கடன் வாங்குவதைக் குறைக்கவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்பட்டால், எந்த சிரமமும் இராது .

கும்பம்: பொதுச் சேவையில் ஈடுபடும் பெண்கள் பின் விளைவுகளைக் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உறவினர்களின் வீண் பணத்தேவைகளுக்குப் பொறுப்பேற்கும் நிலையைத் தவிர்ப்பதால் வீண் சிக்கல்கள் விலகும். வழக்கமாகச் செய்யும் பணியில் ஏற்படும் மாற்றத்தால் பணியில் இருப்பவர்களின் அலைச்சலும், அங்கலாய்ப்பும் கூடும். மாணவர்கள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மூலம் நல்ல நட்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். புதிய சொத்து வாங்குகையில் சொத்தின் முழு விபரம் அறிந்து வாங்குதல் நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிவும் இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், சங்கடம் ஏதும் வராமலிருக்கும். கலைஞர்கள் ஒப்பந்தங்கள் செய்து கொள்கையில் நேர்மையின் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களைத் தேர்வு செய்வது நல்லது.

மீனம்: மாணவர்கள் தேர்வு நேரங்களில், ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துங்கள். உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும். நிர்வாகத் துறையில் உள்ளவர்கள், விழிப்புடன் இருந்தால், தங்கள் நற்பெயருக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளலாம். கலைஞர்கள் தங்கள் கடின உழைப்பால் சவால்களை ஜெயிக்கும் சூழல் இருக்கும். வரவு செலவுகள் கட்டுக்குள் இருந்தால், இந்த ராசிக்காரர்கள், பொருளாதார ஏற்ற இறக்கங்களை ஓரளவு சமாளித்து விடலாம். குடும்பத்தில் அபிப்ராய பேதங்கள் தோன்றினாலும், பெண்கள் உறவுகளிடம் பழகும் போது கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் தலை தூக்காமலிருக்கும். வியாபாரிகள் தொழிலமைப்பில் புதுப்புது மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் மேலும் அதிக லாபம் பெறலாம். பணியில் உள்ளவர்கள் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், உங்கள் நிம்மதி குலையாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத செலவுகளை அதிகப்படுத்தாமலிருப்பது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *