இது காதல் பற்றிய குறிப்பு

 

 


பைசால்

மிக ஈரமாக யாரும் தொடமுடியாமல்
என்னிடம் இருப்பது
நீ தந்த முத்தமொன்றின் நீர்

அங்கு யாருக்கும் இருக்கை கொள்வதற்கு
பயமாகவே இருந்தது
ஆனால் நாமிருந்தோம் பேசியபடி

மலர்கள் உரசி எழுதும் மடலொன்றின் நடுவில்
உனது பெயரும் முகவரியும் சிக்கிக் கொண்டன

தேடுகிறேன்
உன்னால் பறந்து வரமுடியுமா?
நீதான்
கூந்தலுக்கு கீழ் இறங்கியிருக்கும் செம்பட்டை உரோமங்களில்
வண்ணத்துப் பூச்சியின் கோலத்தை வரைந்திருக்கிறாய்
உன்னால் பறந்து வரமுடியும்

மலையொன்றின் கடினமிருக்கும் காதல்
என நினைக்க  வைத்தாய்
அந்த மலையில்தான் பறவையொன்றினை அமர்த்தி
பாடச் சொன்னாய்

நாமிருந்தோம் பேசிய படி
அதன் ராகங்களில் மயங்கி
காதல் மலையென பாரித்தால் இறக்கி வை
உன்னை எண்ணி அதைத் தூக்கிடும் வீரத்தை
அடைந்துவிட்டேன் நான்

தினமும் பேச விரும்புகிறது என் மௌனம்
சுவர்க்கத்தை சுற்றியுள்ள சுவர்களுடனும்
அங்கு ஓடும் நதிகளுடனும்!

 படத்துக்கு நன்றி
http://gardens-design.info/wp-content/uploads/2011/03/colorfull-garden-flowers.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.