சீதாம்மா

பீட்டர் நல்லவனா கெட்டவனா ?

அவனுடைய வாழ்க்கையின் முக்கிய லட்சியம்
அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும். கார், பங்களா என வசதியுடன் வாழ வேண்டும்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை. பள்ளிப்படிப்புடன் நிறக வேண்டிய சூழல். ஆனால் அவன் ஆசையைமட்டும் விடவில்லை. விடவும் முடியவில்லை. சென்னை மண்ணடியில் ஒரு தனியார் அலுவலகத்தில் கடை நிலை ஊழியனாகப் பணியில் சேர்ந்தான். கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். ஈட்டும் ஒவ்வொரு காசும் அவன் மேற்கொண்டு படிப்பதற்கென்று வைத்துக் கொண்டான். வேறு எந்த வகை உல்லாசத்திற்கும் செல்வழிக்கமாட்டான். அவன் ஆசையை உணர்ந்திருந்த அவன் பெற்றோரும் என்ன கஷ்டப்பட்டாலும் அவனிடம் காசு கேட்பதில்லை. அஞ்சல்வழிக் கல்வி மூலம் பட்டம் பெற்றான். அவனுக்குத் தெரியும் அந்தப் படிப்பால் அவன் அமெரிக்கா செல்ல முடியாதென்று. மேலும் படித்தான். எம்.சி.ஏ பட்டம் வாங்கிவிட்டான். இதை கதை என்று நினைக்கின்றீர்களா? உழைப்பால் உயர்ந்த ஒருவனை நேரில் பார்த்துப் பழகிய ஒருவனைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

பட்டம் வாங்கிய பின்னரும் வெளியில் வேலைக்குச் செல்லவில்லை. இயற்கையாக அவனிடம் பல திறமைகள் இருந்தன. அவனால் மென்பொருள் தயாரிக்க முடிந்தது. சிறுகச் சிறுக முன்னேற ஆரம்பித்தான். எங்கு அடிமட்ட வேலை பார்த்தானோ அதே மண்ணடியில் ஓர் மாடியில் வாடகைக்கு இடம் பிடித்து தொழில் ஆரம்பித்துவிட்டான். இரண்டு அறைகள் தான். இப்பொழுது அவன் ஓர் கம்பெனிக்கு முதலாளி. சின்னக் கம்பெனியானாலும் அவன் ஓர் முதலாளி. கெட்டிக்கார இரு பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்தான் அவர்கள் கணினியில் பட்டம் பெற்றவர்கள் அல்ல. ஆனால் அடிப்படை விஷயம் கற்றவர்கள். அவர்களுக்குத் தான் தயாரிக்கும் மென் பொருள்பற்றி சில விஷயங்கள் மட்டும் கற்றுக்கொடுத்தான். அவன் வினியோகித்த இடங்கள் ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிசெய்யும் வகைகளைக் கற்றுக் கொடுத்தான். ஒருவன் பெயர் கண்ணன். இன்னொருவன் பெயர் சோமு. இந்த இருவரைத் தவிர அலுவலகத்தில் அமர்ந்து வருகின்றவர்களிடம் பேசுவது, கோப்புகளைப் பார்ப்பது, கணக்கு எழுதுவது என்பதற்கு ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது நிறைய கிளையண்ட்ஸ் கிடைத்துவிட்டனர். அவன் இரவில் படுப்பது கூட அலுவலகத்தில்தான். காலையில் மட்டும் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு காலை உணவு முடித்து மதியத்திற்கும் இருக்கும் சோற்றை எடுத்துக் கொண்டு வந்துவிடுவான். முதலாளியானாலும் அவன் சிக்கன வாழ்க்கை தொடர்ந்த்து. அவனுடைய ஆசை அப்படியே அவனுக்குள் இருந்து அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த்து.

இந்த சமயத்தில்தான் அரட்டை மூலம் எனக்கு அறிமுகமானான். ..அவனைப்பற்றிய விபரங்கள் அறியவும் வியப்பு. உழைப்பால் உயர்ந்த ஒருவன். பிள்ளைப்பருவம் முதல் காளைப்பருவம் வரை வேறு எதிலும் கவனம் சிதறாமல் தன் இலக்கு ஒன்றையே நினைத்து மற்ற மகிழ்ச்சிகளைத் துறந்தவன். யாரும் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை. அவனுக்குள் ஒர் விருட்சம் வளர்ந்து அவன் மனத்தைக் காத்து நிற்கிறது

பழகிய நாள்முதல் பீட்டர் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொலை பேசியில் கூப்பிட்டு சில நிமிடங்கள் பேசுவான். வயது இடைவெளியை நாங்கள் இருவரும் நினைக்கவில்லை. அவன் மனம் விட்டுப் பேச ஓர் நட்பு கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. அவன் கடந்த ஒவ்வொரு அடியைப்பற்றியும் கூறுவான். கடும் உழைப்பிலே உயரச் சென்றவன். உளவியல் படித்த எனக்கு அவனுடைய ஊக்கம் நிறைவைக் கொடுத்தது. அப்படியே உரையாடல் தொடர்ந்திருக்கலாம். வர வர ஏதோ ஓர் நெருடலை உணர ஆரம்பித்தேன். அவனுடைய கேள்விகள், எண்ணங்கள் அவனிடம் தற்காலிமாக பணியாற்றும் பெண்களைப்பற்றி வந்தது.அவன் ஒரு கேள்வி கேட்டான்

அம்மா, என்னிடம் வேலைக்கு வரும் பெண்கள் என்னை ஏன் காதலிக்கின்றார்கள்? அவர்களுடன் மென்மையாகப் பேசுகின்றேன். அவர்களின் பார்வை தடுமாறும் பொழுது ஒதுங்கிவிடுவேன். காதல்பற்றி பொதுப்படையாகப் பேச ஆரம்பிப்பார்கள். அப்பொழுதுகூட பொறுமையாகப் பதில் சொல்வேன். என் லட்சியத்தை யாரிடமும் மறைத்ததில்லை. அதற்குக் குறுக்காக வரும் எதிலும் என் மனம் செல்லாது என்பதையும் சொல்லிவிடுவேன். அப்படியும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெளிப்படையாக அவர்கள் காதலிப்பதைக் கூறிவிடுவார்கள். புத்திமதி கூறி அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன். இதுவரை இரண்டு பெண்களை அனுப்பிவிட்டேன். மூன்றாவது வந்திருப்பவளும் அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றாள். என் தவறு என்ன?

உடனே என்னால் பதில் கூற முடியவில்லை. அவனிடம் இன்னும் சில விபரங்கள் கேட்க வேண்டும். சிந்தித்துப் பின்னரே பதில் கூற வேண்டும் என்று நினைத்தேன்

பீட்டர், நாளைக்கு வீட்டுக்கு வா. நேரில் இதுபற்றி பேசலாம்.

பீட்டரும் வருவதாக்க் கூறினான்

என்னால் தூங்க முடியவில்லை. மனக்குரங்கு வலம் வர ஆரம்பித்த்து.

காதல், காதல் என்று சொல்கின்றார்களே, இதுதான் காதலா? சிந்திக்கும் பொழுது எத்தனை எத்தனை இடறல்கள் ?!

பணிக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி விதம் விதமான காதல் பிரச்சனைகள் ! அக்காலக் கதைகளிலும் காதல் பிரச்சனைகளில் செத்தவர்கள் எத்தனை பேர்கள் ! காதல் நிறைவேறாதவர்கள் அத்தனைபேர்களும் செத்து மடிந்தார்களா? காதலில் தோல்வியுற்று, பின்னர் மணமுடித்தவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர் இல்லையா?

இதனை எழுதி வரும் பொழுது போன ஆண்டு சென்னைக்குச் சென்றிருந்த பொழுது ஞானி நட்ததிய நாடகம் “ நாங்க “ நினைவிற்கு வருகின்றது. ஒன்பது பாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சனைகள். எல்லாம் தனிக் கதைகள். அவைகளில் ஒன்று காதல் பற்றி.

ஒரு இளைஞன் காதல் வேண்டித் தவிக்கிறான். அவனுக்க்கு ஒரு காதலி வேண்டுமாம். கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை அவன் வெளிப்படுத்தும் பொழுது மாறிவரும் மன நிலைகளை அர்த்த்த்துடன் விளக்குகின்றான்.

இக்காலப் பெண்களுக்கு அமைதியான ஆண்களைப் பிடிப்பதில்லை. சினிமாக் கதாநாயகர் போல் பேசத் தெரிந்தவன், சாகசம் செய்யத்தெரிந்தவனாக இருக்க வேண்டும். நல்லவனாக இருந்தால் அவன் அசடு. மக்கு. பெண்ணை நல்லவர்களால் ஈர்க்க முடியவில்லை. அவன் சொன்ன வசனம் இது

“நான் நல்லவன் சார். பொண்டாட்டி தவிர வேறு பெண்ணை நினைக்க மாட்டேன். நல்லாக் கவனிச்சுக்குவேன். அவ சொன்னபடி கேப்பேன். என்ன கேட்டாலும் சத்தியம் செய்து தரேன். யாராவது ஒரு பொண்ணு பார்த்துக் கொடுங்க சார்”

இதனை வேடிக்கை வசனமாக என்னால் நினைக்க முடியவில்லை. இப்பொழுது கூட என்னுடன் பழகும் சில இளைஞர்களுக்குத் திருமணமாகவில்லை. மிகவும் நல்லவர்கள். நல்ல சம்பாத்தியமும் இருக்கிறது. அவர்கள் யோக்கியமானவர்கள். ஆனால் இன்னும் மணமாகவில்லை.

யாரையாவது காதலியுங்கள் என்று இந்தக் கிழவியே சொன்னேன்

காதலிக்கத் தெரியாதாம். பெண்ணுடன் பழகும் பொழுது மரியாதையாகத்தான் பழக முடிகின்றதாம். இப்படி இருந்தால் இவர்களை மடத்தில் வைத்து கும்பிடலாமே தவிர வீட்டில் வைத்து கொஞ்ச எப்படித் தோன்றும்? காதல் பற்றி என்னை எழுதச் சொல்லும் அளவு முட்டாள்கள். வீடு என்றால் பூஜை அறையும் உண்டு அந்தரங்க வாழ்க்கைக்குப் படுக்கை அறையும் உண்டு. பழகுவதே ஒரு பெரும் கலை. காதலுக்கு மட்டுமல்ல. முதலில் பழகும் விதங்களை, மனித உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நான் சென்னையில் உள்ள என் உறவினர் ஒருத்தியுடன் பேசும் பொழுது அவள் ஒரு செய்தி கூறினாள்.

அவள் ஓர் விதவை. தன் ஒரே மகனை வங்கி கடன் பெற்று பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றாள். ஒரு நாள் அவன் மகன் தீடீரென்று ஓர் ஆசைபற்றி சொல்லி இருக்கின்றான். ஸ்கூட்டர் வேண்டும் போல் ஆசை வருகின்றதாம். தாயின் மனம் அதைக் கேட்டு வருந்தியது. எப்படியும் கடன் வாங்கியாவது வாங்கித் தருவதாகச் சொல்லி இருக்கின்றாள். உடனே தாயின் முகம் பார்த்த மகன் சொன்னதுதான் முக்கியம்

அம்மா, சும்மாத்தான் சொன்னேன். வண்டியெல்லாம் வேணாம். ஒரு வண்டியும் செல்போனும் இருந்தாப் போதும். பொண்ணுங்க உடனே சுத்தி வருவாங்க. முதலில் லிஃட் கொடுக்கணும் அடிக்கடி போனில் பேசணும் சேர்ந்து சுத்தணும். அப்புறம் ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிடலாம்னு சொல்லுவா. அப்புறம் சினிமா, பீச் என்று சுத்த கூப்பிடுவா. நீ கொடுக்கற காசு பத்தாது. முதல்லே பொய் சொல்லி காசு கேட்பேன். அப்புறம் உனக்குத் தெரியாம திருடுவேன். எதுக்கு இத்தனை பொய்யும் புரட்டும். முதல்லே படிப்பை முடிச்சு பாங்க் கடன் கட்டி முடிக்கணும். இதெல்லாம் வேணாம்

இத்தனையும் ஓர் கல்லூரி மாணவன் கூறியது. எல்லோராலும் இப்படி சிந்தித்துப் பேச முடியுமா?

பல வருடங்களுக்கு முன் அரட்டையுலகம் முதலில் புகுந்த காலத்தில் பல இளைஞ்ர்களின் தொடர்பு ஏற்பட்டது. ஆரம்பத்திலேயே அவர்கள் என் இயல்பைப் புரிந்து கொண்டனர். ஒருவன் என்னைப் பார்க்க விரும்பியிருக்கின்றான். இவர்கள் அவனைத் தடுத்துவிட்டனர். முதலில் எனக்குத் தெரியாது. ஆனால் பின்னர் எப்படியோ இச்செய்தியை அறிய நேரிட்டது. அதனைக் கேள்விப்படவும் கொதித்துப் போனேன். அவன் மட்டும் வந்திருந்தால் அவனை நான் என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது. செய்தியறிந்தால் மற்றவர்களூம் கொதித்துப் போவார்கள்

காதலர்கள் இருவர். அந்தப் பையன் ஓரளவுதான் வசதியானவன். சாதாரணமாக தோன்றிய காதல் ஊர் சுற்றி எப்பொழுதும் உல்லாசத்தில் நேரத்தைக் கழிக்கும் அளவு மாறினர். அவர்கள் விளையாட்டிற்குக் காசு போதவில்லை. பணம் வேண்டும். எப்படியும் பணம் வேண்டும். அவளே ஒரு வழி சொன்னாள். ஒரு ஆடவனுடன் சினிமாவிற்கு அவள் உடன் சென்றால் அதற்கு ஒரு விலை. கடற்கரைக்குச் சென்றால் அதற்கும் ஒரு விலை. இப்படி ஆரம்பித்தது இரவு விடுதிக்கும் செல்ல விலை பேசி காசு சம்பாதித்தனர். காதலன் தரகனானான். காதலி விலை பொருளானாள். சம்பாதிப்பதை இருவரும் சந்தோஷமாகச் செல்வழித்துப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களூம் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டனர். அவன்தான் என்னைப் பார்க்க வருவதாக சொன்னது.

இப்படியும் நடக்குமா, இது கற்பனையா என்று கேட்கிறீர்க்ளா? இது கதையல்ல நிஜம். எங்கோ ஒன்றிரண்டு நடப்பதால் சமுதாயமே இப்படி என்று பழி சுமத்தவில்லை. ஆனால் இது ஒரு வியாதி. பரவலாம். பரவாமலும் போகலாம். ஆனால் கொடுமையான நோய். காதல் என்று ஆரம்பித்து கண்டபடி திரிவதில் முடிவது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்காது. இதை மறைப்பதைவிட எட்டிப்பார்த்த அரக்கனை அடையாளம் காட்டுகிறேன்

பீட்டர் நல்ல உழைப்பாளி பெண்ணைக் கெடுக்க நினைப்பவன் அல்ல. ஆனாலும் மாறுதல் ஏற்படும் பொழுதே உறுதியாக நின்று அதனை மாற்ற முயற்சித்திருக்க வேண்டும். ஒன்று, இரண்டு என்று தொடர்ந்த பொழுது பெண்ணை வேலைக்கு வைப்பதைவிடுத்து ஓர் ஆண்பிள்ளையை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். அவனுக்குள் அவனையும் அறியாமல் ஓர் சபல நோய் இருக்க வேண்டும். அவனையும் அறியாமல் ஓர் பெண் காதலிக்கிறாள் என்று சொல்வதைக் கேட்பதை மனம் விரும்பியிருக்க வேண்டும். வெள்ளை வர்ணத்தில் ஓர் கரும் புள்ளி. இதனை அவனுக்கு நான் சொல்லியாக வேண்டும். கோபித்துக் கொண்டு வராமல் போனாலும் சரி. சொல்ல நினைப்பதைச் சொல்லியாக வேண்டும்.

மறுநாள் பீட்டர் வீட்டிற்கு வந்த பொழுது மனம் விட்டுப் பேசினேன். அவன் மென்மையாகப் பேசுவதைச் சொன்னான். கனிவுடன் அறிவுரை கூறியதாகச் சொன்னான். அப்படியும் சொல்லி இருக்கலாம். ஓர் பெண் எப்பொழுதும் அரட்டையடிப்பவனைத்தான் விரும்புவாள் என்று மட்டும் இல்லை. வாழ்க்கையில் கஷ்டப்பட்டும் பெண் இப்படி பொறுப்புள்ள ஒருவன் கணவனாக வந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றும் நினைத்து முயற்சியை இன்னும் தீவிரப்படுத்தலாம்.

நிலைமை மாறாது என்று புரிந்து ஒதுக்கிவிட வேண்டும். இது போன்ற விஷயங்களீல் ஆணோ,, பெண்ணோ தயக்கம் காட்டக் கூடாது. காதல் என்பது அத்துடன் முடிவதல்ல. திருமணம் என்று நினைத்தால் வாழ்க்கைபற்றி நினைத்தாக வேண்டும். குழம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. பீட்டரிடம் கண்டிப்பாகச் சொன்னேன். அவன் மவுனமாகத் தலையாட்டினாண்.

அவனுக்கு இன்னும் சில பிரச்சனைகள் இருக்கும் போல் உணர்ந்தேன். இந்த உரையாடல் நடந்த பத்து நாட்களில் என் தோழி புனிதவதி வீட்டில் ஓர் விசேஷம் நடந்தது. அரட்டை நண்பர்கள் எல்லோரையும் விருந்திற்கு அழைத்திருந்தார்கள்

பீட்டரும் வந்தான். வந்தது அவன் மட்டுமல்ல. அவன் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை அழிக்கும் கசப்பான சந்திப்பு

அடுத்து சொல்கிறேன். பீட்டரின் கதை மிகவும் பெரியது.

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://amazingpicturesofthebirds.blogspot.in/2011/12/love-birds.html

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க