வெளியூர் டூர் போகிறீர்களா – சில டிப்ஸ்

0

 

 

மோகன் குமார்

கோடை விடுமுறை ஆரம்பம் ஆகிடுச்சு. குடும்பத்தோடோ, நண்பர்களுடனோ டூர் போக திட்டமிடுகிறீர்களா? சில டிப்ஸ் இதோ:

முதலில் செய்ய வேண்டியது ரயில் டிக்கெட் புக் செய்வது தான். இப்போது பல நாள்கள் முன்பே டிக்கெட் முன் பதிவு செய்யலாம் என்பதால் ரயில் டிக்கெட் மிக சீக்கிரம் புல் ஆகி விடுகிறது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு முன்பே பிளான் செய்து டிக்கெட் புக் செய்து விடுங்கள். பின் ஏதாவது காரணத்தால் கான்சல் செய்தாலும், ரெண்டு நாள் முன்பு கான்சல் செய்து விட்டால் அதிகம் உங்களுக்கு நட்டம் ஆகாது.

இன்டர்நெட் மூலம் புக் செய்தால் confirm ஆன டிக்கெட் உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். வெயிட் லிஸ்ட் எனில், அது confirm ஆகா விட்டால், பயணம் துவங்கும் முன் அந்த டிக்கெட்டுகளை ரயில்வே நிர்வாகம் கான்சல் செய்து விடும். இதுவே ரயில்வே ஸ்டேஷன் கியூவில் நின்று வாங்கிய டிக்கெட் எனில் வெயிட் லிஸ்ட் கான்சல் ஆனால் குறைந்தது Unreserved-ல் பயணம் செய்ய அனுமதி உண்டு. TTR-ஐ பார்த்து கேட்டுக் கொண்டால், அவர் எங்கேனும் சீட் தரவும் கூடும்.

ஆனால் குடும்பத்துடன் செல்லும் போது confirm ஆன டிக்கெட் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது !

முடிந்த வரை காரில் வெளியூர் டூர் செல்வதை தவிர்த்து ரயிலில் செல்வது பாதுகாப்பானது. பின் அங்கேயே கார், ஆட்டோ இவற்றை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். என் அனுபவத்தில் இதுவே சிறந்தது

எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் இதுவரை பார்க்காத இடம் செல்வது நல்லது. சென்ற இடம் மறுமுறை மிக அதிக மகிழ்ச்சி தருவது குறைவே ( ஒரு சில exceptions இருக்கலாம் ). கோடை எனில் குளிர்வான இடங்கள் செல்ல திட்டமிடுவது நல்லது. அக்டோபர் மாதம் டில்லி, இந்தியாவின் பல பகுதிகள் செல்ல உகந்தது.

நீங்கள் போகும் ஊர் குறித்து முன்னரே நெட்டில் படித்து விடுங்கள். அந்த ஊர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் செல்லும் முன்னே நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொண்டு அதை அந்த ஊரில் இருக்கும் நபர்களிடம் தகுந்த நேரத்தில் பேச்சோடு பேச்சாக சொன்னால் அவர்கள் மிக மகிழ்வார்கள். மேலும் பல தகவல்களைத் தருவார்கள்

எந்தெந்த இடம் பார்க்க வேண்டும் என்பதையும் இணையம் மூலமே ஓரளவு லிஸ்ட் பண்ணி விட முடியும். பத்து இடங்கள் லிஸ்ட் செய்து வைத்தால் ஓரிரு இடங்கள் சிற்சில காரணங்களால் அங்கு சென்ற பின் பார்க்க முடியாமல் போகலாம். இடங்கள் லிஸ்ட் எடுக்கும் போதே அந்த இடங்கள் என்றைக்கு விடுமுறை எந்த நேரம் திறந்திருக்கும் போன்ற தகவல்களும் பார்த்து விடுவது உங்கள் டூரை சரியாக திட்டமிட உதவும்.

சிலர் மிக நிதானமாக போகும் ஊரில் ஓரிரு இடங்கள் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பார்கள். வேறு சிலரோ ஒரு இடமும் விடாமல் பார்க்க நினைப்பார்கள். இரண்டுக்கும் நடுவில் balancedஆக இருப்பதே எனக்கு தெரிந்த வரை சிறந்தது. அனைத்து இடங்களையும் பார்ப்பது நிச்சயம் சிரமம். அங்கு எந்தெந்த இடங்கள் அதிக விசேஷமோ அவற்றை மட்டும் பார்த்தால் நலம். உங்களுக்கு இருக்கும் அதீத ஆர்வம் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்க வேண்டும் அல்லவா?

தங்கும் ஹோட்டல்: பெரும்பாலும் சுற்றிக் கொண்டு தான் இருக்கப் போகிறோம். இரவு மட்டும் தான் ஹோட்டல் ரூமில் இருப்போம். எனவே பெரிய ஸ்டார் ஹோட்டல் தேர்ந்தெடுப்பது தேவை இல்லை. அதே நேரம் நிச்சயம் டீசன்ட் ஆன ஹோட்டல் அவசியம். இணையத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஹோட்டல்கள் பற்றி விரிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. அங்கு சென்று தங்கியோர் தங்கள் அனுபவத்தை www.indiamike.com போன்ற இணைய தளங்கள் தருகின்றன. இதன் Forum-களில் எந்த ஊர் போனால், எங்கு தங்கலாம், என்ன விசேஷம் போன்ற கேள்விகளும் அதற்க்கான விடைகளும் நேரடி அனுபவம் மூலம் பலர் பகிர்கிறார்கள். நாம் எப்படி ப்ளாக், Facebook-ல் ஆர்வமாய் உள்ளோமோ அது போல பயணத்தில் ஆர்வமுள்ள பலர் இங்கு தொடர்ந்து விவாதம் செய்த வண்ணம் இருப்பர். அவர்கள் அனுபவத்தை நாம் கேட்டு அறிந்து கொள்ளலாம்

குளிர் பிரதேசம் எனில் அதற்குத் தகுந்த சுவெட்டர் போன்றவை எடுத்துச் சென்று விடுவது நல்லது. முழுக்க உஷ்ணமான இடத்திலிருந்து மிக அதிக குளிர் பிரதேசம் செல்வதால் நமக்கு இவை அவசியம் தேவைப்படும். அங்கு சென்று வாங்கினால் பெரும் செலவு. எனவே சிரமம் பார்க்காமல் இங்கிருந்து எடுத்து சென்று விடுங்கள்.

சாப்பாடு: அந்தந்த ஊருக்கு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதை டேஸ்ட் செய்து பார்ப்பது வித்தியாச அனுபவம் தரும். அதே நேரம் டூரில் பொதுவாய் நிறைய சாப்பிடாமல் வழக்கத்தை விட சற்று குறைவான அளவு சாப்பிடுவது நல்லது. உணவு அதிகம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று போக்கு போன்றவை வந்து நாமும் என்ஜாய் செய்யாமல் பிறரும் நம்மால் வருந்தும் படி ஆகி விடும். கவனம் !

நிறைய அலைவதால் நிறைய தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆங்காங்கு மினரல் வாட்டர் வாங்கி குடிப்பது மிக முக்கியம். பலரும் போதுமான தண்ணீர் குடிக்க தவறுகின்றனர்.

காமிரா: அவசியம் காமிரா கொண்டு செல்வது நினைவுகளை பதிவு செய்து வைக்க உதவும். இதிலும் ஒரு அனுபவம். சிலர் காமிராவும் கையுமாய் எப்போதும் இருந்து இருக்கும் இடத்தை நன்கு கவனித்து என்ஜாய் செய்வதை தவற விடுகிறார்கள். இருக்கும் இடத்தை அனுபவிப்பதே முக்கியம். போட்டோ எடுப்பது போனஸ் தான். இதை நினைவில் கொள்வது அவசியம்

ஷாப்பிங் : செல்லும் ஊரில் என்ன வாங்கலாம், என்ன பொருள் எந்த இடத்தில் குறைவான விலையில் கிடைக்கும் போன்ற தகவல்களும் கூட இணையத்தில் கிடைக்கும், அல்லது அங்கு சென்ற பின், அங்குள்ள நபர்களை கேட்டும் தெரிந்து கொள்ளலாம். ஆட்டோ காரர்கள் போன்ற ஆட்களை கேட்டால் தங்களுக்கு எங்கு கமிஷன் கிடைக்குமோ அதை சொல்ல வாய்ப்புண்டு. எனவே ஹோட்டல் சூபர்வைசர் போன்ற ஆட்களிடம் அல்லது அந்த ஊரில் உள்ள நண்பர்களிடம் கேளுங்கள்.

ஷாப்பிங் செய்யும் போது உங்கள் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு சில பொருட்கள் வாங்கி வாருங்கள். வெளியூர் சென்றாலும் அவர்களை நினைவில் வைத்திருந்தீர்கள் என்று தெரிவிக்க தான் இந்த செயல் ! கூட்டு குடும்பங்களில் இந்த எதிர் பார்ப்பு அதிகமாய் இருக்கும் !

டூரில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். அதனை பெரிது படுத்தாமல் உடனே மறந்து, சமாதானம் ஆகி விடுவது நல்லது. மாறாக அவற்றை மனதில் வைத்து கொண்டு, சண்டையை பெரிதாக்கினால் பயணம் நரகமாகும்.

டூர் முடிகிற தருவாயில் உங்களுடன் வந்த அனைவரையும் எந்தெந்த இடம் மற்றும் அனுபவம் அவர்களுக்கு பிடித்தது என பேசச் சொல்வது எங்கள் வழக்கம். இது அனைவரின் ரசனையை அறிய உதவுகிறது என்பதோடு ஒவ்வொருவரும் நிஜமாகவே நாம் நன்கு என்ஜாய் செய்தோம் என்பதை உணரவும் உதவுகிறது !

வருடத்துக்கு ஒரு முறையேனும் இதுவரை செல்லாத இடம் எதற்கேனும் அவசியம் சென்று வாருங்கள் நண்பர்களே ! அந்த பயணங்கள் உங்களுக்கு இனிய நினைவுகளையும், அற்புத அனுபவங்களையும் தரும் !

படத்திற்கு நன்றி :

http://1.bp.blogspot.com/_AtDdfyFV8ok/TM3xLeUEU6I/AAAAAAAABG4/WfYq7GZiEkk/s1600/DSCN1050.JPG

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *