நான் அறிந்த சிலம்பு – 18

மலர் சபா

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை

நாட்டிய அரங்கின் அமைப்பு

நாடக நூலார் சொல்லி வைத்த
இயல்புகளினின்று மாறிடாது
நல்லதொரு நிலத்தைத்
தேர்ந்தே எடுத்தனர்
நாட்டிய அரங்கத்துக்கென்றே.

புனிதம் வாய்ந்த பெருமலையாம்
பொதிகை மலைப்பக்கங்களில்
நீண்டு வளர்ந்திடும் மூங்கிலதனில்
ஒரு கணுவுக்கும் அடுத்த கணுவுக்கும்
இடைப்பட்டிருந்த ஒரு சாண்
கொண்டேதான் வந்தனர்
அரங்கது அமைத்திட.

அரங்கமைப்பவன் உத்தமன்
தன் கைப்பெருவிரலில்
இருபத்து நான்கு வரும்படி அளந்து
அம்மூங்கில் வெட்டியே செய்தனன்
அரங்கமைக்கும் கோலினை.

(குறிப்பு: அளவை முறை:
அணு எட்டு = தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டு = இம்மி; இம்மி எட்டு = எள்ளு;
எள்ளு எட்டு = நெல்லு: நெல்லு எட்டு = ஒரு பெருவிரல்
உத்தமன் – அதிகம் உயரம் இல்லாத, குறைவான உயரம் இல்லாத நடுத்தர உயரமான உத்தமனிடம் பெருவிரல் அளவு எடுக்கப்படும்.
பெருவிரல் இருபத்து நான்கு = ஒரு கோல்)

மூங்கிலின்
ஏழுகோல் அகலமும்
எட்டுக்கோல் நீளமும்
ஒருகோல் உயரமுமாய்
அமைத்திட்டனர் அரங்கதனை.

உத்தரமாய் மேல்நிற்கும் பலகைக்கும்
தளமாய்க் கீழ்நிற்கும் பலகைக்கும்
இடையே இருந்த இடைவெளி
நான்கு கோல்.

அரங்கின்
உள் புக வெளிவரத்
தோதாய் இருந்தன
வாயில்கள் இரண்டு.

இங்ஙனம்
அழகுற அமைந்த அரங்கதன்
மேல்நிலை மாடத்தில்
வருணபூதங்கள் நால்வகை
சித்தரித்து வைத்தனர்
யாவரும் புகழும்படி.

(நால்வகை பூதங்கள்
வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன்)

ஆங்கிருந்த தூண்களின் நிழல்
அரங்கதன் கண்ணும்
அவையதன் கண்ணும்
வீழ்ந்திடா வண்ணம்
மாண்புறு நிலை விளக்குகளை
ஆங்காங்கே வைத்தனர்.

இழுத்திடும் போதினில்
ஒரு பக்கம் செல்லும்
ஒருமுக எழினியையும் (எழினி – திரை )
அரங்கின் பல பக்கங்களிலிருந்து
மேடைக்கு நடுவில்
பொருந்தும் வண்ணமாய்ப்
பொருமுக எழினியையும்
அவிழ்த்துத் தளர்த்துகையில்
மேலிருந்து கீழிறங்கி வரும்
கரந்துவரல் எழினியையும்
பாங்குறவே அமைத்தனர்.

ஓவிய வேலைப்பாடுகளுடன்
மேல் விதானக் கூரைதனை
ஒழுங்குறவே அமைத்தனர்.

புகழ்பெற்ற முத்துமாலை வகைகளாம்
தாமம் வளை மாலைகள்
அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.

புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன்
பொலிந்தே சிறந்தது நாட்டிய அரங்கது.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 95- 113 :
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html

படத்துக்கு நன்றி:http://nakedfaun.blogspot.in/2011/11/etsy-jewellery-review-amrapali-amrapali.html

About மலர் சபா

மதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். பாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும். Malar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க