மோகன் குமாரின் சட்டம் பற்றிய கேள்வி – பதில்
கேள்வி : ரவி, செங்கல்பட்டு
எனது தந்தை தற்போது உயிரோடு இல்லை. இறக்கும் முன் அவரது சொத்துக்கள் அனைத்தும் எனது அண்ணனுக்கும் எனக்கும் சரி பாதியாக சேரவேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டார். ஆனால் எனது அண்ணன் சொத்துக்கான அனைத்து பத்திரங்கள் மற்றும் லீகல் ஷேர் சர்டிபிகேட் உட்பட அனைத்தையும் தான் வைத்து கொண்டு, எனக்கு அவற்றின் நகலை கூட தர மறுக்கிறார். நான் என் தந்தையின் லீகல் ஷேர் சர்டிபிகேட் இன்னொரு காப்பி வாங்க முடியுமா? எனது அண்ணன் வெளி நாட்டில் வேலை செய்கிறார். தற்போது இந்தியா வந்துள்ளார். சொத்தில் எனக்கும் எல்லா உரிமையும் இருந்தும், எனக்கு சரி பாதி சொத்தை தர மறுக்கும் அண்ணனிடம் எப்படி சொத்தை கேட்டு வாங்குவது? இந்த விஷயத்தில் என்னிடம் எந்த கோப்புகளும் இல்லாமல் என்னால் வழக்கு தொடர முடியுமா?
பதில்: மோகன் குமார்
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஐந்து வயது வரை அண்ணன்-தம்பி; பத்து வயதில் பங்காளி ” என்று. எத்தனை அண்ணன் – தம்பிகளிடையே பங்காளி சண்டை வந்து சொத்துக்காக நீதி மன்றம் வருகிறார்கள் என்பது வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்தில் பணி புரிவோருக்கும் தான் தெரியும்.
உங்கள் விஷயத்தில் உங்களுக்கு எல்லா உரிமைகள் இருந்தும், அண்ணன் உங்களுக்கு சொத்தை தர மறுக்கிறார். தவறு முழுதும் அவர் மீது தான். இவ்விஷயத்தில் நீங்கள் சொத்தை பிரித்துத் தருமாறு உங்கள் அண்ணன் மீது ” பார்டிஷன் சூட் ” (Partition Suit) போட வேண்டும். இந்த வழக்கு தொடர, சொத்து சம்பந்தமான தாக்கீதுகள் கூட தேவையில்லை.
உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் முகவரி இவை இரண்டுக்குமான அடையாளங்கள் ( ரேஷன் கார்ட் போன்ற போட்டோ ஐடன்டிடி கார்ட் மற்றும் வீட்டு விலாசம் காட்டும் ஒரு தாக்கீது ) இவை இருந்தாலே போதும். உங்கள் அண்ணன் எல்லா முக்கிய தாக்கீதுகளையும் தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதால் உங்களால் அவற்றின் நகலை கூட சமர்ப்பிக்க முடியவில்லை என வழக்கில் சொல்லலாம். பிரச்சனை இருக்காது.
உங்கள் சொத்து எங்கு இருக்கிறதோ அந்த எல்லைக்குட்பட்ட சிவில் நீதிமன்றத்தில் (சொத்தின் மதிப்பை பொறுத்து முன்சீப் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்) வழக்கு தொடரவேண்டும்.
அண்ணன் மீது வழக்கு தொடர யோசனையாக இருந்தால் இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். அதிலும் அவர் சரி வரவில்லையெனில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழி இல்லை.
அவர் வெளிநாட்டில் உள்ளார் என்கிறீர்கள். இதனை நீதிமன்றத்தில் கூறி அவர் வெளிநாடு செல்வதற்குள் இடைக்கால உத்தரவு ( Interim Order ) வேண்டும் என கேட்டு வாங்கலாம். இப்படி வழக்கு இருக்கும் போது , வெளிநாடு செல்வது பிரச்சனையாகும் என்பதால் உங்கள் அண்ணன் இறங்கி வர வாய்ப்பிருக்கிறது
ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை ஒருவர் கஷ்டப்படுத்துகிறார். ” நீங்கள் செய்வது என்னை கஷ்டப்படுத்துகிறது” என நீங்கள் எதோ ஒரு விதத்தில் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு உரைக்கும். மாறாக நீங்கள் பேசாமல் இருந்தால் “உங்கள் உரிமைகளை மறந்து நீங்கள் தூங்கி விட்டீர்கள் “You have slept over your rights” என்று நீதிமன்றம் பின்னாளில் உங்கள் வழக்கை எடுத்துக் கொள்ளாமல் போகவும் வாய்ப்புண்டு.
மீண்டும் சொல்கிறேன்: இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலம் பேசிப் பாருங்கள். அதன்பின் விரைவில் வழக்கு பதிவு செய்யுங்கள்!