ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 3)

வெங்கட் நாகராஜ்

சென்ற பகுதியில் சொன்னது போல, இப்போது உங்களை ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறேன்.

இத் தொழிற்சாலை 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நமது ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இங்கு நான்கு தொகுதிகள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது முதலில் தொழிற்சாலையின் பிரதிநிதி ஒருவர் தயாராகும் வாகனங்கள் மற்றும் இதர விவரங்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார்.

பிறகு உள்ளே சென்று வாகனங்களின் பகுதிகள் தயாராகும் முறை, ஒவ்வொரு பகுதியும் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன, எப்படி உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டு முழு வாகனமாக உருவாகிறது என்பதை எல்லாம் பார்த்தோம்.

இங்கே 5/7.5 டன் Stallion Mk-III BS-II, 2.5 டன் LPTA 713/32 TC BS-II, 2 கிலோ லிட்டர் கொள்ளவு உள்ள Water Bowser, 5 கிலோ லிட்டர் கொள்ளவு உள்ள Water Bowser, கண்ணி வெடிகளில் இருந்து பாதுகாக்கும் வண்டிகள், குண்டு துளைக்காத வண்டிகள் என்று பல ரகங்களில் வாகனங்கள் தயாராகிறது.

ராணுவத்திற்கு மிக முக்கியத் தேவை வாகனங்கள். நாட்டின் எல்லைகளில் ரோந்து சுற்றி வரவும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் செல்லும்படியான வாகனங்கள் இருந்தால் தானே அவர்களால் நமது நாட்டினை அன்னியர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்?

தொழிற்சாலையை முழுவதுமாக சுற்றிப் பார்த்து விட்டு பின் அங்கு பணிபுரிபவர்களிடம் நன்றி கூறித் திரும்பும் போது நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின் நாங்கள் சென்ற இடம் நர்மதை நதியில் இருக்கும் மார்பிள் ராக்ஸ். அதன் எழிலைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

மீண்டும் சந்திப்போம்..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க