தேடிக்கொண்டிருக்கிறோம் …கிடைக்கவில்லை ,..!

தேவா

மகாத்மாவே !
உன் போராட்டத்திற்கு
உன் இதயத்தில் தோட்டாவினால்,
முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக நினைத்து
நீ துயில் கொண்டாய்,
உன் நினைப்புதான் பிழைப்பைக் கெடுத்தது,
நீ வெள்ளையரிடம் பறித்துத் தந்த சுதந்திரம்
பறி போய்த் தவிக்கின்றோம்,
அரசன் ஆண்ட காலம் காலாவதி ஆன பின்னும்,
மந்திரிகள் நாட்டை ஆளும் காலம் இது,
ராக்கட்டு விட்டு என்ன பயன்
பாக்கட்டில் பணம் இல்லையே ,
நீ மக்களுக்காக வாழ்ந்தாய்-இவர்கள் தம் மக்களுக்காக வாழ்கிறார்கள்
தேர்தலுக்கு முன் தெரிவார்கள்
தேர்தலுக்குப் பின் மறைவார்கள்,
இந்தியா ஏழை நாடா!! ஏழ்மையாக ஆக்கப்பட்ட நாடு
இவர்கள் கோடியில் புரள்வதால்
பலர் தெருக்கோடியில் வாழ்கிறார்கள்
மகாத்மாவே நீ வாங்கித்தந்த சுதந்திரத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறோம்,
இன்னும் கிடைக்கவில்லை
கிடைத்தவுடன் சொல்கிறோம் எழுந்து வா..

 

படத்திற்கு நன்றி: http://www.deshvidesh.com/Current_Issue/Desh-Videsh_January_2011/gandhiji-and-gita.html         

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேடிக்கொண்டிருக்கிறோம் …கிடைக்கவில்லை ,..!

 1. நல்ல நினைவூட்டல்! நம்மவர்க்கு
  ஆனால் நம்மவருக்கு மட்டுமே இந்த நினைவூட்டல் அவசியம்.
  அந்நியர்கள் காந்தி மகானை நிறையவே அறிந்து வைத்திருக்கிறார்கள்,
  போற்றுகிறார்கள், துதிக்கிறார்கள்.

  உமது கவிதையின் அதே சிந்தனையில் என்றோ நான் எழுதிய கவிதை:நம்புகின்றாயா? நம்புகின்றாயா?

  நம்புகின்றாயா? நம்புகின்றாயா?

  “சத்தியம் வெல்லும்” எனும் வாசகத்தை 
  நிச்சயமாக நீ  நம்புகின்றாயா?
  பொய்மையும் புரட்டும் தேசியம் ஆனபின்னும் 
  சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று 
  இன்னமும் கூட நீ நம்புகின்றாயா?

  ஆமென்பாய்!!
  நீ மேதாவி! பெரிய மேதாவி!
  உலகம் உனக்கொரு சுண்டைக்காய்!
  உன்னைப் போன்ற அறிவு ஜீவிக்கு 
  இங்கே என்ன  பெயர் தெரியுமா?
  பைத்தியம்! முழுப் பைத்தியம்!!
  உன் வேதாந்தத்தை உடைப்பில் போடு 
  மீண்டும் கேட்கிறேன் சொல்!
  மனிதத்துவம்  மரித்து மண்மூடிப் போனபின்னும் 
  “சத்தியம் வெல்லும்” எனும் வாசகத்தை 
  இன்னமும் கூட நீ நம்புகின்றா?

  தெரிந்து கொள்
  ஆத்மாக்களே இல்லாத வக்கிர உலகமிது
  இதில் மகாத்மா என்பதெல்லாம் மறக்கப்பட்ட சரித்திரம்
  காந்தியைச் சுட்டபோது அவர் சாகவில்லை 
  கண்ணாடிச் சட்டத்தில் சிறையிட்டே கொன்றுவிட்டார்கள்! பாவிகள்!!

  உண்மைஎன்றால் “என்ன விலை?” என்று கேட்கும்  உத்தம உலகமிது
  மீண்டும் யோசித்துச் சொல்
  “சத்தியம் வெல்லும்” எனும் வாசகத்தை
  இன்னமும் கூட நீ நம்புகின்றாயா?

  அவ்வை மகள்

 2. வணக்கம் !அவ்வை மகளுக்கு ,தங்களுடைய ,விமர்சனம் என்னை சிந்திக்க வைத்தது ,கூர்மையான எழுத்துக்கள் ,உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கும் .***தேவா***  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *