‘வல்லமை’யின் ஃப்ளிக்கர் குழுமம்

அன்பு நண்பர்களே,

ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு புகைப்படம் எளிதில் சொல்லி விடும். புகைப்படம் எடுத்தலென்பது ஓர் கலை மட்டுமல்ல, இனியதொரு பொழுதுபோக்குமாகும். நம்மைக் கவர்ந்த காட்சிகளைப் பதிவு செய்யவும், ஆவணப்படுத்தவும் இக்கலையை விட மிகச் சிறந்தது ஏதுமில்லை.

புகைப்படக்கலையில் ஆர்வமிக்க நண்பர்கள் ஒன்று கூடி, தத்தமது புகைப்படங்களைப் பார்வைக்கு வைத்து நிறை குறைகளை அலசிக்கொள்ளும் புகைப்படக்குழுமங்கள் இணையத்தில் நிறையவே உண்டு. இவற்றில் பங்கேற்பதன் மூலம் நம் திறமையை வெளிக்காட்டவும், மேலும் மெருகேற்றிக்கொள்ள முடியும்.

புகைப்படக்கலையில் ஆர்வமும் திறமையும் மிக்க நண்பர்களுக்காகவேவல்லமை என்ற புகைப்படக்குழுமம் நம் மின்னிதழ் சார்பாகவும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பொன்னெழுத்துகளில் மின்னிக்கொண்டிருக்கும் வல்லமை என்ற சொல்லின் மேல் சுட்டினால் ஒளிப்படக்குழுமத்திற்கான தளம் திறக்கும். இதில் சேருவதென்பது மிகச்சுலபம். ‘Join the group’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் இக்குழுமத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கிய பெட்டியொன்று திறக்கும். நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதாக பதிலளிக்க வேண்டும், அவ்வளவுதான்.

நிபந்தனைகள் பின் வருமாறு..

1. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு மூன்று படங்களை மட்டுமே குழுமத்தில் வலையேற்றலாம்.
2. படங்களை வலையேற்றியவர்கள் விரும்பினால் தாங்கள் ரசித்தபடங்களுக்குக் கருத்திடலாம்.
3. ஆபாசமான, மற்றும் நிர்வாணப் படங்களை வலையேற்றுபவர்கள் உடனடியாகக் குழுமத்திலிருந்து நீக்கப் படுவார்கள்.
4. கருத்துரையிடும்போது தனி மனிதத் தாக்குதல் கூடாது.
5. பிறர் மனம் புண்படும்படிச் சொற்களை உபயோகிப்பதையும், விரும்பத்தகாத சொற்களையும் தவிர்த்தல் நலம்.

ஆரம்பித்த உடனேயே “வல்லமை” புகைப்படக்குழுமம் 12 உறுப்பினர்களைப்பெற்று வெகு சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்து விட்டது. உறுப்பினர்களும் தத்தமது புகைப்படங்களை வலையேற்ற ஆரம்பித்து விட்டார்கள். புதிய உறுப்பினர்களும் சேர்ந்த வண்ணம் உள்ளனர். புகைப்படங்களைக் கண்டு களித்திட மட்டுமன்றி, இணைந்து செயல்பட வாரீர். குழுமத்தில் இடம் பெறும் புகைப்படங்களில் கண்ணைக்கவர்ந்தவை அவற்றின் உரிமையாளரின் அனுமதியோடு வல்லமை மின்னிதழில் வெளியிடப்படும் பொன்னான வாய்ப்பும் உண்டு.

குழுமத்தில் இணையவிருக்கும் வல்லுநர்கள் அனைவருக்கும் வல்லமையின் வாழ்த்துகள்.

 

அன்புடன்,

அமைதிச்சாரல்(சாந்தி மாரியப்பன்)

துணையாசிரியர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க