மூன்றாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

3

 

 

 

அண்ணாகண்ணன்

சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன் 2010 மே 16 அன்று தொடங்கிய வல்லமை மின்னிதழ், வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது. வாசகர்கள், படைப்பாளர்கள், செய்தியாளர்கள்… எனப் பலரின் அமோக ஆதரவுடன் முத்திரை பதித்து வருகிறது.

திருமதி பவளசங்கரி திருநாவுக்கரசு, நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து வல்லமை புதிய துடிப்புடன் எழுச்சி பெற்று வருகிறது. சாந்தி மாரியப்பன், கேப்டன் கணேஷ், தி.சின்னராஜ் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரின் வலுவான துணையுடன் துரிதமாக வளர்ந்து வருகிறது. இவர்களின் அயராத கூட்டு உழைப்பினால் சுதந்திர தினச் சிறப்பிதழ், தீபாவளி மலர், குழந்தைகள் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ், மகளிர் சிறப்பிதழ்… எனப் பல சிறப்பிதழ்களை வல்லமை இந்த ஆண்டில் கண்டது. ஒவ்வொரு சிறப்பிதழும் மிகச் சிறந்த படைப்புகளைக் கொண்டுள்ளன. அழுத்தமான, செம்மையான இந்தப் பங்களிப்புகளால் வல்லமை பெரிதும் வளம் பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் பற்பல புதிய பகுதிகளை வல்லமையில் தொடங்கியுள்ளோம். குழந்தைகளுக்காகச் செல்லம், பசிப் பிணி தீர சமையல் கலை, எதிர்காலத்தைக் கணிக்க ஜோதிடம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் வார ராசி பலன் மட்டுமின்றி, சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி பலன்களையும் வழங்கி வருகிறார். மேலும் கேள்வி-பதில்கள் பகுதியில் முனைவர் நாகபூஷணம், வழக்கறிஞர் மோகன் குமார் ஆகியோர் சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம், மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். பேரா.இ.அண்ணாமலையின் மொழியியல் பதில்கள், ஆழமான பார்வையையும் புரிதலையும் வெளிப்படுத்தி வருகின்றன.

இவை மட்டுமின்றி, ஆங்கிலத்தில் வரக்கூடிய செய்திகளையும் படைப்புகளையும் வெளியிடாமல் விலக்கி வந்தோம். அவற்றையும் உட்கொணர வேண்டி, ஆங்கிலப் பிரிவையும் வல்லமையில் தொடங்கிவிட்டோம். இனி, ஆங்கிலத்தில் வரக்கூடிய ஆக்கங்களையும் வல்லமை வெளியிடும். ஆயினும் அது, ஏதேனும் ஒரு வகையில் தமிழருக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. இத்துடன், தலையங்கம், வாசகர் கடிதம், நறுக் துணுக், தமிழ்த் தட்டச்சு, வண்ணப் படங்கள்… எனப் பல புதிய பகுதிகள், வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன.

மின்னூல்கள் என்ற புதிய பகுதியில் முனைவர் கி.காளைராசன் அவர்களின் திருப்பூவணப் புராணம் என்ற நூலினை அதன் 25 பகுதிகளுடன் முழுமையாக வலையேற்றியுள்ளோம். ‘திருவரங்கம் கோயிலின் வருட மஹோத்ஸவ கீர்த்தனைகள்’ என்ற நூலினை ஸ்ரீரங்கம் மோகனரங்கன், மின்னாக்கம் செய்யத் தொடங்கியுள்ளார். அதனை இசை வடிவில் ஷைலஜாவின் குரலில் வலையேற்றவும் திட்டம் உள்ளது. மேலும் பல நூகளை மின்னாக்கம் செய்திட, அன்பர்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை.

வல்லமையின் சார்பில் புதிய மின் குழுமத்தை (http://groups.google.com/group/vallamai), 2012 சித்திரை முதல் நாள் தொடங்கினோம். அதில் ஆரோக்கியமான பல விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பாரதியார் ‘நாட்டுக் கல்வி’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த தாகூரின் ஆங்கிலப் பாடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘விளக்கிலே திரி நன்கு சமைந்தது! மேவுவீர் இங்கு தீக்கொண்டு தோழரே!’ என்று ஆரம்பிக்கும் பாடல். இதனை வல்லமை குழும உறுப்பினர் பேரா.நாகராஜன் வடிவேல் பலவாறு முயன்று தேடிக் கண்டறி்ந்துள்ளார். 15-4-2012 அன்று இது தொடர்பான தேடலைத் தொடங்கிவைத்த கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன், “இது, பேரா. திரு. நாகராஜன் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமன்று, குழுமங்கள் இவ்வாறு நல்ல ஆர்வங்களின் வெற்றிக்கும் தளம் அமைக்க முடியும் என்பது குழுமம் என்ற இணைய கூட்டுறவுக்குக் கிடைத்த வெற்றியும் அல்லவா!” என்று குறிப்பிட்டுள்ளார். (காண்க: https://groups.google.com/forum/?fromgroups#!topic/vallamai/TgKFXmKdXco)

வல்லமையின் ஃபிளிக்கர் நிழற்படக் குழுமத்தை ( http://www.flickr.com/groups/1922937@N20/pool) 2012 மே 6ஆம் நாள் தொடங்கியுள்ளோம். புகைப்படக் கலையில் ஆர்வமிக்க நண்பர்கள் ஒன்று கூடி, தத்தமது புகைப்படங்களைப் பார்வைக்கு வைத்து நிறை குறைகளை அலசிக்கொள்ள இது உதவும். இந்தக் குழுமத்தில் பகிரப்படும் சிறந்த படங்கள், உரியவர்களின் அனுமதியுடன் வல்லமை மின்னிதழில் வெளியாகும், இக்குழுமத்தை அமைதிச்சாரல், நிர்வகித்து வருகிறார். வல்லமை அன்பர்கள், மேற்கண்ட இரண்டு குழுமங்களிலும் உறுப்பினராகச் சேர்ந்து, சிறப்பாகப் பங்களிக்குமாறு அழைக்கிறோம்.

இந்த வார வல்லமை விருது என்ற திட்டத்தின்படி, வாரந்தோறும் வல்லமையாளர் விருதினை வழங்கி வருகிறோம். இது, இணையத்தின் வழியே வழங்கப்படும் கௌரவ விருதாகும். வல்லமையாளர் ஒருவரைப் பாராட்டுவதன் மூலம், பலரின் ஆற்றலையும் வளர்ப்பதே நம் நோக்கம். குறிப்பிட்ட வாரத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்திய ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அறிவிக்கும் பொறுப்பினை விசாகப்பட்டினம் திவாகர் ஏற்றுள்ளார். ஏப்ரல் 23 – 29, 2012 என்ற வாரத்திற்கான முதல் விருதினைப் பெங்களூரைச் சேர்ந்த ராமலட்சுமி பெற்றார். அடுத்தடுத்த வாரங்களுக்கான விருதுகளை மறவன்புலவு க.சச்சிதானந்தன், அவ்வை மகள் பெற்றுள்ளனர்.

இவை அனைத்தின் தொடர்ச்சியாக, வல்லமை சார்பில் கட்டுரைப் போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளோம். இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி? என்ற தலைப்பினைத் தேவ் பரிந்துரைத்துள்ளார். இதில் வெற்று பெறும் கட்டுரையாளருக்குப் பரிசாக, இதற்கு ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை வழங்க இன்னம்பூரான் இசைந்துள்ளார்.

வல்லமையில் வெளியான பவளசங்கரியின் வெண்ணிலவில் ஒரு கருமுகில் என்ற தொடர் கதை, நம் தோழி இதழின் 2012 மே மாத இதழில் குறு நாவலாக அச்சாகியுள்ளது. வல்லமையில் வெளியான ஐயப்பன் கிருஷ்ணனின் பழைய நிலவு என்ற கவிதை, மல்லிகை மகள் இதழின் மே மாத இதழில் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியான படைப்புகளை அச்சிதழ்கள் வெளியிட்டு வருவதை இதன்வழி உணரலாம்.

வல்லமை மின்னிதழ் மேம்பாடு தொடர்பான முதல் சந்திப்பு, 2011 ஆகஸ்டு 15 அன்று சென்னையில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் சச்சி, விஜய திருவேங்கடம், ஸ்ரீரங்கம் மோகனரங்கன், பவளசங்கரி, பட்டர்ஃபிளை சூர்யா, தமிழ்த்தேனீ, காமேஷ் தம்பதியினர், திருமதி தி. சுபாஷிணி, அண்ணாகண்ணன் ஆகியோர் பங்கேற்றோம். இன்னம்பூரான், கவிதாயினி மதுமிதா ஆகியோர், இணையவழியே தங்கள் முகத்தோடும் குரலோடும் தோன்றி, ஆலோசனைகள் வழங்கினர். அடுத்து, 2012 மே 14 அன்று, பெங்களூருவில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. மும்பையிலிருந்து அமைதிச்சாரல், பெங்களூருவில் வசிக்கும் அண்ணாகண்ணன், வல்லமைக்குப் பங்களித்து வரும் ஐயப்பன் கிருஷ்ணன், ராமலட்சுமி, வா. மணிகண்டன் ஆகியோர் சந்தித்தோம். இந்தச் சந்திப்புகள், நமது அடுத்தடுத்த இலக்குகளைத் தீர்மானிக்க உதவிகரமாய் அமைந்தன.

வெங்கட் சாமிநாதன், நாகேஸ்வரி அண்ணாமலை உள்பட மகத்தான எழுத்தாளர்கள் பலரும் வல்லமைக்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள். பல புதிய தொடர்கள், இங்கே வெளியாகி வருகின்றன. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள்…. என ஒவ்வொருவரின் ஒவ்வொரு படைப்பும், வல்லமைக்கு அணி சேர்க்கின்றன. இவர்கள் எடுத்து வைத்த கருத்துகளும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களும் மிகப் பரவலும் ஆழமும் கொண்டவை. சுருக்கம் கருதி, இவர்களைத் தனித் தனியே குறிப்பிடாமல் விடுகிறோம். இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

இந்த இனிய படைப்புகளை வெளியிடுவதற்காக, இரவு பகல் பாராது, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்ட வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். மிக முக்கியமாக, ஆசிரியர் பவளசங்கரியும் அமைதிச்சாரலும் தங்களை இந்தப் பணிக்காக அர்ப்பணித்தார்கள் எனில் மிகையன்று. இவர்களின் ஊக்கமும் ஆக்கமும் உற்சாகமும் இல்லையேல், வல்லமை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. இவர்களுக்கு எமது தலைவணக்கம். அடுத்து, வல்லமைக்குத் தமது வழங்கியில் கட்டணமின்றி இடமளித்து, அதன் தொழில்நுட்பத் தேவைகளைத் தனியொருவராக இருந்து, முழுமையாகப் பூர்த்தி செய்யும் காமேஷ், நம் போற்றுதலுக்கு உரியவர். நமது வளரும் தேவைகளைக் கூர்ந்து கவனித்து, ஐயங்களை அகற்றி, உற்ற தோழராய் இவர் அமைந்தது, நமது பேறு. இவருக்கு நம் நன்றிகள்.

அடுத்து, வல்லமையின் ஆலோசகர்கள், நம்மைச் சிறந்த முறையில் அக்கறையுடன் வழிநடத்தி வருகிறார்கள். விஜய திருவேங்கடம், திவாகர் ஆகியோர், தக்க எழுத்தாளர்களையும் சான்றோர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி, உதவி வருகின்றனர். மறவன்புலவு க. சச்சிதானந்தன், இன்னம்பூரான் ஆகியோர், தமது படைப்புகள் மூலம் வல்லமைக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். இவர்களுக்கும் எம் நன்றிகள்.

நாம் இன்னும் எட்ட வேண்டிய இலக்குகள் ஏராளம் உள்ளன. ஆயினும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், அவற்றை விரைந்து எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அன்பிற்கினிய வாசகர்களின் வாழ்த்துகள் எமக்கு உண்டு. இன்னும் உவகையுடன், இன்னும் வேகமாக, இன்னும் அதிகப் பயன்களுடன்…… இதோ எமது பயணம் தொடர்கின்றது,

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மூன்றாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1.               வல்லமைக்கு வாழ்த்து…

    அகவை மூன்றை எட்டியதே
          அண்ணா கண்ணனின் வல்லமையே,
    மிகவும் சிறந்த மின்னிதழாய்
          மேலும் வளர்க வல்லமையே,
    பகலவன் தந்திடும் ஒளியதுபோல்
          பலமுகம் காட்டிடும் வல்லமையே,
    புகலரும் புதுமைகள் படைப்பதனால்
          புகழில் ஓங்குக வல்லமையே…!

                             -செண்பக ஜெகதீசன்…

  2. ஒரு திரைப்படம் வெற்றிப்படமாக அமைவதற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் உழைப்பு மட்டும் காரணமாகாது என்பது போல், வல்லமை மின் இதழின் வளர்ச்சி மற்றும் வெற்றி அதன் ஒட்டு மொத்த அங்கத்தினர்களின் கூட்டு முயற்சியே என்பதை திரு அண்ணாகண்ணன் அவர்கள் மிக அழகாக “மூன்றாம் ஆண்டில் வல்லமை மின் இதழ்” என்ற தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  புதிய படைப்பாளர்களை ஊக்கு விக்கும் அண்ணா கண்ணனின் முயற்சிக்கு மேன்மேலும் வல்லமை த்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  3. வல்லமை மேலும் சிறக்க என் உளமார்ந்த பாராட்டுகள். – என்.கணேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *