அவ்வை மகள்

விளையாட்டு மறந்த குழந்தைகள்

“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா”

எதிர்காலப் பாப்பாக்கள் நிலை கருதி தான் தீர்க்க தரிசியான பாரதி இப்படிப் பாடிப்போந்தாரோ என்னமோ!

மாலை வேளைகளில் குழந்தைகள் விளையாடிப் பார்ப்பது மிகவும் அரிதாகிப் போய்விட்டது. பள்ளி விட்டால் டியூஷன் என்கிற ஒரு பழக்கம் ஏற்பட்டுப் போன காரணம் ஒருபுறம் என்றால், வீடுகளைச் சுற்றியுள்ள இடப் பற்றாக்குறை இன்னொரு புறம்.

அதே போல உடன் விளையாடச் சரியான ஒத்த வயது குழந்தைகள் அருகில் இல்லாமல் போவது, மேற்பார்வை பார்க்கத் தோதான பெரியவர்கள் இல்லாது போவது, பாதுகாப்புக் கரிசனம், ஆகிய பல காரணங்களால் குழந்தைகள், வீட்டுச்சூழல்களில் வெளியே விளையாட வர முடிவதில்லை.

நிலைமை இப்படியென்றால், பள்ளி நேரங்களிலேயே குழந்தைகள் விளையாடுவதில்லை என்கிற நிலைமை உருவாகிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.

கல்விச் சீர்கேட்டால் இன்று நம் குழந்தைகளுக்கு உடல் ரீதியான, உள ரீதியான பிரச்சினைகள் நிறையவே! நமது கல்வியிலே ஏற்பட்டிருக்கிற மிகப் பெரிய பிரச்சனை இது..

ஆறாம் வகுப்பிலிருந்து விளையாட்டுக் கல்வி கட்டாயம் என்று சட்டம் இருப்பினும், விளையாட்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பினும், இவற்றை வெகு சாமர்த்தியமாகச் சமாளிக்கும் பள்ளிகளின் தராதரத்தைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் போதா.

ஒழுங்கான சட்ட திட்ட முறைமைகளைப் பின்பற்றி, தார்மீக இறையாண்மைகளைப் பின்பற்றி மாணாக்கர்கள் என்பவர்கள் எதிர்காலப் பிரஜைகள் என்பதை மனதில் கொண்டு கட்டப்படும் பள்ளிகளில் அசெம்ப்ளி எனப்படும் பிரார்த்தனைகள் மற்றும் பிற கூட்டங்களுக்காக உள் மைதானம் ஒன்றும், விளையாட்டுக்காக விசாலமான பெரிய மைதானம் ஒன்றும் இருப்பது மரபு.

நல்ல ஸ்தாபனங்கள், நல்ல அரசுப் பள்ளிகளில் இந்த அமைப்பு இன்னமும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் மிகப் பெரும்பாலான பள்ளிகளில் இந்த மரபு முறிந்து விளையாட்டு மைதானம் போயே போய் விட்டது.

கல்வியில் குழந்தைகளுக்கு விளையாட்டுக்கு இடமே இல்லை, கால அட்டவணையிலும் சரி, பள்ளியில் இட வசதியிலும் சரி. வாரத்துக்கு ஒரு பீரியட் விளையாட்டு என்று மிகக் குறைந்த அளவேயான தற்கால ஏற்பாட்டிலும், அந்தப் பீரியடைக் கணக்கு வாத்தியாரோ, அறிவியல் ஆசிரியையோ எடுத்துக் கொண்டு விட அடிக்கடி பி.டி. வகுப்புக்கு முழுமையான முழுக்குப் போடப்படும்.

ஒரு வேளை பி.டி. வகுப்பு நடக்கிறது என்றாலும் குழந்தைகளை ஏனோ தானோவென்று விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கும் சூழல் தான் உள்ளதே தவிர அங்கு முறையான விளையாட்டுக் கல்விப் போதனை இல்லை. பள்ளி விளையாட்டு விழா தப்பாமல் நடக்கும்; ஆனால் அதற்காய் நடக்கும் அனைத்துப் போட்டிகளுக்கும் குழந்தைகள் தமது சொந்த முயற்சியில் தான் தயாராக வேண்டும். எந்த கேமிற்கும், ஸ்போர்டிற்கும் போதனை இல்லை. பாடம் இல்லை, பயிற்சி இல்லை. பெற்றோரின் முயற்சியில், அல்லது குழந்தையின் இயற்கைத் திறனில் மட்டுமே போட்டிகளை ஜெயிக்க வேண்டும்.

நிறையப் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்றால், உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளியில் உடற்கல்வி தவிர மற்ற எல்லா பணிகளையும் செய்வார்கள். பள்ளி அலுவலகத்தில் வேலை செய்வார்கள் – லீவு எடுக்கிற ஆசிரியர்களின் வகுப்பிற்கு இடம் நிரப்பப் போவார்கள். பள்ளியில் அனைத்து எடுபிடி வேலைகளுக்கும் போவார்கள். பள்ளிக் காரியதரிசிக்கு வீட்டு வேலை செய்யப் போவார்கள்-பயண டிக்கட் வாங்கப் போவார்கள். சமயத்துக்கு, எடுப்புச் சாப்பாடு எடுக்கவும் போவார்கள்.

சில பள்ளிகளில் இன்னொரு தந்திரம் உள்ளது. பள்ளி நேரத்தை பி.டி. ஆசிரியர்கள் இப்படி ஓட்டிவிட்டு, பள்ளி தொடங்கும் முன்பு அல்லது பள்ளி முடிந்த பின்பு கராத்தேயோ அல்லது வேறு ஏதாவது ஒரு விளையாட்டோ என வகுப்பு ஒன்று நடத்துவார்கள். அதற்கு எக்ஸ்ட்ரா பணம் வசூலிப்பார்கள். அதுவும் அதில் ஆன்மாவை இழைய விட்டு எதுவம் சொல்லித்தரப்பட மாட்டாது. இதற்குக் கொண்டு வந்து விட்டுக் கூட்டிச்செல்வதற்கு எனப் பெற்றோர்கள் பிரத்யேக ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அது போன்றே கோடை விடுமுறைக்குப் பள்ளியை மூடிய பிறகு, சம்மர் கிளாஸ் என்ற பெயரில், காலை இரண்டரை மணி நேரம் என ஒரு மாதம் டென்னிஸ், பேஸ் பால், கிரிக்கட் இத்யாதி என ஏற்பாடு செய்து முன் பணம் மொத்தமாய் வசூலிப்பார்கள்.

பள்ளிதானே தெரிந்த இடமாயிற்றே எனப் பாதுகாப்பு கருதியும், குழந்தை ஆசைப்படுகிறது அல்லது குழந்தை ஏதோ ஒரு விளையாட்டை இப்போதாவது விடுமுறையில், முறையான வகையில் கற்றுக் கொள்ளட்டுமே என்ற நல்லெண்ணத்தில் பெற்றோர்கள் கேட்ட பீஸைக் கட்டி, சிரமம் பார்க்காமல் கூட்டிக்கொண்டு வந்து விட்டு (அல்லது ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்து) கூட்டிப் போவார்கள்.

ஒரு மாதம் என்ற பெயரில், மொத்தம் இருபத்தி ஆறு அல்லது இருபத்தி ஏழு நாட்களுக்கு தான் வகுப்புகள் இருக்கும்; இதில் எட்டு நாட்கள் வார இறுதி நாட்கள்– சனி ஞாயிறு அன்று விளையாட்டு வகுப்பு கிடையாது. மீதமுள்ள இருபது நாட்களில், ஏதேனும் இரண்டு விடுமுறை விடப்படும். மொத்தம் பதினேழு அல்லது பதினெட்டு நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த வகுப்புகளுக்கு வசூலிக்கப்படும் தொகையோ மிக அதிகமாக இருக்கும். பள்ளிக்குக் கொஞ்சம் தொகை தந்து விட்டு மீதி பி.டி. ஆசிரியரின் பாக்கெட்டுக்குப் போகும் இந்த பீஸ் பணம்.

இந்த வகுப்புகளில், மாணவர் கற்றுக் கொள்வது ஒன்றும் இல்லை; ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிற மாணவர்க்குக் கொஞ்சம் பயிற்சியாக இருக்கும்; ஆனால் ஒன்றுமே தெரியாமல் இவ்வகுப்புகளில் சேர்ந்து ஏதாவது ஒரு விளையாட்டைக் கற்றுக் கொள்ளலாம் எனப் போனால், அங்கு ஏமாற்றமே மிகும்.

ஏனெனில் இவ்வகுப்புகளில் ஆன்மாவை இழைய விட்டு எதுவும் சொல்லித் தரப்படுவதில்லை. டிராக்ஸ் போட்டு அல்லது அரை நிஜார் போட்டு பி.டி. வந்திருப்பாரே தவிர எப்போதும் செல்போனும் கையுமாய்ப் பவனி வருவார். அவருக்கு எடுபிடி செய்ய ஏற்கனவே ஒரு கொத்தாள் சித்தாள் வந்திருப்பார், அல்லது வந்திருக்கும் மாணவர்களில் ஒரு சிலரே அதனையும் செய்து தாமே விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதில் புதிதாய் விளையாட்டு கற்றுக் கொள்ள வந்த மாணவர்கள் பேக்கு பேக்கென, பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருப்பார்கள்.

“உனக்குக் கேம் வர்லடா! ஒதுங்குடா! டிஸ்டர்ப் பண்ற பாரு! நீ இருந்தா வெளையாட முடியாதுடா!” என விளையாட்டில் பாண்டித்யம் இல்லாத குழந்தைகளைக் கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகள் கத்தி மிரட்டி ஓரம் கட்டி விடுவார்கள். சாடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, விரட்டப்பட்ட அக்குழந்தைகள் மனம் வெம்பி, வெளியே சொல்ல முடியாத வெட்கத்தொடும் அவமானத்தோடும் ஓரமாய் நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான். தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, அவ்வப்போது வெளியே விழுந்த பந்தை ஓடிப்போய்ப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, அவர்கள் அடி சேவகம் செய்து கொண்டிருப்பார்கள்.

பல சமயங்களில், விளையாட்டு தெரியாத சக மாணவர்களைப் பிற மாணவர்கள் வெகு வக்கிரமமாக, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்புவதும் உண்டு, கழுத்தைப் பிடித்து வெளியே தரதரவென இழுத்துத் தள்ளுவதும் உண்டு.

இதெல்லாம் பி.டி.யின் பார்வையில் விழ வாய்ப்பில்லை – விழுந்தாலும் அதை அவர் பொருட்படுத்தப் போவதில்லை. தனது செல்போன் சம்பாஷணையை அவர் தொந்திரவு செய்து கொள்ள விரும்ப மாட்டார் அல்லவா!

இதற்கிடையில், “டேய் கொஞ்சம் இருங்கடா!” என பி.டி., நைசாக பக்கத்தில் டீக்கடைக்கோ டிபன் கடைக்கோ சென்று தாக சாந்தி செய்து கொண்டு வயிற்றைக் கொஞ்சம் சாந்தப்படுத்திக் கொண்டு, பழக்கம் இருப்பின் தம் அடித்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டு இளைப்பாற்றிக் கொண்டு வருவார். அதற்குள் வகுப்பு நேரம் முடிவுறும் தருவாய் வரும்.

“டேய்! கொஞ்சம் சீக்கிரமாப் புறப்படலாமா?” என்றபடி வகுப்பு இருபது நிமிடம் முன்னதாகவே முடிந்து விடும்.

“ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா”

பாரதி நீ இங்கு வந்து பாரப்பா! எளிய எங்கள் குழந்தைகள் வலிய குழந்தைகளால் நிந்திக்கப்பட்டும், விளையாட்டு ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டும் படும் பாட்டை!

பள்ளிகளில், இவ்வாறு விளையாட்டுக்கும் இன்ன பிற கையார்ந்த பணிகளுக்கும் (hands-on and crafts) இடம் இல்லை என்றாகிப் போனதால், தமது குழந்தைகள், இவ்விஷயங்களில் புலமை பெற வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவார்கள் என்கிற சைக்காலஜியை முதலீடாக்கிக் கொள்ள, அங்காங்கே முறை சார்பற்ற ஓராயிரம் சிறுபள்ளிகள், வகுப்புகள், உருவாகலாயின.

வீட்டின் முன்னறையிலும், மொட்டை மாடியிலும், புறம்போக்குத் திறந்த வெளியிலும் அவை வழங்கப் படலாயின. அதுவும் இந்தக் கோடை விடுமுறை வந்ததென்றால் இந்த முறைசாராப் பள்ளிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!

கல்வி எனும் மாபெரும் பணியில் பின்பற்ற வேண்டிய கொள்கைகளோ, குழந்தைகள் ஒன்றை எவ்வாறு கற்றுக் கொள்வார்கள் என்பது பற்றிய ஞானமோ, அனுபவமோ இல்லாத எவரும் கூட இந்தப்பள்ளிகளை – வகுப்புக்களை நடத்துவது கண்கூடு.

அலங்காரமான விளம்பரம் – அலங்காரமான பேச்சு – அலங்காரமான வரவேற்பு – இவற்றை நம்பிப் பெற்றோர்கள் இவர்களிடத்திலே மோசம் போகிறார்கள். இவ்வாறான ஒரு வகுப்பில் குழந்தையைச் சேர்த்து விட்டால், இந்த வகுப்பு முடியும் தேதிக்கு அடுத்த நாளோ, மறு நாளோ, அல்லது ஒரு வாரம் கழித்தோ இன்னொரு பயிற்சி வகுப்பு ஆரம்பமாகும் – இப்படியே – வியாபாரம் தொடரும் – பெற்றோரும் தொடர்ந்து ஏமாற்றப் படுவர்.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும், அவதியான நிலையை அம்சமாய்த் தனதாக்கிக் கொள்ளும் இந்த அற்புதக் கலை அறிந்த தனி மனிதர்கள் கல்வி எனும் பெயரில், தனக்குத் தெரிந்ததெல்லாம் உளறி, உருப்படியில்லாத எதை எதை எல்லாமோ குழந்தைகளின் மீது திணித்து அனுப்புகிறார்கள்.

வகுப்பிற்கான பீஸ் ஒரு புறம் என்றால் அந்த வகுப்பில் சேர்ந்த பிறகு அவர்கள் வாங்கச் சொல்கிற பொருட்கள் வேறு தனி.

வகுப்பு முடிந்த பிறகு இந்த வகுப்புகளால் விளைந்த உபரிப் பொருட்களை வீட்டில் வைத்துக் கொள்ளவும் முடியாமல் வெளியே எடுத்து எறியவும் முடியாமல் பெற்றோர்கள் தடுமாறும் நிலை சொல்லொணாத்துயர்.

இதிலே இன்னொரு விஷயம் என்னவென்றால் இவ்வாறு முறைசாரா வகுப்புகளை நடத்தும் வியாபாரிகள், பெற்றோர்களைத் தங்கள் வியாபாரத் தந்திரத்தில் மயக்கி அவர்கள் மூலமாக இந்த வியாபாரத்தை விஸ்தீரணம் செய்கிறார்கள். “நீங்க பாருங்க சார், அடுத்த வருஷம், இவ்வளவு தூரம் வரத்தேவை இல்லை. ஒங்க காலனியில ஒரு முப்பது பசங்களை கலெக்ட் பண்ணிடுங்க. நான் அங்கேயே ஏற்பாடு பண்ணிடறேன். நம்ம வீட்லயே (?????) போட்றுவோம். ஒங்க ரெண்டு பசங்களுக்கும் டிஸ்கவுண்ட்!! சரிதானே!!. பாரதியோட அம்மாவையே கோ-ஆர்டினேட்டராப் போட்றுவோம்!” (பாரதி அந்தப் பெற்றோரின் ஒரு குழந்தையின் பெயர்.)

இவ்வாறான கோடை வகுப்புக்களில், இன்னொரு வியாபாரத் தந்திரமும் நிகழ்கிறது: பல தேவையற்ற புத்தகங்களைப் பெற்றோர்கள் மீது – மிகக் குறிப்பாக, வசதி வாய்ப்பில்லாத அப்பாவியான பெற்றோர்களின் மீது திணித்து அவர்களுக்குப் பொருளாதார பாரம் ஏற்றிக் கடனாளியாகவும் ஆக்குகிறார்கள்.

நான்கு பேர் தாரளமாகப் புழங்க முடியாத வீட்டில், ஆங்கிலம் தெரியாத பெற்றோர்கள் உள்ள வீட்டில், சின்னஞ்சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் என்சைக்ளோபீடியாக்களும், தேவையற்ற சீரீஸ் வகைப் புத்தகங்களும், சில ஆங்கிலப் பத்திரிகைகளும் (ஆண்டுச் சந்தா) இவ்வாறு ஏமாற்றப் பட்டுத் திணிக்கப் படுகின்றன.

இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில புத்தகங்களை நூலகத்திற்குப் போய்த் தான் படிக்க வேண்டும். நூலகங்கள் அதற்காகவே இருக்கின்றன. குழந்தைகளுக்கு, மக்களுக்கு, இன்றியமையாத, அதே நேரத்தில், அதிக முதலீடு செய்து வாங்க வேண்டிய புத்தகங்கள் பொது நூலகத்தில் கட்டாயம் வைக்கப்படும். நூலகங்களின் நியதி இது. நூலகம் போய் வருவதில் குழந்தைக்குப் பழக்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். ஒரு நூலைப் படிக்க நூலகம் போகும் குழந்தை பல நூல்களைப் பார்க்கும், படிக்கும் வாய்ப்பு உருவாகிறது. நூலகத்திற்கு வரும் பல பேரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. பழகு பாங்கு வருகிறது.

நூலகம் சென்று வருவது என்பது கல்வியில் ஒரு முக்கியமான செயல்.

அதே நேரம், நூலகத்திற்கு போய்ப் படிக்க வேண்டிய புத்தகங்களை வீட்டில் வைத்துக் கொள்வதில் ஏகப்பட்டப் பிரச்சனைகள் எழுகின்றன. அவற்றை வாசிக்க நேரம் கிடைப்பது இல்லை – போதிய ஆங்கில மொழி வளம் இல்லை. புத்தகம் கடன் போகும், திரும்ப வராது – அல்லது கிழித்துக் கொண்டு வந்து தருவார்கள்.

இதனால் வீண் மனஸ்தாபம் எழும். அக்கம் பக்கத்தார், உறவினர் ஆகியோருடன் சண்டை வரும்.

மொத்தத்தில், போட்ட முதல் வீண் எனும் படி உபயோகம் இல்லாமல் நூல்கள் வீணாகிப் போகும்; அதுவும் இன்றையக் கால கட்டத்தில் புத்தகங்கள் பிளாட்டினம் – தங்க விலைக்கு விற்கின்றன.

ஆக, விளையாட்டோ, கைத்திறனோ கலையோ கற்றுக் கொள்ளப் போன குழந்தைகள் மீது, கடைசியில் புத்தகங்களே வந்து விழுகின்றன!

நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள்!

குழந்தைகளின் மீது கல்விப் பாரம் புத்தகப் பாரம் சுமத்துவது தான் கோடை விடுமுறையின் இலக்கா?

படிப்பு – புத்தகம் என்று – குழந்தைகளின் மீது ஏன் இப்படி சிலுவைப்பாடு?

கற்றுணைப் பூட்டிக் குழந்தைகளைக் கடலில் பாய்ச்சுவதேன்?
கல்லால் அடித்த கதையாய்க் குழந்தைகளைக் கல்வியால் அடிப்பதேன்?
குழந்தைகள் மனிதப் பிஞ்சுகள் அல்லவா? வயதிற்கேற்ற –கல்வி தானே சிறப்பு?

விளையாட்டுக்கள் மூலமாக, கைவினைகள் மூலமாகத் தாமே சுய முயற்சியில் இயல்பாய் இயற்கையாய் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் தயாரித்து ஏன் திணிக்கிறீர்கள்?

சொல்லிக்கொடுத்து, தட்டிக்கொடுத்து, பக்கத்தில் இருந்து, பொறுமை காத்து, மெல்ல மெல்லப் படிப்படியாய்க் கண்டுபிடித்துக் கற்குமாறு செய்ய வேண்டிய ஷரத்துக்களை ஏன் கட்டாயப் படுத்துகிறீர்கள்.

நெல்லிக்கனியின் துவர்ப்புக்குப்பின்னே, இனிப்பு வருவதை, நெல்லிக் கனி தின்று, அதன் பின் நீர் அருந்தினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் எனும்போது, அவ்வாறு இயற்கையாய் நிகழ ஏற்பாடு செய்யாமல், நீர் ஏன் அதை வீடியோ காட்டியோ – என்சைக்ளோபீடியா வாங்கச் சொல்லி அதன் மூலமோ சொல்லுகிறீர்கள்.

ஒரு கட்டு முளைக் கீரை வாங்கி வந்து ஆளுக்கொரு கீரை தந்து, ஆணிவேர் அமைப்பைச் சொல்லித்தர வேண்டிய நீங்கள், புத்தகத்தைப் பார்த்துப் படம் வரையச் சொன்னால் அந்தக் குழந்தை எப்படிக் கல்வியை –அறிவியலை அனுபவிக்கும்?

ஒரே ஒரு கீரைச் செடியை ஒரு குழந்தை தானே கையாளும்போது, தொட்டும் முகர்ந்தும் அக்கீரையின் பரிமாணங்களை அக்குழந்தை அனுபவிக்கும் போது ஆணிவேரைத் தாண்டி, ஆணித்தரமான வேறு பல ஞானங்களை அக்குழந்தை பெற முடியுமே அவற்றை என்சைக்ளோபீடியா புத்தகத்தின் படம் (அது வண்ணப் படமே ஆகினும்) தருமா?

செவ்வகம் சதுரங்களால் ஆனது; வட்டத்தின் விட்டம் நேர்க் கோடாகும்; இணைக் கோடுகளை ஒரு குறுக்குக் கொடு வெட்டும்போது உண்டாகும் கோணங்களில் எதிரெதிர்க் கோணங்கள் சமம், என்பது போன்ற பல கணிதக் கோட்பாடுகளை பாண்டி அல்லது உப்புக்கோடு எனப்படும் நொண்டியாட்டம் சொல்லித்தருமே! இதை உங்கள் என்சைக்ளோபீடியா புத்தகம் இயல்பாய் எளிமையாய் ஆனால் வலிமையாய்ச் சொல்லித்தருமா?

தாயத்தை வைத்துக்கொண்டு முக்கோண ஜியாமெட்ரியை (Trigonometry) அற்புதமாகக் கற்பிக்க முடியுமே! பரம பதத்தை வைத்துக் கொண்டு “patterns” கணிதம் சொல்லித்தர முடியுமே! பல்லாங்குழியை வைத்துக் கொண்டு “sequence” சொல்லித் தரமுடியுமே! எங்கே கோட்டை விட்டீர்கள் நமது கணித பாரம்பரிய விளையாட்டுக்களை!

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே எனக் கர்வம் பொங்கக் கூவிய இந்நாட்டில் எம் குலக் குழந்தைகள் மகிழ்வாய்க் குலவ முடியவில்லையே!! பாரம்பரியம் தெரியாது, தமிழ்ப்பாடல் அறியாது, குலவழியாய் வரும் விளையாட்டுக் கணக்கு தெரியாது புத்தகப்பொதி சுமக்கும் கழுதைகளாய் – எம் குலக் குழந்தைகள் உருமாறி – உறுதி மாறி – உளமும் – உடலும் – குதூகலிக்கும் நிலை மாறிப் போனதேன்?

கொளுத்தும் வெய்யிலில் எங்கள் பெற்றோர்கள் குழந்தைகள் கல்விக்காய் ஆலாய்ப் பறக்கிறார்களே! குழந்தைகள் வதங்கி வாடிப் போகிறார்களே! இந்தக் காட்சிகளை எவ்வாறு பொறுப்பது?

கையில் இருக்கும் நெய்யை மறந்து வீதியிலே வெண்ணைக்கலையும் சீரழிவை என்னென்பது?

உலகுக்கே கணிதம் தந்த நாட்டில், புராதனக் கல்வி முறைகளின் பாண்டித்யம் புறத்தே தள்ளப்பட்டிருக்கிறதே என்ன செய்ய?

நம் கும்மியிலும், கோலத்திலும், பரதத்திலும் இருக்கின்ற உயர்நிலைக் கணிதத்தை உலகமெங்கும் ஆய்வு செய்து அளவளாவிக் கொண்டிருக்கிறபோது, எங்கள் குழந்தைகள் ஏதேதொ அன்னியப் பெயரில், உள்ளத்தில் பொருந்தாத வழிமுறைகளில் கணிதம் போதிக்கப்படுகிறார்களே என்ன சொல்ல?

மொத்தத்தில் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க இயலாத துர்பாக்கிய நிலை நம்மிடையே ஏற்பட்டிருக்கிறதே! இந்தக் கொடுமை நிகழ்ந்தது நம் கல்வி ஏற்பாட்டின் குறைகளால் தானே!

இன்று குழந்தைகளிடம் விளையாட்டு இல்லையே – குதூகலம் இல்லையே. துள்ளல் இல்லையே – வயதுக்கேற்ற குறும்பு இல்லையே – வயதுக்கேற்ற அறியாமை (innocence) இல்லையே!!

மீந்த போதினிலே ஊடங்கங்களில் புதைக்கப்படுகின்றனரே எம் பிள்ளைகள்!
காட்சிப்பிழைகளில், சிந்தை தொலைவதால் எம் குழந்தைகள், தாமே எந்திரர்கள்!!

எப்போதும் ஒரு பாரத்துடன், எந்த கட்டளை எப்போது பிறப்பிக்கப்படும், அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் – என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் குழந்தைகளாவதற்கு முன்னரே வயதுக்கு வந்து விசாரம் ஏற்று அவர்கள் நவீன இயந்திரமாகிக் கெட்டுப் போவதற்குக் காரணம், அவர்களுக்கு மறுக்கப்பட்ட முறையான விளையாட்டுக்கள் தாமே!!

மேலும் பேசுவோம்..

 

படத்திற்கு நன்றி:http://www.freedigitalphotos.net/images/Playing_g398-African_Children_Playing_p43447.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாத கல்வியின் சுமை-17

  1. உங்கள் கோபம் நியாயமானது. கிட்டத்தட்ட, இந்தியக் குழந்தைகள் சார்பாக, ஒரு வழக்கறிஞர் போன்று நீங்கள் தொடுக்கும் கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டிய பெற்றோர், தொலைக் காட்சித் தொடர்களிலும், IPL போட்டிக் கொண்டாட்டங்களிலும் தம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமானதொரு கட்டுரை வல்லமையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடர், ஏதாவது பெரியதொரு விருதினை வெல்ல வாய்ப்பு இருக்கிறது, அப்படியொரு விருது வெல்லும் நோக்கத்துக்காக இது எழுதப் படவில்லையெனும் போதும். வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *