அதிகாலைப்பல்லவன்-கவிதைப்புதினம்( 9)
பிச்சினிக்காடு இளங்கோ
பல்லாவரம் நிறுத்தம்-9
காலத்தில் வரவேண்டிய
காதல்
காலம்கடந்து வந்ததால்
ஏற்கமுடியவில்லை
ஆனால்
அதற்காக
உடனே
மறுக்கவும் இல்லை
காதல் உணர்வு
சுகமானது என்பதில்
என்ன பொய்(அநியாயம்)
இருக்கிறது?
காதல் சுகத்தை
எந்த வயதும்
சுகிக்கத் தடையில்லை
காதல்
எப்போதும் வரலாம்
எந்த வயதிலும்
வரலாம்
காதல் இப்போது
எனக்கு வந்ததா?
என்பதைக்காட்டிலும்
எதிர்முனைக்கு
காதல் வந்தது உண்மை
இருவரும் மனம்விட்டு
பகிர்ந்துகொண்டோமா?
இல்லை
இல்லை
சோம்பலாய்க் கழிந்த
வாழ்க்கையைச்
சுறுசுறுப்பாக்கியது உண்மை
வேலைக்குப்போவதும்
வருவதும்
என்றிருந்த
வாழ்க்கை வழக்கத்தில்
விறுவிறுப்பை ஊட்டியது
உண்மை
கடிதம்தானே
கண்டுகளிப்போம்
எழுதுவதுதானே
எழுதிப்பார்ப்போம்
என்றிருந்ததும் உண்மைதான்
வரம்பை மீற
எண்ணம் இருந்ததா?
என்றால்
இம்மியும் இல்லை
வரம்பை மீறி
வார்த்தைகள் வந்ததா?
எள்ளளவும் இல்லை
நானும் மீறவில்லை-அந்த
மானும் மீறவில்லை
இருவரும் மீறவில்லை
எனினும்
கடிதம் எழுதும்
ஆசை தீரவில்லை
கடிதத்தை எதிர்பார்க்கும்
ஆவல் குறையவில்லை
ஆனால் ஒரு
நெருக்கடி சிக்கலில்
சிக்கியிருந்தேன்
ஓர்
இரும்பு வளையம்
என்மீது
விழ இருந்தது
ஓர்
அரசியல் சிக்கல்
ஏற்பட்டிருந்தது
அலுவலகத்திலும்
அதன் வெப்பம்
வீசியது
புழுக்கத்தில் நான்
புழுங்கிக்கொண்டிருந்த நேரம்
அந்த நேரம்
அனைத்திந்திய கைப்பந்துப்போட்டி
திருச்சியில் நடந்தது
கைப்பந்து வீராங்கனை
என்பதால்
காண இயலுமென நம்பி
கைப்பந்துப்போட்டிக்குப்
போயிருந்தேன்
என்னைத் தெரியும்
ஆனால்
எனக்குத்தெரியாது
அப்போதாவது
பார்த்துக்கொள்வோம்..…
ஆசை இருந்தது
இப்படிக்
கொஞ்சம் சபலமும்
கொஞ்சம் சலனமும்
இல்லாமல் இல்லை
நிச்சயமாய்க்
கொஞ்சும் சபலம்
கொஞ்சமும் இல்லை
பார்த்தால் பசிதீரும்
என்பது
எத்துணை அர்த்தமானது!
காந்தம் குறையாதது
காதல் கவர்ச்சி என்பது
எவ்வளவுக்கெவ்வளவு
எதார்த்தமானது!
காதல்
வராத வாழ்க்கை
ஒரு பாலை நிலம்
காதல்
வந்த வாழ்க்கை
மழைபெய்த
நன்செய் நிலம்
காதல்
உந்துசக்தியைத் தரும்
உற்சாக ஊற்று
எந்தப் புனிதனையும்
அசைக்கும் ஆற்றல்
அதற்கே உண்டு
சாதாரண வாழ்க்கையை
எவ்வளவு எளிதாய்
அசாதாரணமாய் ஆக்கிவிடுகிறது
காயப்படாத ஒரு
காதல் தேவைக்காக
சலனப்பட்டது மனம்
காரணம்
காலம் கடந்துவிட்டதே
என்ற கவலைதான்
எந்தக் கருமியையும்
மனம் கரையவைக்கும்;
பணம்கரைய வைக்கும்;
கரைக்கும்
அதிசய சக்தி
சுதந்தரத்துக்காக இல்லாவிட்டாலும்
சுய நலத்துக்காக
தியாகிகளாக்கிவிடும்;
தியாகங்கள் செய்யவைக்கும்
துறவிகளே
துறவைத்
துறக்கவைக்கும்
திறவுகோல்.
படத்திற்கு நன்றி
http://www.shutterstock.com/pic-604575/stock-photo-a-symbol-of-love.html