ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 6)

0

வெங்கட் நாகராஜ்

நர்மதை நதி ஓடிக்கொண்டிருக்கும் ஜபல்பூரில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு தான் நாங்கள் அடுத்து சென்றது. இதன் பெயர் “[D]துவாந்[Dh]தார் ஃபால்ஸ்”. ஹிந்தியில் ”[D]துவான்” என்றால் புகை. நர்மதா நதியிலிருந்து விழும் தண்ணீரின் நீர்த்திவலைகள் புகை போன்றதோர் தோற்றத்தினை ஏற்படுத்துவதால் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு “துவாந்தார்” எனக் காரணப் பெயர் வந்திருக்கிறது.

ஜபல்பூரிலிருந்து இருபத்தி ஐந்து கி.மீ தொலைவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் எங்களை இறக்கியதும் நீர்வீழ்ச்சி இருக்குமிடத்தை அடைய அனைவரும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்க ஆரம்பித்தோம்.

வழி நெடுகிலும் பாதையின் இரு மருங்கிலும் நிறையக் கடைகள். மார்பிளால் செய்யப்பட்ட பொம்மைகள், விதவிதமான வண்ணமயமான தொப்பிகள் எனத் திருவிழாக் காலக் கடைகளைப் போல இருந்தது. பக்கத்திலிருந்த கிராமங்களில் இருந்து வந்த மக்கள் நிறையப் பழங்கள், கிழங்குகள் போன்றவற்றையும் விற்றுக் கொண்டிருந்தனர்.

ஒரு வயதான பாட்டி ஒரு சிறிய மூங்கில் தட்டில் அவர்களின் சுருங்கிய தோலைப் போன்ற தோற்றத்தையுடைய பழத்தினை விற்றுக் கொண்டிருந்தார். “இது என்ன பழம் பாட்டி?” என்று நான் கேட்க, “बेटा, एह उबला हुआ बेर हे” எனச் சொன்னார். ’என்னய்யா இது திடீர்னு ஹிந்திக்குத் தாவினா, மறத்தமிழர்களான எங்களுக்கு எப்படிப் புரியும்?’ என்று கேட்பவர்களுக்கு, “அவித்த இலந்தைப் பழம்!’.

பொடிநடையாக நடந்து சென்று கொண்டு இருக்கும்போதே தூரத்தில் நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. அருகே நெருங்க நெருங்க, சில்லென்ற காற்று நம்மைத் தழுவ, ஆர்வத்தில் நடையை வேகமாகப் போட்டோம். நீர்வீழ்ச்சியே கண்டிராத தில்லி நண்பர்களின் அதிக ஆர்வத்தால் இருபதே நிமிடத்தில் நீர்வீழ்ச்சியை சென்றடைந்தோம்.

யார் மேல் உள்ள கோபமோ, பேரிரைச்சலோடு நர்மதா, நீர்வீழ்ச்சியாக மாறிக் கொட்டிக் கொண்டிருந்தாள். இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.

அமைதியாக இருக்கும் நதி ஆக்ரோஷமாக குதித்தோடியதை பார்த்து ரசித்துக் கொண்டும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுமிருந்தோம். நமது குற்றால நீர்வீழ்ச்சி போல இங்கே குளிக்க வசதி இல்லை. நின்று நீர்வீழ்ச்சியை ரசித்து வர வேண்டியது தான். எப்படி அது ஆக்ரோஷத்துடன் குதித்தோடியது என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா? அதனால் உங்களுக்காகவே அங்கே எடுத்த ஒரு காணொளி இங்கே!

http://www.youtube.com/watch?v=-ArMb37G1mM

நீர்வீழ்ச்சி விழும் உயரம் சுமார் முப்பது அடியாம். அரை மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்று இயற்கையின் அழகை ரசித்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மேலே போகும் போது நிறைய பேர் மூச்சு வாங்கியபடி போய்ச் சேர்ந்தோம். ஆனால் கஷ்டமில்லாமல் சீக்கிரமே இறங்கி விட்ட மாதிரி தோன்றியது.

நீர்வீழ்ச்சியும் பார்த்தாயிற்று! அடுத்தது? பெரிய படகில் ஒரு உல்லாசப் பயணம் போக வேண்டியதுதான். லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராக இருங்க. சரியா?

மீண்டும் சந்திப்போம்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *