இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………….. (8)

0

 சக்தி சக்திதாசன்

முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அன்பினியவர்களே !

அடுத்தொரு மடலுடன் இனிமையான சந்திப்பு.

இவ்வாரம் என் மனதைத் துரத்தும் விடயம் என்ன? ஜரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றைச் செவிமடுக்க நேர்ந்த போது அது எனது சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றியது .

அப்படியான அந்தத் தீர்ப்பு என்ன?

இத்தாலிய நாட்டுச் சிறையில் கொலைக்குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வரும் ஒரு குற்றவாளி தனக்கு தேர்தலில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் தரப்படாமை தனது மனித உரிமையைப் பறிக்கும் செயல் என்று இத்தாலிய அரசுக்கு எதிராக ஜரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கிற்கான தீர்ப்பே இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் ஒருவர் அவருக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். முடிவில் 12 நடுநிலைமையாளர்களின் முடிவின் படி அவர் குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்கப்பட்டு குற்றவாளியாயிருந்தால் நீதிபதியால் அவருக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது.

சிறைக்குச் செல்லக்கூடிய அளவிற்கு ஒருவர் குற்றம் புரிகிறார் என்றால் அதற்கு அர்த்தம் தான் என்ன? அவர் சமூகத்திற்கு எதிராக தர்மத்திற்கு எதிராகச் செயற்படுகிறார் என்பதுவே பெரும்பான்மையாக நடைபெறுகிறது.

அத்தகைய குற்றம் புரிந்தவருக்கு சிறையில் எத்தகைய அனுகூலங்கள் வழங்கப்பட வேண்டும்? அனுகூலங்கள் வழங்கப்படுவது அவசியமா? சிறைத்தண்டனை என்றால் என்ன? ஒருவர் சுதந்திரமாக அனுபவித்து வரும் அவரது வசதிகளை மறுத்து நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைப்பதன் மூலம் அவர் இனி அதேபோல் ஒரு குற்றச் செயலைப் புரிவதற்கு முன்னால் பலமாகச் சிந்திப்பார் எனும் எதிர்பார்ப்பிலே தரப்படுவதே சிறைத்தண்டனையாகும்.

இப்படியான குற்றச் செயல்களைப் புரிந்தவர்களுக்கு சிறையிலே சலுகைகள் வழங்கப்படுவது எவ்வகையில் அவர்கள் தங்கள் குற்றத்தின் தண்டனையை அனுபவிப்பதை உணர்த்தும் என்பது பலருக்கும் பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது.

இங்கிலாந்தில் இப்போது நடைமுறையிலிருக்கும் சட்டத்தின் படி விளக்க மறியலில் வைத்திருக்கும் கைதிகளைத் தவிர ஏனைய சிறைக்கைதிகள் வாக்களிக்க முடியாது எனும் நிலைப்பாடே சட்டமூலமாக இருந்து வந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்துச் சிறைக்கைதிகள் தமக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், தமக்கு வாக்குரிமை இலலாதது தமது அடிப்படை மனித உரிமைகளை மறுதலிக்கும் செயலென்றும் கூக்குரல் எழுப்பினார்கள்.

2005ம் ஆண்டு ஜரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தினால் இங்கிலாந்துப் பாரளுமன்றத்தினால் சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைச்சட்டம் மனித உரிமைக்கு எதிரானது என்று தீர்ப்பளித்திருந்தார்கள்

அவர்களது அப்போதைய கூக்குரலை அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் எதிர்த்தாலும் ஒரு சிலர் அவர்களுக்காக குரல் கொடுத்திருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு 2011ம் ஆண்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமை அளிக்கத் தேவையில்லை என்னும் வாதம் 234 க்கு 22 என்னும் வாக்கு வித்தியாசத்தினால் ஆதரிக்கப்பட்டது.

ஐரோப்பிய மனிதஉரிமை நீதிமன்றத்தின் தீர்ப்புகளை, அது சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் அரசு அமுல் படுத்தியதா என்று உறுதிப்படுத்தும் சபை, கடந்த வருடம் இங்கிலாந்து கூட்டரசாங்கம் சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமை அளிக்கும் வண்ணம் தமது சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பணித்தது.

அதை முற்றாக எதிர்த்த இங்கிலாந்து அரசு அதற்கு எதிராக ஐரோப்பிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையிலேயே இப்போது இந்த இத்தாலியக் கைதியின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு இங்கிலாந்து அரசாங்கத்திற்கு சார்பாகவே அமைந்துள்ளது எனலாம். எப்படி என்கிறீர்களா? வழக்குப் பதிவு செய்திருந்த இத்தாலிய சிறைக்கைதிக்கு வாக்குரிமை கொடுக்கப்படாதது அவரது மனித உரிமைக்குப் புறம்பானது அல்ல எனத் தீர்ப்பளித்த நீதிபதி, இச்சம்பவத்தில் மேல்முறையீடு செய்திருந்த இங்கிலாந்து அரசாங்கம் தனது பாராளுமன்றத்தில் தமக்கு உகந்த வகையில் சிறைக்கைதிகளின் வாக்குரிமை பற்றி தீர்மானிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதைப்பற்றிய பலவிதமான சர்சைகள், விவாதங்கள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளன. குற்றம் செய்தவர்கள் தமது மனித உரிமையை எதிர்பார்க்க முடியாது. எனவே அவர்களுக்கு வாக்குரிமை பற்றி பேசவே தேவையில்லை என்கிறார்கள் ஒரு சாரார்.

மற்றுமொரு பகுதியினர் ஒரு குற்றவாளியைச் சிறையில் அடைப்பது அவரைத் திருத்தி நல்வழிப் படுத்தி, சமூகத்தில் இணைப்பதற்கே. அவருக்கு சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் வாக்குரிமை இல்லாதது, அவரை மனோரீதியாக தனிமைப்படுத்தி சமூகப்பிணைப்பிற்கு வழிவகுக்கும் செயலுக்கு குந்தகம் விளைவிக்காதா என்கிறார்கள்.

“சிறைக்கைதிகள்” எனும் ஒரே பதத்தினுள், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அனைவரையும் வகைப்படுத்த முடியுமா? அரசியல் குற்றங்களுக்காக சிறை சென்றவர்கள் இருப்பார்கள்.  தமது கொள்கைவழி நின்று ஏதாவது ஒரு சட்டம் தர்மத்திற்கு முரணானது என்று அடம்பிடித்ததால் சிறை செல்பவர்கள் உண்டு. தனது மீது விதிக்கப்பட்ட வரி நியாயமானதல்ல என வரியைச் செலுத்தாமல் சிறை சென்றவர்கள் இருக்கலாம். ஆக மொத்தம் அனைவருமே பாரதூரமாக மற்ற ஒருவரை ஏதாவது வகையில் பாதிக்கும் குற்றச் செயல்களைப் புரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவர் புரிந்த குற்றத்தையும் அதன் தராதரத்தில், சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து தீர்ப்பு வழங்கும் போது  அவருக்கு வாக்குரிமை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று தீர்மானிக்கும் வகை ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது

எது எப்படி இருப்பினும் ஒருவர் புரிந்த குற்றத்தின் அடிப்படையில் அவருக்குத் தீர்ப்பு வழங்கும் நீதிபதி அவரது வாக்குரிமை பற்றியும் நிர்ணயிக்கலாம் என்னும் வாதம் பொதுவாக வைக்கப்படுகிறது.

இதிலொரு அதிசயம் என்னவென்றால் குற்றவாளியின் மனித உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் ஒருவரும், குற்றம் யார்மீது  இழைக்கப்பட்டதோ அவரைப் பற்றிச் சிந்தித்தாகத் தெரியவில்லை.

கொலையாளிக்கு வாக்குரிமை கொடுக்கலாம்…….    கொலையுண்டவருக்கு யார் வாக்குரிமை கொடுப்பார்கள் ?

மீண்டும் ஒரு மடலுடன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

புகைப்படங்களுக்கு நன்றி : பி.பி.ஸி உட்பட பல இணையத் தளங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.