அதிகாலைப்பல்லவன்-கவிதைப்புதினம்-10
மாம்பலம் நிறுத்தம்-10
மயக்கத்தில் சுழலவைக்கும்
மந்திரக்கோல்
அன்றாடப்பொழுதை
அதிசயமாய் ரசிக்கவைக்கும்
ராட்சச தேவதை
பாறையிலும்
நீருற்றைக்காணும்
உளவியல் கருவி
பகுத்தறிவு வாதிகளையும்
பக்தர்களாய் மாற்றிவிடும்
புவி ஈர்ப்புச்சக்தியை
நியூட்டன்
புரிந்துகொள்வதற்குமுன்
அறிந்துவைத்திருந்த
மன ஈர்ப்புச்சக்தி
இப்படியெல்லாம்
காதலைப்பற்றிச் சொன்னாலும்கூட
இன்னும்
எப்படியெல்லாமோ சொல்லமுடியும்
யாரும்
கரைகண்டுவிட முடியாத
அகத்துறை
மனம்
ஆடும்துறை
மயிலாடுதுறையும்
குயில்பாடுதுறையும்
அதுதான்
காலம்
நேற்று
இன்று
நாளை என்று
ஓடிக்கொண்டிருப்பதுபோல்
காதலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்தத் தீராநதியில்
அவரவர்
ஆசை தீரும்வரை
குளித்து வெளியேறுகிறார்கள்
அந்தத் தீராநதியில்
அவரவர்
முடிந்தவரை முயன்று
தாகம் தீர்க்கிறார்கள்
இறங்காமல்
கரையிலேயே நின்று
கண்கழுவிக்கொண்டவர்களும்
உண்டு
ஆகா இந்தநதி
ஆகாது என்றும்
ஆழமானதென்றும்
அச்சப்பட்டவர்களுமுண்டு
அந்தக் கனமழையில்
நனைந்தவர்களே அதிகம்
குடைபிடித்துக்
கொஞ்சம் நனைந்துகொண்டவர்களும்
சாரலோடு தப்பித்தவர்களும்
குறைவு
ஆனால்
மழையை விரும்பாதவர்கள்
யாருமில்லை
என்வாழ்க்கையில்
இது
இரண்டாவது தென்றல்
முதல்முறையும்
ஒரு
தென்றல்தான்
இரண்டு முறையும்
என்னிடமிருந்து
எதுவும் தொடங்கப்படவில்லை
நான் தொடங்கியிருந்தால்
நிதானமிழந்திருப்பேன்;
நிம்மதியிழந்திருப்பேன்
புயல் தீண்டிய
மரங்களென
என்வாழ்க்கையும் ஆகியிருக்கும்
எல்லாம்
என்னை நோக்கி
வீசிய தென்றல்களே
தொடக்கப்புள்ளி
நானாக இல்லை
தொடும் புள்ளியாக
நானிருந்தேன்
தொடங்கும் புள்ளியாக
நானில்லாததால்
தொடரும் வலிமை
எனக்கில்லை
எந்த
விசைச் சுழற்சியிலும்
நான்
வீழ்ந்துவிடவில்லை
தொடரும் தென்றலை
விலக்க விரும்பாததால்
தென்றலிடமிருந்து
விலக விரும்பாததால்
தொடரும் தென்றலோடு
தொடர நினைத்ததால்
ஜன்னல் கதவுகள்
திறந்தே இருந்தன
இது
நீளவும் கூடாது
இதை
நீட்டிக்கவும் கூடாது
மனோதர்மம்
உறுத்திக்கொண்டே
இருந்தது
பக்குவமாகவே
திருத்தவும் வேண்டும்
திருந்தவும் வேண்டும்
அவசரப்படுவதால்
நிகழும் மாற்றங்கள்
நிம்மதியைத் தருமா?
நிலவும் நிம்மதியை
இழக்க வேண்டுமா?
அந்த
நிலவும்
நிம்மதியை
இழக்கவேண்டுமா
மன ஊஞ்சலில்
ஆடிக்கொண்டிருந்தேன்
மவுனமாகவே
வேர்த்துக்கொண்டிருந்தேன்
வீட்டுக்கும் கடிதம்
வந்ததால்
விளைந்த கொதிப்பை
விவரித்தேன்.
படத்திற்கு நன்றி
http://caplinlfkrigsman.blogspot.in/2010/06/symbol-of-love.html