சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-10)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

நாட்கள் வேகமாக உருண்டோடின. மனதில் ஆயிரம் டன் துக்கங்களைச் சுமந்து கொண்டு அவர்கள் மங்கையைப் பார்க்க ஆஸ்பத்திரி வந்து போனார்கள். முகவாட்டத்தை மறைக்கவும் முடியாமல், கண்ணீரும் வெளியே வராமல் சாதாரணமாகப் பேச அவர்கள் பட்ட பாடு இருக்கிறதே? அம்மம்மா! அதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அதுவும் மங்கை தன் கணவனைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் இவர்கள் மனதில் ஒரு போராட்டமே நடந்தது. எல்லாரையும் விட ரொம்பப் பாடு பட்டவன் நிகில் தான் பாவம்! சிறு பையன் தானே? எப்படியோ ஒரு வழியாகச் சமாளித்தார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் மங்கையை வீட்டுக்கு அழைத்துப் போய் விடலாம் என்று சொல்லி விட்டார்கள்.

இப்போதெல்லாம் ப்ரியா கல்லூரிக்கும், நிகில் ஸ்கூலுக்கும் போவதில்லை. வீட்டிற்கு வருமானம் வேண்டுமேயென்று அவர்கள் வேலை தேடிக் கொண்டார்கள். ப்ரியாவுக்கு ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ரிசப்ஷனிஸ்ட் வேலை கிடைத்தது. சம்பளம் 3000 ரூபாய். காலை ஒன்பது முதல் சாயங்காலம் 6 வரை ஆபீஸ். ஒரு பெண்மணியே நடத்துவதால் பாதுகாப்பாக இருக்கும் என்று அதில் சேர்ந்தாள் ப்ரியா.

அந்தப் பெண்மணியின் வீட்டிலேயே ஆபீஸ் இருந்ததால் அவளுடைய தொந்தரவு சகிக்க முடியாமல் போனது ப்ரியாவுக்கு. இன்ன வேலை என்று இல்லை எதை வேணுமானாலும் சொல்லுவாள். கூட்டிப் பெருக்குவது, சுத்தம் செய்வது எல்லாமே ப்ரியாவின் தலையில்தான். ஆளற்ற மதிய நேரங்களில் அந்தப் பெண்மணி உறங்கும் போது அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்கிற கூடுதல் பொறுப்பும் சேர்ந்தது. வீட்டிலிருந்து எடுத்துப் போகிற தயிர்சாதத்தைச் சாப்பிடக் கூட நேரமிருக்காது ப்ரியாவுக்கு. கடைக்குப் போவது, காய் வாங்குவது, கரண்டு பில் கட்டுவது என எல்லாவற்றிற்கும் ப்ரியாவை உபயோகப் படுத்திக் கொண்டாள் அவள் எஜமானி. ப்ரியாவும் இது பற்றி யாரிடமும் ஒன்றும் சொன்னதேயில்லை. சாயங்காலம் 7 மணி வாக்கில் வாடி வதங்கி, வரும் ப்ரியாவைப் பார்க்க மாமிக்கு அடி வயிற்றிலிருந்து துக்கம் பீறிட்டு வரும். “ஆண்டவா! ஒனக்குக் கண்ணில்லையா? ஏன் இந்தக் கொழந்தைகளைப் பிடிச்சு வாட்டறே? என்பாள்.

ப்ரியாவின் நிலை இதுவென்றால் நிகிலின் நிலை இதை விட மோசம். அவன் வயசுக்கு அவனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? எப்படியோ ஒரு ஆபீசில் எடுபிடி வேலையில் நுழைந்து விட்டான். மாதச் சம்பளம் 1500 ரூபாய். அங்கே அவனைப் படு மோசமாக நடத்தினர். சிகரெட் வாங்குவதற்கும், டீ வாங்குவதற்கும் அவன் மாடிப்படிகள் ஏறி ஏறி இறங்கினான். என்ன செய்தும் வரும் வருமானம் போதவில்லை என்பதைக் கண்டு கொண்டு வேறு வழியில்லாமல் ஒரு மெக்கானிக் ஷெட்டில் வேலைக்குச் சேர்ந்தான்.

அதன் பிறகு அவன் வாழ்க்கை நரகமானது. நிகில் ஏதாவது சிறு தவறு செய்தால் கூட சீஃப் மெக்கானிக் இவன் காதைப் பிடித்துத் திருகுவதும், கன்னத்தில் அடிப்பதுமாக இருந்தான். அது போதாதென்று வேண்டுமென்றே கஷ்டமான வேலைகளைச் செய்யச் சொன்னான். அதையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ள முடிந்தது நிகிலால். ஆனால் அங்கே அவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகளைக் கேட்கச் சகிக்காமல் எத்தனையோ நாட்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறான். ஆனால் மாதம் பிறந்தால் சம்பளம் 3000 ரூபாய் வருவதால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான் நிகில்.

மாமியும் சும்மா இல்லை, தன் பங்குக்குப் பெரிய பணக்கார வீடுகளுக்குச் சமையல் செய்யப் போனாள். எல்லோரும் கொண்டுவரும் பணத்தை வைத்து எப்படியோ சமாளித்தார்கள். நித்திலாவை மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பினார்கள். அது கூட இவர்கள் படும் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு “அத்தை நானும் வேணா ஸ்கூலுக்குப் போகாமே நின்னுடட்டுமா? அப்புறமா என் பொம்மையெல்லாத்தையும் வித்தா நெறையப் பணம் கிடைக்கும்மில்லே? அதை வெச்சு நாம சந்தோஷமா இருக்கலாம் இல்லே?” என்றது. “ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு “இப்பல்லாம் இந்த வீட்டுல யாருமே சிரிக்க மாட்டேங்கறாங்க! மாமி. அத்தை கதை சொல்லாமே படுத்ததும் தூங்குது, அண்ணன் முன்னெல்லாம் என் கூட விளையாடுவான், டியூஷன் வருவான். இப்போ என்னடான்னா எப்பப் பாத்தாலும் உர்ருன்னு இருக்கான், சிரிக்கக் கூட மாட்டேங்கறான்” என்ற நித்திலாவை இழுத்து அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள் மாமி.

ஆயிற்று மங்கை வீட்டுக்கு வந்து நான்கு மாதம் ஓடி விட்டது. இன்னும் ஒரு மாதம் போனால் அவளுடைய இதயம் எந்த அதிர்ச்சியையும் தாங்கும் பலம் பெற்று விடும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். கண்ணை இமை காப்பது போல மங்கையைப் பாதுகாத்தாள் மாமி. ப்ரியாவும் காலேஜுக்குப் போவது போலவே வேலைக்குக் கிளம்பினாள். நிகிலும் ஸ்கூல் யூனிஃபார்மில் வீட்டிலிருந்து கிளம்பி, மெக்கானிக் ஷெட்டில் வந்து உடை மாற்றினான். அதே போல் வீட்டுக்குப் போகும் போதும் ஞாபகமாக யூனிஃபார்ம் அணிந்து கொண்டு சென்றான். மாமி தான் இவர்களைப் பார்த்துப் புழுங்கினாள். எப்படி இருந்த குழந்தைகள் இன்று இப்படி ஆகி விட்டார்களே! என்று மனம் சாம்பிப் போனாள்.

மங்கை ஆஸ்பத்திரியிலிருந்து வந்த அன்றே “ஏன் ப்ரியா மொகமும், நிகில் மொகமும் ரொம்ப வயசானா மாதிரி இருக்கு? கண்ணுக்கு கீழ கரு வளையம் விழுந்து, கன்னமெல்லாம் ஒட்டி ஏன் இப்பிடி ஆயிட்டான் நிகில்? அவனோட குழந்தைத்தனமான முகமே இல்லையே இப்போ?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள். ஏதேதோ சொல்லிச் சமாளித்து விட்டார்கள். மங்கை வீட்டில் இருப்பதால் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்டாள் மாமி. அவளுக்கு வேளா வேளைக்கு மருந்து கொடுப்பது , சாப்பாடு கொடுப்பது என்று இருந்தாள்.

மங்கையின் ஆபரேஷன் முடிந்து மாதம் ஆறு ஓடி விட்டது. இப்போது அவள் சாதாரணமாக எல்லா வேலைகளையும் செய்யலாம் என்று சொல்லி விட்டார் டாக்டர். அவளிடம் விஷயத்தைச் சொல்லி விடுவது என்று முடிவு செய்தனர் மூவரும். பக்கத்தில் ரெடியாக மருந்து மாத்திரைகளை வைத்துக் கொண்டு, மெதுவாக நிகில் தான் அம்மாவிடம் தன்னுடைய அப்பா இறந்து போன விஷயத்தை எடுத்துச் சொன்னான். முதலில் அவன் சொன்னது மங்கைக்குப் புரியவில்லை, எனவே மீண்டும் நிறுத்தி நிதானமாகக் கண்களில் நீரோடு சொன்னான்.

அதைக் கேட்ட மங்கை என்ன ஆவாளோ? என்று எல்லாரும் பதைபதைப்புடன் காத்திருக்க இவர்களைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தாள் மங்கை.

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது)

தொடரும்..

படத்திற்கு நன்றி:http://www.asiaone.com/News/Education/Story/A1Story20100722-228375.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *