கோதை வெங்கடேஷ்

அந்த அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

வெளியே கேட் அருகில்,கடைசி நிமிடத்தில் ஏதாவது டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்குமோ என்ற நப்பாசையில் ஒரு கூட்டம்.

புகழ் பெற்ற சினிமா நடிகையும், நடனமணியுமான மதுமிதாவின் நாட்டிய நாடகம் ,சிறிது நேரத்தில், துவங்க இருந்தது. “ராமன் எத்தனை ராமனடி” என்ற பெயரில், ராமாயணத்தை ஒரு புதிய பரிமாணத்தில் காட்டப் போவதாக சொல்லி இருந்தாள். ஒலி,ஒளி, உடை,அரங்க அமைப்பு எல்லாம் விருது பெற்ற சினிமா கலைஞர்களின் கைவண்ணத்தில். பத்திரிகைகளும் நாளிதழ்களும் சலிக்காமல் இதைப் பற்றியே தகவல் தந்து கொண்டிருந்தன.

முதல் சில வரிசைகள் பிரபலங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களைக் காணும் ஆர்வத்தில் பின்னால் இருந்தவர்களில் சிலர், எழுந்து எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். பல வாசனை திரவியங்களின் கலவையான மணம் நாசியை துளைத்தது. புது மோஸ்தர் நகைகளும், லேட்டஸ்ட் டிசைன் புடவைகளும் அணிந்த மேல்தட்டு நாரீமணிகள் ஒருவரை ஒருவர் கண்ணால் அளந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் நடுவில், மிக உற்சாகமாக அமர்ந்திருந்தான் ராஜா. இந்த நிகழ்ச்சியை பற்றிய விளம்பரத்தைப் பார்த்தவுடனேயே, விலையை பொருட்படுத்தாமல், ஆன்லைன புக்கிங் செய்து இரண்டு டிக்கெட்களை வாங்கி இருந்தான். அந்த உற்சாகத்திற்கு சிறிதும் பொருத்தம் இல்லாமல், அவன் அருகே அவன் மனைவி கீதா. அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, அவளுக்கு ஏதோ கோபமென்று. ராஜா என்னவென்று கேட்டுப்பார்த்து, சரியான பதில் ஒன்றும் கிடைக்காததால், தன் நட்சத்திர தேடுதலைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

சரியாக ஐந்து மணிக்கு அறிவித்திருந்தபடி, நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு திரை விலக்கப்பட்டது. தங்க நிற மணிக்கதவுகள் இரண்டு தெரிந்தன. அதனருகே தீபங்கள் பல ஏற்றப்பட்டிருந்தன. கதவுகள் திறந்து கொண்டன. ராமனின் பட்டாபிஷேக காட்சியுடன் நாடகம் துவங்கியது.

“அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற “

கம்பனின் வார்த்தைகள் இனிமையாக இசைக்கப்பட…அந்த ரம்யமான காட்சியைக் கண்டு, ஒரு நிமிடம் வாயடைத்துப் போன கூட்டம், பின் மீண்டு, பலத்த கரகோஷத்தை எழுப்பியது.

வெகு சுவாரஸ்யமாக தொடர்ந்த நாட்டிய நாடகத்தினால் நேரம் போனதே தெரியவில்லை. 15 நிமிட இடைவேளை அறிவித்ததும் தான் பலர் நிகழ்காலத்துக்கே திரும்பினர்.

“பிரமாதமாக இருந்தது, இல்லை:?”என்றான் ராஜா.

“ம்ம்ம்”என்றாள் கீதா,அரை மனதாக.

“வா,கான்டீன் வரைக்கும் போய்ட்டு வரலாம் “என்றான்.

எழுந்து சென்றார்கள். கூட்டம் முண்டியடித்ததைப் பார்த்ததும் “நீ இங்கியே இரு, நான் எதாவது வாங்கிண்டு வரேன்” என்று அவளை அங்கே ஒரு மரத்தடியில் விட்டு விட்டு சென்றான்.

அவன் வருவதற்குள் இவளுக்கு என்னதான் அப்படி கோபம்?” என்று நாம் விசாரித்து விடலாம்,வாங்க…

 

கதாபி ராமா,ரகுகுல சோமா…..” என்று கணீரென்று ஒரு குரல் கேட்க, மொட்டை மாடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த கீதா, எட்டிப் பார்த்தாள்.வாசலில் ஆஞ்சநேயர் வேடத்தில் ஒரு சிறுவன். பதின்மூன்று வயதிருக்கலாம். பச்சை நிற ஆடை, தலையில் கிரீடம், சிகப்பு நிறம் பூசிய வாய் மற்றும் நீண்டதோர் வால். அவன் தெலுங்கு பக்தி பாடல்கள் பாடி வருவதும், இவள் காசு கொடுப்பதும் வாடிக்கை. ராஜாவுக்கும் அந்த சிறுவனுக்கும் வாக்குவாதம் நடப்பது போலிருப்பதை கண்டு கீழே விரைந்தாள்.

“அக்கா இல்லியா?”என்று அந்த பையன் கேட்டு கொண்டிருந்தான். இவளை பார்த்ததும் ராஜா பிடித்துக்கொண்டான். 

“என்ன கீதா,இந்த பையனுக்கு எப்பவும் நீ காசு கொடுப்பியா ?”

“ஆமாம்,ராஜா,ஆஞ்சநேயர் வேஷம் போட்டுண்டு ஏதோ பாட்டு பாடறான். அவனுக்கு ஒரு 5,10 கொடுத்தால் என்ன பாவம்?”

“நோ, கீதா, ஆஞ்சநேயர் வேஷம் போட்டால் இவன் ஆஞ்சநேயர் ஆயிடுவானா? நீ ஏன் இந்த மாதிரி பிச்சைக்காரர்களை என்கரேஜ் பண்றே?” கோபத்தில் அவன் குரல் உசத்தினான்.

அந்த சிறுவன் ராஜாவை பார்த்து, “அக்கா சீதம்மா மாதிரி. அவங்கள ஒண்ணும சொல்லாதீங்க, நான் போய்டுறேன்” என்றவாறே சென்று விட்டான்.

இது நடந்து ஆறு மாதமாகி விட்டது. அந்த சிறுவன் அதற்கு பின் வரவே இல்லை. ராஜா, கீதா இருவருமே நல்ல ரசிகர்கள் தான். ரசனையில் தான் வித்தியாசம். ஆர்ட் கேலரியில் ஓவியங்களை ரசிப்பவன் ராஜா. தெருவில் கலர்ப்பொடி வைத்து வரையும் படங்களைப் பார்த்தால் வண்டியிலிருந்து இறங்கி விடுபவள் கீதா.  “அவன் ஆஞ்சநேயர் வேஷம் போட்டால் ஆஞ்சநேயர் ஆகிடுவானா என்று கேட்டார். இந்த மதுமிதா, ராமர் வேஷம் போடுவதை பார்க்க ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்”. இது தான் கீதாவின் கோபம்.

“அக்கா” என்று குரல் கேட்டு திரும்பியவள் அந்த சிறுவனைப் பார்த்து, தன் கண்களை நம்ப முடியாமல், மீண்டும் உற்றுப் பார்த்தாள்.

“டேய், எப்படிடா இருக்கே?” என்றவள் கைப்பையிலிருந்து 100 ருபாய்த் தாளை உருவி நீட்டினாள். அதை மறுத்தான்.

“மது அக்கா வீட்டு வாசலில் பாடும் போது என்னை பார்த்துட்டு அவங்க க்ரூப்ல சேர்த்துண்டாங்க. பாட்டு ப்ராக்டிஸ் கொடுக்கறாங்க. நான் கூட ஒரு சின்ன ரோல் பண்றேன், இந்த டிராமால. அக்கா அது சரி, சார் ரொம்ப திட்டினாரா அப்புறம் ? “என்று கேட்டான்.

அவள் அவன் தலையில் கை வைத்து, “நல்ல இருடா” என்றாள், புடவைத் தலைப்பில் தன கண்களை துடைத்துக் கொண்டே.

“லேட் ஆய்ட்டுதுக்கா” என்று ஓடி விட்டான் அவன்.

 

கையில் சமோசாவும் ஜூசுமாக திரும்பிய ராஜா, “என் காலேஜ் மேட் ஒருத்தனைப் பார்த்தேன். ப்ரோக்ராம் முடிஞ்சதும் ஆர்டிஸ்ட்களை மீட் பண்ண ஏற்பாடு பன்றேன்னான். போலாமா?”என்றான்.

“ஒ ,எஸ்.”என்று அவள் உற்சாகமாக பதில் அளித்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

 

புகைப்படத்துக்கு நன்றி:

 http://www.thehindu.com/multimedia/dynamic/00003/RAMAYANA-1_3738f.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒரு ரசிகன், ஒரு ரசிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *