கல்லூரி நாட்களும்…கல்லூரி நட்பும்…!

முகில் தினகரன்

ஞாபக அடுக்குகளை
நினைவு விரல்களால்
வருடிய போது…ஓரிடத்தில்
வெல்வெட் ஸ்பரிசம்…!
வீணையின் ஸ்வர அதிர்வு…!
புல்லாங்குழலின் மெல்லிசை வருடல்…!
பனித்துளியின் பளிங்குத்தனம்…!
ஆம்….. கல்லூரி நாட்கள்!

அந்த ஆட்டோகிராப்களை
அசை போடும் போது
ரவி வர்மாவும்…பிகாசோவும்…
போட்டி போடுவார்கள் வர்ணம் பூச….!
காளிதாசனும்…கண்ணதாசனும்
களத்தில் இறங்குவார்கள் கவிதை வீச….!

கல்லூரி….அது
கல்லையும் மண்ணையும் குழைத்துக்கட்டிய
அஃறிணைப் பொருளல்ல….!
கனவுகளாலும்…கற்பனைகளாலும்…
காதல்களினாலும்…கவிதைகளினாலும்..
செதுக்கப்பட்ட
தங்கச் சூரியனின் வைரக்கதிர் வீச்சு!
மாணிக்க நிலவின் மரகத ஒளிப் பூச்சு!

கல்லூரி நட்பு…அது
மதிய வேளைக் கிணற்று நீரின்
மனங் கவரும் வெது வெதுப்பு…!
பழைய புத்தகத்தில் பொதித்து வைத்த
மயிலிறகின் மினுமினுப்பு….!
நள்ளிரவில் மெலிதாய் ஒலிக்கும்
‘பார்த்த ஞாபகம் இல்லையோ”வின்
மென் சிலிர்ப்பு….!
மழை நேர மசாலா டீயின்
காரங் கலந்த இளங் கசப்பு…!

இறுதியாய் அறிவிக்கின்றேன்
இங்கொரு போட்டியினை…!
கல்லூரி நாட்களெனும்
கனவுப் பாக்களையும்…
கல்லூரி நட்பெனும்…
களங்கமிலாப் பொக்கிஷத்தையும்
நினைவு நாவால் அசை போட்டு
அழாதவர் எவரேனும்
அகிலத்தில் இருந்தால்
அழைத்து வாருங்கள்…
அறிவிக்கின்றேன் அவரை..
தெய்வமென்று…!

படத்துக்கு நன்றி.
http://blogs.capita-libraries.co.uk/panlibus/2009/12/21/how-college-students-seek-information-in-the-digital-age/

 

1 thought on “கல்லூரி நாட்களும்…கல்லூரி நட்பும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க