ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 11)
வெங்கட் நாகராஜ்
சென்ற பகுதியில் ஹரி-ஹரனை தரிசித்ததைப் பற்றிச் சொல்லி முடித்திருந்தேன். என்னய்யா இது! ”புலிவேட்டை, புலி பார்க்க வனத்திற்குச் சென்றோம்” என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறாயே, புலியைப் பார்த்தது பற்றி இது வரை ஒன்றுமே சொல்லவில்லையே என்ற கேள்வியைக் கேட்க உங்களுக்கு இப்போது தோன்றியிருக்கலாம்! ‘நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்!’. முதல் நாள் மூன்று மணி நேரம் காட்டுக்குள் சுற்றியும் ஒரு புலியைக் கூட காண முடியவில்லை.
இரண்டாம் நாள் காலையில் சென்றது நான்கு மணி நேர வனப்பயணம். இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் சுற்றியும் எங்களுக்கு ஒரு புலி கூட கண்ணில் தென்படவில்லை. ஆங்காங்கே வாகனத்தினை நிறுத்திப் புலியின் பாதச் சுவடுகளைக் காண்பித்து இப்போதுதான் புலி இந்தப் பக்கமாகச் சென்றிருக்கிறது என்று சொல்லும்போது ”அட என்னடா இது, நாம் வரும்போது வராம, முன்னாடியே வந்து ’கண்ணாமூச்சி ரே ரே’ விளையாடுதே இந்தப் புலிகள்’” என்று எண்ணத் தோன்றியது.
இருந்தாலும் மனம் தளராது பயணம் தொடர்ந்தது. எத்தனை எத்தனை மான்கள் – கூட்டம் கூட்டமாக – மனிதர்களைப் பற்றிய கவலையே இல்லாது. ஆங்காங்கே லங்கூர் வகைக் குரங்குகளையும் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது எதிர்ப் பக்கத்தில் வந்த இன்னொரு வாகனத்தில் எங்கள் குழுவினர் சிலர் வந்தனர். அவர்களுக்காவது புலிகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் இருந்ததா என வினவினால் – ஒரே ஒரு குட்டிப் புலியைப் பார்த்ததாகச் சொன்னார்கள். எங்கள் குழுவில் மொத்தம் 35 பேர் என்பதால் மொத்தம் 7 வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்தனர். ஒரே ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் மட்டுமே புலியைப் பார்த்திருக்கிறார்கள்.
காட்டில் 60 புலிகளுக்கு மேல் இருந்தாலும் எங்களால் பார்க்க முடியாததன் காரணம் என்னவாக இருக்கும்? இத்தனை பெரிய பரப்பளவுள்ள காட்டில் புலிகள் ஒளிந்து கொள்ள இடமா இல்லை. ஒன்று புரிந்தது – உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரே பயணத்தில் கூட நீங்கள் புலிகளைப் பார்த்து விடலாம் – இல்லையெனில் ஒரு வாரம் முழுவதும் இருந்து தினமும் இரண்டு வனப்பயணங்கள் செய்தாலும் பார்க்க முடியாது என்பதே அது.
வெளியே வரும்போது ஒரு பெரிய தகவல் பலகையில் வைத்திருந்த வாசகம் மேலே சொன்ன வாசகத்தினை உண்மையாக்கிற்று. என்ன வாசகம் எனக் கேட்கிறீர்களா? கீழே படியுங்க.
என்ன சரிதானே, ”நீங்கள் பார்க்காவிட்டால் என்ன, கவலைப் படாதீர்கள், நான் உங்களைப் பார்த்து விட்டேன்” என ஒரு புலி சொல்வது போல வைத்திருந்தார்கள். இருந்தாலும், என்ன காரணமாக இருக்கும் என யோசித்து இந்தக் காட்டின் வரலாற்றினைப் படித்தேன். காரணம் புரிந்தது!
ரேவா நாட்டினை மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்கள் ஆண்டு வந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் ரேவா நகரத்தின் ஆட்சிப் பொறுப்பினை 1880 ஆம் ஆண்டு ஏற்றார். ஆட்சியைத் திறம்பட நடத்திய அவர், மிகச்சிறந்த கல்விமானும் கூட. படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாட்டை மிகச் சிறப்பாய் ஆண்டு பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தொடர்ந்து 38 வருடங்கள் ரேவா நகரத்தில் நல்லாட்சி புரிந்து விட்டு 1918 ஆம் ஆண்டு காலமானார்.
அவர் நல்லாட்சி புரிந்து எவ்வளவு பிரபலமானாரோ அது போலவே வேட்டையாடுவதிலும் வல்லவராக இருந்து பிரபலம் ஆனவராம். மொத்தம் 111 புலிகளை இந்தப் பாந்தவ்கர் காடுகளில் வேட்டையாடியிருக்கிறார். 109 என்பது பாரம்பரியமாக இவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாம். அதை விட இரண்டு அதிகமாகவே வேட்டையாடிக் கொன்றிருக்கிறார்.
அது சரி, ”அவர் இத்தனைப் புலிகளை வேட்டையாடியதற்கும், உங்கள் பயணத்தின் போது புலிகள் ஓடி ஒளிந்து கொண்டதற்கும் என்ன சம்பந்தம்?” என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. இத்தனை நேரம் மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்களின் மகன் என்றுதானே சொன்னேன், அவரின் பெயரைச் சொல்லவில்லையே! அவரது பெயரில் தான் இருக்கிறது காரணம். – அவரது பெயர் மஹாராஜா வெங்கட் ராமன் சிங் ஜி ஜு தியோ! என் பெயர் வெங்கட் ராமன்.
ஆஹா ’வந்துட்டாண்டா இன்னொரு வெங்கட் ராமன், வாங்க சீக்கிரம் ஒளிந்து கொள்ளலாம், இல்லைன்னா கொண்டே புடுவான்’ என்று ஒளிந்து கொண்டன போல அவ்வளவு புலிகளும்!
மீண்டும் சந்திப்போம்
ஒரு பயணக்கட்டுரையை இவ்வளவு நகைச்சுவை ததும்ப எழுத முடியுமா? நேரில் பயணித்தது போன்ற உணர்வை தோற்றுவித்தது என்றால் மிகையில்லை.
தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இளங்கோ. தொடர்ந்து ரசிக்க எனது பக்கத்திற்கும் வாருங்களேன்.