இலக்கியம்கவிதைகள்

கல்யாணத் தரகர்கள்

முகில் தினகரன்

மனிதப் பிறவிகளுக்கு
மகுடம் சூட்டிவிடும்
மாதிரி பிரம்மாக்கள்!

இதயச் சங்கமத்தில்
இளைப்பாறி மகிழும்
இந்நாள் குசேலர்கள்!

திருமணத் தேர்தலில்
திருவோட்டுச் சின்னத்தில்
தீர்க்கமுடன் போட்டியிட்டு

முதிர்கன்னி வேட்பாளர்களுக்கும்
இல்லறசபை உறுப்பினர் பட்டத்தை
எளிதாக்கித் தரும்
மனித ஓட்டுப் பெட்டிகள்!

ஊதியக் குறிக்கோள்
உள்ளுக்குள் ஊறினாலும்
சேவைச் செருக்குடன்
ஜாதகச் செங்கோல் ஏந்தும்
ஜடாயு வாரிசுகள்!

இந்தக் கொத்தனார்கள் கட்டிய
இல்லறப் பாலங்கள்
ஒன்றிரண்டு உதிர்ந்து போனாலும்
வஜ்ரப் பிடிப்பாய் சில
வாழைகளும் உண்டு!
வாழையடி வாழைகளுமுண்டு!

இவர்களின் ராஜபாட்டையில்
கூட்டல்களின் எண்ணிக்கையே
கூடியிருப்பதால்
கழித்தல்கள் தானே கரைந்துவிடும்
காற்றில் கற்பூரமாய்!

படத்துக்கு நன்றி

http://www.unique-wedding-invitations-ny.com/weddinginvitations/?page_id=8

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க