மோகன்குமார்

நாவல், சிறுகதை, கட்டுரை என எல்லா பக்கமும் சிக்சராய் அடித்தவர் சுஜாதா. அவரது கட்டுரை தொகுப்புகளுள் ஒன்று அன்புள்ள அப்பா.

பல மனிதர்கள் பற்றி அவரது நினைவுகள் இந்த தொகுப்பில் பதிவாகி உள்ளது.குறிப்பாக அவர் தந்தை குறித்த நினைவுகள் நெகிழ்ச்சி

இறக்கும் நிலையில் இருக்கும் தனது தந்தையை சென்று சந்திக்கிறார் சுஜாதா. அவர் குறித்த நினைவுகள், அப்பா சீரியஸ் சீரியஸ் என்று அடிக்கடி சுஜாதாவை வரவழைத்தது ( என் அம்மாவுக்கும் சமீபத்தில் இதே நிலை வந்தது)… எல்லாம் சொல்லி சென்று கடைசி வரியில் ” தன் தகனத்துக்கு பணம் அப்பா தயாராக வைத்திருந்தார் என சுஜாதா டைப் பஞ்ச உடன் தான் இந்த கட்டுரையும் முடிக்கிறார்

துக்க வீட்டு சம்பவங்களை சுஜாதாவின் வார்த்தைகளில் வாசியுங்கள்

“பம்பாயிலிருந்து தம்பி வர காத்திருந்து மூன்று பேரும் சுற்றி நின்று அவர் மார்பை கண்ணீரால் நனைத்தோம்

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

சேலம் கடைத்தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும் சொம்புகளுக்கும் அலைந்தோம். எல்லாரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணை காசுக்கு வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காத்திருக்கிறார்கள். தொடர்கதையின் தலைப்பு கேட்டு எனக்கு டிரன்க் கால் வருகிறது “

மிக சுருக்கமாக ஆனால் அந்த சூழலை எப்படி கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் பாருங்கள் !

தேர்தலில் ஓட்டு இயந்திரம் அறிமுக படுத்தியதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. முதன் முதலாய் கேரளாவில் ஒரு கிராமத்தில் இதை அமல் படுத்திய போது நடந்த சம்பவங்களை தனக்கே உரித்தான பாணியில் சிறுகதை போல் சொல்லிச் செல்கிறார். செம சுவாரஸ்யம் !

விகடன் ஆசிரியர் பாலன் பற்றி சொல்லும் போது ஒரு முறை, சுஜாதா.சேலம் அண்ணன் வீட்டுக்குச் சென்று இறங்கும்போது அங்கு அவருக்கு முன்னே ஒரு விகடன் நிருபர் அவரைப் பார்க்க காத்திருந்தாராம். “நான் சேலம் வருவது எனக்கே தெரியாதே ? விகடனுக்கு எப்படி தெரிந்தது?” என்கிறார் குறும்புடன் !

போலிஸ் அதிகாரி கார்த்திகேயன் பற்றி விவரிக்கும் சம்பவங்கள் சினிமா சம்பவங்கள் போலவே உள்ளன. குறிப்பாய் பல இடங்களுக்கு அவர் மாறு வேஷத்தில் சென்று குற்றங்களை கண்டு பிடிப்பதை விரிவாக சொல்லியுள்ளார் சுஜாதா. போலீஸ்காரர்களுக்கு வரும் கடிதங்களையும் பகிர்ந்துள்ளார்

சாவி இதழுக்கு ஒரு வாரம் ஆசிரியராய் இருந்தபோது சுஜாதாவுக்கு வந்த கடிதங்களில் இருந்து அவர் எடுத்துக்காட்டும் வரிகள் செம சிரிப்பு !

“கொஞ்சம் கதைகளில் கிராமத்துக் கிழவர்களும் அத்தைகளும் மறக்காமல் செத்து போகிறார்கள். ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளில் கடைசி பாராவில் தூக்கத்தில் எழுந்து அவ்வளவும் கனவுதானா என்கிறார்கள். பெண்மணிகளின் கதைகளில் எல்லாம் ஆண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள். திருமதிகள் அனுப்பிய கதைகளில் பெண்கள் வரதட்சணை கொடுமையால் துன்புறுகிறார்கள்”.

சுஜாதாவிடம் கேள்வி பதில்களும் உண்டு.

“படம் ஆரம்பித்ததும் சென்று சீட் தேடிய அனுபவம் உண்டா?”

“உண்டு நீல படங்களில்”

புத்தகத்தின் கடைசியில் கம்பயூட்டரை பற்றி என்ற அவரது நீண்ட கட்டுரை வாசிக்க பொறுமை இல்லை. அதை எழுதிய காலத்தில் நிச்சயம் புதிதாய் இருந்திருக்கலாம்.

அன்புள்ள அப்பா: சுஜாதா பிரியர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் !

புத்தகம்: அன்புள்ள அப்பா
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 30
பக்கங்கள்: 96

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *