செத்துங் கொடுத்த சீதக்காதி!
பவள சங்கரி
தலையங்கம்
காயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன எட்டிமரம்
காயாதிருந்தென்ன, காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்
போய்,யாசகம்என உரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்
ஓயாமல் ஈபவன், மால்சீதக் காதி ஒருவனுமே.
என்று பாடிவைத்தார் படிக்காசுப் புலவர் வள்ளல் சீதக்காதி இறந்த போது. ஆனால் இந்த வள்ளல் ஷரண்யாவோ, யாசகம் கேட்காமலேயே தம் ஆலயமான ஊனுடம்பு முழுவதையும் தானமாக வழங்கிய வள்ளலாகிறார்.
வாழ்க்கை என்பது கண்மூடி கண் திறப்பதற்குள் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்துவிடுகிறது. ஆனால் அதற்குள் நாம்தான் ஒருவருக்குள் ஒருவர் எத்துனை போட்டிகள், சாமர்த்தியங்கள் காட்டி நம் வல்லமையை நிரூபிக்கத் துடிக்கிறோம். அடுத்தவரைக் கெடுத்தாவது தாம் வாழ வேண்டும் என்று துடிப்பவர்கள் எத்துனைபேர்.. தாம் உயிர் வாழும்போது நன்மை செய்வதே பெரும்பாடாக இருக்கும் இந்த காலத்தில் தாம் இறந்த பின்பும் தம்மால் நான்கு பேர் உயிர் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தெய்வத்திற்கு சமானமானவர்கள் அல்லவா..? அந்த வகையில் சரண்யா இன்று செத்தும் கொடுத்த சீதக்காதியாக பலரை வாழ வைக்கப் போகிறார்.
ஆம், 21 வயதேயான இளம் பொறியியல் வல்லுநர் சரண்யா. கோவை மாநகரைச் சேர்ந்தவர். சேலம் அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தம் துறை முன்னேற்றம் சம்பந்தமான சொற்பொழிவிற்காக நண்பர்களுடன் காரில் சென்று திரும்பி வரும்வழியில் ஈரோடு மாவட்டம், பவானி அருகே எதிரில் வந்த லாரியில் கார் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. கோவை மெடிகல் செண்ட்டர் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்தும் பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறது. பேரதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் அதனையும் தள்ளிவைத்து விட்டு சற்றும் தாமதிக்காமல் பிழைக்கும் வாய்ப்பே இல்லாத, இறந்து கொண்டிருக்கும் தம் மகளின் அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்க முடிவெடுத்தார்கள்.
சரண்யாவின் தந்தை திரு கே.மணியன் சமீபத்தில்தான் வெளிவந்த பரீட்சை முடிவில் 94 மதிப்பெண்கள் பெற்று தேறியுள்ள தம் மகள் சமூக நலனில் மிகுந்த அக்கரை கொண்டவள் என்றும், சென்ற ஆண்டு லஞ்ச ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தற்போது கோவை ரோட்டரி சங்க உறுப்பினராகவும் இருப்பவர் என்பதால் இப்படி முக்கிய உறுப்புகள் அனைத்தும் தானம் செய்வதால் அவள் ஆன்மா மிகவும் மகிழ்ச்சியடையும் என்றும் எண்ணி அதனை செயல்படுத்தவும் முடிவெடுத்திருக்கிறார், தம் மனைவியின் ஒப்புதலோடு.
சரண்யாவின் கண்கள் கோவை அரவிந்தா மருத்துவமனைக்கும், இதய வால்வுகள் சென்னை ஃபிராண்டியர் லைப்லைன் மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் கோவை மெடிகல் செண்ட்டருக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடம்பிலிருந்து எடுக்கக்கூடிய அனைத்துப் பாகங்களையும் வழங்கிய வள்ளலாக சரண்யா இன்று சிலருக்கேனும் உயிர் கொடுக்கக்கூடிய தெய்வமாகப் போகிறார். இப்படி ஒரு துக்கமான நேரத்திலும் இவருடைய பெற்றோர் துணிந்து எடுத்த முடிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டியதொன்று. தம் மகள் இதன் மூலம் உயிர் வாழப்போவதாக நம்பியதே இப்பெரிய தியாகத்தின் அடிப்படையாக இருக்குமோ? எது எப்படியோ மணியன் மற்றும் கலாமணி தம்பதியர் வணக்கத்திற்குரியவர்களாகவும் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர்களாகவும் ஆகின்றனர் என்பது உறுதி.
உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு சென்ற வாரம் என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. என் சொந்த அக்கா கணவர், மில் தொழிலாளி மாரடைப்பில் இறந்து போனார். படிப்பறிவில்லாத அவர் கண் தானம் செய்திருந்தார். அவரது கண் ஒன்று ஒரு குழந்தைக்கும், இன்னொன்று ஒரு பெரியவருக்கும் தரப்பட்டது. ஆனால் அது யாருக்கென்று சொல்லப்படவில்லை!