பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 24

0

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

E.Annamalai

இலண்டன் பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் (இலண்டனிலிருந்து அனுப்பியர், தமிழாசிரியர் ரீட்டா ஃபற்றிமாகரன்):

1.குறிலின் நீட்சிதான் நெடில் என்றால் ஓசையில் மட்டும் அல்ல, வரிவடிவத்திலும் தொடர்பு இருப்பது தானே பொருத்தம்? ஆனால் (இ-ஈ), (உ-ஊ) ஆகிய வரிவடிவங்களில்  ஓசையில் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது; வரிவடிவில் தொடர்பு இல்லை. இது ஏன்?

2. ஊ என்னும் வரிவடிவம் உ என்னும் வரிவடிவத்தோடு தொடர்பு உள்ளது போல் இருந்தாலும், இந்த எழுத்தில் உ என்னும் உயிரும் ள என்னும் உயிர்மெய்யும் ஒன்றின்மேல் ஒன்றாக எழுதப்பட்டு, அதை ஊ என்னும் உயிரெழுத்து என்று சொல்வது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. இதற்கான விளக்கம் என்ன?

3. ஔ என்னும் உயிர் எழுத்திலும் ஒ என்று ஏற்கனவே உள்ள உயிரெழுத்துக்குப் பக்கத்தில் ள என்ற உயிர்மெய்யெழுத்தை எழுதி விட்டு, அந்த இரண்டையும் இணைத்து ஔ என்று ஓரெழுத்தாகச் சொல்வதும் பொருத்தமற்றதாக உள்ளது. இதற்கு என்ன விளக்கம்?

4.  உயிர்மெய் எழுத்துகளுக்கு ஒரு உயிர்க் குறியீடு மட்டும் வருகையில், ஒ, ஓ, ஔ ஓசை உடைய உயிர்மெய்யெழுத்து-களுக்கு (கொ, பொ…), (கோ, போ…), (கௌ, பௌ….) என இரண்டு உயிர்க்குறியீடுகள் வருவது ஏன்?  மேலும், இந்தக் குறியீடுகள் ஏற்கனவே எ, ஏ, ஆ என்ற ஓசைகளுக்கான உயிர்க் குறியீடுகளாகவும் உள்ளன. இவற்றிற்கு ஓரு உயிர்க் குறியீட்டை தனித்துக் கொடுக்க முடியாதா?

5. மெய்யெழுத்தைப் பொறுத்த மட்டில் ர் என்னும் எழுத்து, உயிர்க்குறியீடாக வரும் ‘ா’ வரிவடிவின் மேல் மெய் எழுத்துக்கான புள்ளியைப் போட்டு ‘ர்’ எழுதப்படுகிறது. ஒரு உயிர்க் குறியீடு எப்படி ஒரு மெய்யெழுத்தாக வரமுடியும்? ரி, ரீ ஆகிய உயிர்மெய்யெழுத்துகளும் ா என்னும் உயிர்க் குறியீட்டின் மேல் ி, ீ என்னும் உயிர்க்குறியீடுகளைப் போட்டு எழுதப்படுவதால், இங்கு இரண்டு உயிர்க் குறியீடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதப்பட்டுவது போன்ற தோற்றத்தையல்லவா தருகிறது? இதனை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?

6. உ, ஊ ஏறிய உயிர்மெய் எழுத்துகளுக்கு மற்றைய உயிர் எழுத்துகளுக்கு இருப்பது போல் ஏன் ஒரே உயிர்க்குறியீட்டைக் கொடுத்து, ஒழுங்கு முறையான பொதுவிதியில் அமையும் வரிவடிவு அமைப்பினைத் தோற்றுவிக்க முடியாதா?

7.  டி, டீ ஆகிய உயிர்மெய் எழுத்துகளைக் கணினியில் எழுதும் பொழுது முதலில் ட வை அமுக்கிப் பின்னர் ி, ீ என்பனவற்றை அமுக்கியே எழுத வேண்டியுள்ளது. இது ட ி, ட ீ வுக்கு மேல் விசிறிக் குறியீடுகளைப் போடுவது  போன்ற எண்ணத்தையே தருவதாகக் கருதுகிறார்கள் பிள்ளைகள். இதனை மாற்றிப் பொது ஒழுங்குமுறைக்குள் எல்லா எழுத்துகளும் அமையக் கூடிய முறையைத் தோற்றுவிக்க  இயலாதா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

முதல் ஆறு கேள்விகள் மாணவர்கள் பலருக்கு எழும் கேள்விகள். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்களா, ஆசிரியர்கள் கேட்க விடுகிறார்களா என்று தெரியவில்லை.

முதல் ஐந்து கேள்விகள், தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தின் வரலாற்றைப் பற்றியவை. ஆறாவது கேள்வி, எழுத்துச் சீர்திருத்தம் பற்றியது. கடைசிக் கேள்வி, கணினித் தமிழ் பற்றியது. இவற்றுக்கான பதில்களும் வேறு.

இன்றைய தமிழ் எழுத்துகளுக்கு 2500 ஆண்டு வரலாறு உண்டு. அசோக மன்னன் இந்தியாவிலும் இலங்கையிலும் பரவ வழிசெய்த பிராமி எழுத்துமுறையிலிருந்து (script) ஆங்கிலேயர் ஆட்சியின் வழி வந்த அச்சுத் தொழில்நுட்பம் வரை தமிழ் எழுத்துகளின் வடிவம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மாற்றங்களுக்கு ஓலை போன்ற எழுதும் ஊடகம், எழுத்தாணி போன்ற எழுதும் கருவி, எழுதக் கை இயங்கும் முறை, எழுதுவோனின் அழகுணர்ச்சி முதலியவற்றோடு, மொழியின் தேவை, அரசின் அதிகாரம் போன்றவையும் காரணமாக இருந்தன. காலம்தோறும் ஒவ்வொரு எழுத்திலும் ஏற்பட்ட மாற்றத்தையும் பொதுவான காரணங்களையும் தி. நா. சுப்பிரமணியன் எழுதிய பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற நூலிலும், பிற தொல்லெழுத்தியல் (paleography) ஆய்வாளர்களின் எழுத்துகளிலும் காணலாம். இங்கு சுருக்கமாகக் கூறுகிறேன்.

ஒரு நெடில் உயிரின் வரிவடிவம் அதன் குறிலின் வடிவத்தில் சிறு மாற்றம் தந்து பெறப்படுவது பொதுவான உண்மை. /ஈ/ துவக்கத்தில் நேர்கோட்டுக்கு இரு புறமும் புள்ளியிட்டு எழுதப்பட்டது, 0l0 என்பது போல. ஆனால் தமிழ் பிராமியில் இது /இ/ என்று படிக்கப்படும்; இதற்கு /ஃ/ என்ற வரிவடிவமும் இருந்தது. காலப்போக்கில், முன்னது நெடிலுக்குரிய வலக்கோடு சேர்த்துக் கோடுகளை இணைத்து /ஈ/ என்றானது. பின்னதில், மூன்று புள்ளிகளும் இணைக்கப்பட்டு /இ/ என்றானது. /உ/வோடு நெடிலுக்குச் சேர்த்த வலக்கோடு இடப்பக்கம் வளைந்து சுழியாகி /ள/ என்ற வடிவமாக மாறி, மெய்யிலிருந்து தனித்து அதன் மேலே எழுதப்பட்டு /ஊ/ என்றானது. இதில் உள்ள நெடில் குறிக்கும் மெய்யெழுத்து /ள/வுக்கும் உள்ள வடிவ ஒற்றுமை தற்செயலானது. முன்னது பின்னதிலிருந்து பெறப்பட்டது அல்ல.

/ஒள/வைக் குறிக்க /ஒ/வுக்குப் பின் நெடிலுக்குரிய வலக்கோடு  இட்டு, அது வளைந்து சுழியாகி /ள/ என்றானது. இந்த உயிர்க்குறியும் மெய்யெழுத்து /ள/வும் வரலாற்று வளர்ச்சியில் ஒன்றல்ல; அவற்றின் இன்றைய ஒற்றுமை தற்செயலானது. /எ/ அப்போது நெடில்; இதன் குறில், தொல்காப்பியம் சொல்வது போல், புள்ளியிட்டு எழுதப்படும். தொல்காப்பியம் /ஔ/வை உயிரெழுத்துகளோடு சேர்த்திருந்தாலும், பிராமித் தமிழில் இதற்குத் தனி வரிவடிவம் இல்லை; ஒரு உயிரெழுத்துக்குப் பதில் /அவ்/ என்றே எழுதப்படுகிறது.

/ஆ, ஏ, ஓ/ என்ற மூன்று உயிரெழுத்துகளை மெய்யோடு ஏற்றி எழுதும்போது அவற்றை வேறுபடுத்த மூன்று வேறு உயிர்க்குறிகள் வேண்டும். /எ, ஒ/ என்ற உயிரெழுத்துகள் அண்மைக்காலம் வரை நெடில் வடிவங்கள்; இவற்றின் குறில் புள்ளியிட்டுக் காட்டப்படும். (இந்தப் புள்ளியை, ஓலையிலும் கல்லிலும் எழுதுவதில் உள்ள சிரமத்தால், சாதாரணமாக எழுதுவதில்லை. சொல்லை வைத்தே ஒரே வரிவடிவத்தைக் குறிலாகவோ நெடிலாகவோ படிக்க வேண்டும். சில கல்வெட்டுகளில் குறிலும் நெடிலும் வேறுவகையில் வேறுபடுத்தப்பட்டாலும், அச்சு வந்த பிறகே நெடில் /எ/வுக்குக் காலும், /ஒ/வுக்குச் சுழியும் இட்டு எழுதும் வழக்கம் நிலைபெற்றது).

மூன்று நெடில் உயிர்க்குறிகள் பின்வருமாறு வேறுபடுத்தி எழுதப்படும். /ஆ/வுக்கு வலக்கோடும், /ஏ/வுக்கு இடக்கோடும், /ஓ/வுக்கு வலக்கோடும் இடக்கோடும் மெய்யெழுத்தோடு சேர்த்து இடப்படும். பின் இரண்டு உயிர்க்குறிகளும் இடக்கோட்டில் இடதுபக்கம் வளைந்து பின் சுழியாகி, /எ/வுக்கு /கெ/யில் உள்ளது போன்றும், /ஒ/வுக்கு /கொ/வில் உள்ளது போன்றும் வடிவம் பெற்றன. இவற்றின் நெடில் உயிர்க்குறி இரண்டு சுழி பெற்றது. காலப் போக்கில் இந்த உயிர்க்குறிகளும், /ஆ/வின் உயிர்க்குறியான வலக்கோடும், மெய்யிலிருந்து பிரிந்து தனித்து நின்றன.

மெய்யெழுத்து /ர/, எந்த உயிர்க் குறியையும் போலல்லாமல், எப்போதும் தனித்து நிற்கும். இதற்கும் நெடிலின் உயிர்க்குறிக்கும் உள்ள வடிவ ஒற்றுமை தற்செயலானது; இவற்றின் தோற்றமும் வரலாறும் வேறானவை. இரண்டையும் வேறுபடுத்த, பின்னால் உயிர்க்குறி ஒட்டிச்சேராத /ர/வுக்குக் கால் இடப்பட்டது, /ரி, ரு/ முதலான எழுத்துகளில் இருப்பதைப் போல. கணினியில் /ர/வுக்கு (/உ, ஊ/வின் உயிர்க்குறி சேர்ந்து /ரு,ரூ/ என்று எழுதும்போது தவிர) எல்லா இடத்திலும் காலிட்டு எழுதுவது தொழில்நுட்பத்தின் விளைவு. கையால் எழுதும்போது, /ர/வுடன் உயிர்க்குறி இருந்தால் கால் இல்லாமலே எழுதினாலும், துணைஎழுத்து எனப்படும் உயிர்க்குறியோடு வடிவக் குழப்பம் இருக்காது என்ற கொள்கையினடியாக, கடைப்பிடித்த எழுதும் சிக்கனத்திற்குத் தேவை இல்லாமல் போய்விட்டது.

தமிழ் எழுத்துகளின் பரிணாம வளர்ச்சியின் சிக்கல்களை எல்லாம் இந்தச் சுருக்கமான விளக்கத்தில் சொல்லவில்லை. பரிணாம வளர்ச்சி நேர்கோடு அல்ல. இந்த விளக்கத்தினால் சில உண்மைகளை வாங்கிக்கொண்டால் போதும். எழுத்துகளின் வடிவத்தைப் புரிந்துகொள்ள தர்க்கப் பார்வை உதவாது; வரலாற்றுப் பார்வை வேண்டும். ஒரு மொழியின் நெடுங்கணக்கு அறிவியல் அலசல் பார்வையில் முரண்கள் உடையது போல் தோன்றலாம். ஆனால் வரலாற்றின் விளைவில் ஒரு அறிவுரீதியான வரன்முறையை (pattern) எதிர்பார்க்க முடியாது. தமிழ் கால வெள்ளத்தில் மாறி வந்திருக்கிறது. இன்றைய எழுத்து அன்று இல்லை; இன்றைய தமிழ்ப் பயன்பாடு அன்று இல்லை.

/உ, ஊ/வின் உயிர்க்குறிகளும் பரிணாம வளர்ச்சி பெற்றி-ருக்கின்றன. தமிழ் எழுத்தைப் போல் பிராமி எழுத்து முறையிலிருந்து உருவாகிய கிரந்த எழுத்துகளில், இந்த இரண்டு உயிர்களின் உயிர்க்குறிகள், /ஜு, ஜூ/வில் இருப்பதுபோல், ஒரு சீராக உள்ளன. இவற்றின் தமிழ் வரலாறு வேறு.

இந்த இரண்டு உயிர்களின் உயிர்க்குறிகளை, கிரந்தம் போல், சீர்ப்படுத்துவது எழுத்துச் சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஒன்று.  சீர்திருத்தம் பரிணாம வளர்ச்சி அல்ல; அது திட்டமிட்டுச் செய்யும் மாற்றம். சீர்மை (regularity) பகுத்தறிவின் பாற்படும் என்ற கொள்கையினடியில் செய்யும் மாற்றம். மொழியும் அதன் எழுத்தும் தர்க்கத்தைப் பின்பற்றி அமைவன அல்ல; அவை கலாச்சாரப் வழக்கைப் பிரதிபலிப்பவை. சீர்மையின் சார்பாக வைக்கப்படும் வாதங்களில், தொழில்நுட்பத்தை ஏற்று வளர அது மொழியைத் தயாராக்கும் என்பது ஒன்று. ஆனால் தொழில்நுட்பம் மொழியின் சிக்கலான அமைப்புக்குத் தக்கமாதிரி மாறும் என்பது நாம் வரலாற்றில் காணும் உண்மை. இன்னொரு வாதம் இது: சீராக அமைத்த நெடுங்கணக்கு எளிமையானது; அது எளிமையாக இருந்தால் தமிழர்களின் எழுத்தறிவு (literacy) கூடும்; குழந்தைகள் குறைந்த நேரத்தில் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்வார்கள். ஆனால், /உ,ஊ/வின் மூன்று வேறுபட்ட உயிர்க்குறிகளால் தமிழர்களின் எழுத்தறிவு குறைவாக இருக்கிறது என்பதற்கோ குழந்தைகள் தமிழ்மொழிக் கல்வியில் பின் தங்குகிறார்கள் என்பதற்கோ ஆராய்ச்சிச் சான்று எதுவும் இல்லை. மாறாக, தமிழ் நெடுங்கணக்கை விடச் சிக்கல் நிறைந்த நெடுங்கணக்கு உள்ள மொழி பேசும் சமூகங்கள் கல்வியில் முன்னேறியிருக்கின்றன. நிரூபிக்கப்படாத கொள்கைகள் கலாச்சார வெளிப்பாடான எழுத்தை மாற்றப் போதுமான வலிமையுடையவை அல்ல.

கணினியில் தமிழ் எழுத்துகளின் வெளியீடு (output), மென்பொருள் எழுதுவோரின் அழகுணர்ச்சியையும் கணினியின் வேலைத் திறனைச் சீர்ப்படுத்தும் நோக்கையும் சார்ந்தது. இது /டி,டீ/க்கும் பொருந்தும். அச்சு வந்தபோது தமிழ் எழுத்துகளின் வடிவங்களை அச்சு வார்த்தவர்கள் முடிவு செய்தார்கள். இப்போது எழுத்துருக்களை அமைக்கும் கலைஞர்கள் (font designers) உண்டு. இவர்கள் அனைவரின் படைப்புத் திறனில் இருக்கிறது மின்னச்சுத் தமிழ் எழுத்தின் அழகு.

படம்: அண்ணாகண்ணன்

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *