நிலவொளியில் ஒரு குளியல் – 21
ஸ்ரீஜா வெங்கடேஷ்
நம் தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்கள் வந்துவிட்டாலே கோயில்களில் திருவிழாக்களும் தேரோட்டங்களும் தொடங்கிவிடும். இந்தப் பத்தியைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு எங்கள் ஊரான ஆழ்வார்குறிச்சி ஓரளவு அறிமுகம் ஆகியிருக்கும். அதன் பக்கத்து ஊர் மலையை ஒட்டிய சிவசைலம். அங்கே சிவசைல நாதர், பரமகல்யாணி அம்பாள் திருக்கோவில் ஒன்று உண்டு. மிகவும் பழம் பெருமை வாய்ந்த கோவில். அது மலைப்பாங்கான கிராமம் என்பதால் அங்கு தேரோட்டம் நடத்த முடியாது என்ற காரணத்தாலோ என்னவோ அந்தக் கோயில் தேரோட்டம் ஆழ்வார்குறிச்சியில் வைத்து நடக்கும். தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாளன்று புஷ்பப் பல்லக்கோடு திருவிழா முடியும். வருடத்தின் (தமிழ்) கடைசி நாள்தான் தேரோட்டம்.
சுற்று வட்டாரக் கிராமங்களிருந்து பலவிதமான மக்கள் கூடுவார்கள். ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் இருக்கும். அங்கே நீர் மோர் தருவார்கள். அந்த வெயிலுக்குத் தேர் இழுக்கும் சிரமத்துக்கும் அந்த நீர் மோர் அமுதமாக இருக்கும். சிம்சன் கம்பெனி முதலாளிகளுக்கு ஆழ்வார்குறிச்சி தான் சொந்த ஊர் என்பதால் அவர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். அவர்களுடையது தான் இருப்பதிலேயே பெரிய தண்ணீர்ப் பந்தல். ஸ்வாமி தேர் மிகப் பெரியது. அதை ஆண்கள் மட்டுமே இழுப்பார்கள். அம்மன் தேர் சிறியது. அது, பெண்கள் ஸ்பெஷல். பாட்டுகளும் ஊக்குவிப்பு முழக்கங்களுமாக இரண்டு தேர்களும் நிலையை அடைய எப்படியும் மதியம் ஆகி விடும்.
அதே போன்ற திருவிழா தான் மயிலாப்பூரில் நடக்கும் அறுபத்து மூவர் என்று கேள்விப்பட்டேன். சென்னை போன்ற பெரு நகரத்தில் தேர்த்திரு விழாக்கள் நடப்பதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது. காலை 7:30க்கெல்லாம் தேர் இழுக்க ஆரம்பிப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். என்னால் போக முடியவில்லை அதனால் மறு நாள் அறுபத்து மூவர் உற்சவத்துக்கு சாயங்காலம் என் மகளையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து கபாலி கோயில் நடை தூரம் தான். நடந்து போகும் பாதையில் எல்லாம் பக்தர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய வண்ணம் இருந்தனர். வாணிகர் சங்கம், இந்து நாடார் சங்கம் என்று ஓரிரண்டு சங்கங்கள் தான் கண்ணில் பட்டனவேயொழிய முக்கால்வாசி தனியார்கள் அளித்த அன்ன தானங்களாகவே இருந்தன.
வெண்பொங்கல், கேசரி என்று பல இடங்களில் தொன்னையிலோ, பிளாஸ்டிக் கப்பிலோ கொடுத்தார்கள். ஒரு இடத்தில் பிரியாணி என்று தான் நினைக்கிறேன், இல்லை, தக்காளி சாதமா தெரியவில்லை அது கொடுத்தார்கள். மற்றுமோரு இடத்தில் ஊத்தப்பங்களும் சட்னியும் கூட வழங்கப்பட்டன. மேற்சொன்ன இரு இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்று வாங்கிப் போனார்கள். இவை தவிர எலுமிச்சைச் சாறு, பானகம், ரோஸ்மில்க் போன்ற பானங்களும் வழங்கப்பட்டன. எண்ணிறந்த மாலை தோடு முதலியவை விற்கும் கடைகள் இருந்தன. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஆனால் குழப்பமோ, அமைதிக் குறைவோ ஏற்படவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஒரு விஷயம் என்னை உறுத்தியது. அது எந்த ஒரு இடத்திலும் ஒரு குப்பைத் தொட்டி கூடக் கிடையாது. அன்னதானம் வாங்கிச் சாப்பிட்டவர்கள், அந்த பிளாஸ்டிக் கப்புகளையும், பானங்கள் குடித்தவர்கள் அந்த பிளாஸ்டிக் டம்ளர்களையும் அப்படி அப்படியே போட்டு விட்டு போய்க்கொண்டிருந்தனர். சிலர் உணவுப் பொருட்களோடு சேர்த்து வேறு போட்டு விட்டுப் போயிருந்தனர். அதன் மேலேயே நடந்து மற்றவர்களையும் அந்தக் காலாலேயே மிதித்து, அந்த இடமே அசுத்தமாக இருந்தது. இன்னும் சற்று நேரம் போறுத்து அவற்றிலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்திருக்கும். இது எவ்வளவு சுகாதாரக் கேடு?
அறுபத்து மூவரில் பக்தர்களுக்கு அன்னதானமும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைப்பதும் மிகவும் நல்ல செயல். அதோடு அதன் கழிவுகளைப் போட ஒரு குப்பைத் தொட்டி வைத்தல் அதை இன்னும் சிறக்கச் செய்யும் அல்லவா? பாதுகாப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்தும் அரசு சுத்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். மாநகராட்சிப் பணியாளர்கள் எப்போது வந்து அந்த அசுத்தங்களை சுத்தப் படுத்த? “சுத்தம் சொறு போடும்” என்று அவ்வை சொன்ன வாக்கிற்கு மாறாக சோறு போட்டதால் சுத்தம் போனது. மாநகராட்சி சார்பாக ஒரு குப்பைக் கூடை கூட வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தூய்மைப் பணியைக் கவனித்து வரும் நீல் மெட்டல் கம்பெனிக்கு இது குறித்த தகவல்கள் போய்ச் சேரவில்லையா? இல்லை இது அவர்களின் அலட்சியமா? தெரியவில்லை.
என்னைத் தவிர யாருமே அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவ்வாறு கப்புகளைக் கீழே போட்டவர்களை ஏசிக்கொண்டே அவர்களும் அதையே தான் செய்தார்கள். நமக்கு ஏன் இந்த மனப்பான்மை? கலப்படமில்லாத சுயநலம்தான் காரணம். என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்று குப்பைகளைக் கூட்டி, அடுத்த வீட்டு வாசலிலோ அல்லது தெருவிலோ தள்ளுபவர்கள்தானே நாம்? வீடு என்னுடைய இடம். பொது இடங்கள் பலர் வந்து செல்லும் இடம். அதன் சுத்தத்திற்கான பொறுப்பு என்னதல்ல. அதை அரசு கவனிக்கும் என்ற சோம்பேறி மனப்போக்கும் ஒரு காரணம். நாம்தானே உணவு வழங்குகிறோம், அப்படியெனில் அந்த இடத்திற்கான சுத்தமும் நம் பொறுப்பு என்பதை யாரும் உணரவில்லை. மறு நாள் காலையில் நடைப்பயிற்சிக்காக சென்ற என் கணவர் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்தார்.
இது தவிர ஒரு கேலிக் கூத்தும் நடந்தது. கடவுளர்களின் சப்பரங்கள் உலா வரும் இடத்தில் ஒரு பெண்மணி நின்றுகொண்டு, போவோர் வருவோரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து அவர்களோடு மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார். சில அன்பர்களும் சற்று தொலைவில் நின்று அவ்வாறே செய்தனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஏதேனும் தேவார, திருவாசப் பதிகத்திலிருந்து சில பாடல்களை மாத்திரம் தொகுத்து வழங்குகிறார்களோ என்ற ஆர்வத்தில் அவர்கள் அருகில் சென்றேன். என்னை ஏனோ அவர்கள் லட்சியம் செய்யவில்லை. நானாகச் சென்று அது என்ன என்று கேட்டேன்? கழுத்தில் ருத்திராட்ச மாலை மட்டுமே அணிந்த அந்தப் பெண் ஸ்வாமி நித்யானந்தாவின் படம் அச்சிட்ட அந்த காகிதத்தைக் காட்டி, அவரின் அருமை பெருமைகளை எடுத்துச் சொன்னார்.
இல்லையில்லை, நீங்கள் நினைக்கும் அருமை பெருமைகள் இல்லை. நிஜமாகவே அவர் ஒரு சித்தர் என்றும், பலருடைய வியாதிகளைப் போக்கியிருக்கிறார் என்றும் இன்னும் என்னென்னவோ கூறினார். அவர் கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் அவர் ஒரு அவதார புருஷர் என்பதில் ஐயமிருக்காது. கண்ணால் கண்ட CDக்கள், புகைப்படங்கள் அனைத்தும் விரோதிகளால் தயாரிக்கப்பட்டவை என்பது அவர்கள் தரப்பு வாதம். நல்லது அப்படியே இருக்கட்டும்.
புண்ணிய பூமியான நம் பாரதத்தில் மன அமைதி தேடி நம் மக்கள் ஏன் சாமியார் பின்னால் ஓடுகின்றனர். ஆன்மீகம் என்பது ஓர் அற்புதமான விஷயம். நம்மைக் கடவுளோடு இணைக்கும் ஒரு விஷயம். இதில் நடுவே சாமியார்கள் எதற்கு? நம்மைப் படைத்தவருடன் நாம் பேச இடைத் தரகர்கள் தேவையில்லை. மிகப் பழங்காலத்தில் குரு என்ற ஒரு முறை தான் இருந்தது. குரு என்பவர் கடவுளை அடையும் வழிமுறைகளைச் சொல்லித் தருபவர். கவனியுங்கள் வழிமுறைகளைத்தான். அதைக் கேட்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப கடவுளை வணங்குவது தான் நாம் பரம்பரையாகப் பின்பற்றி வரும் பழக்கம்.
அவர்கள் வழிகாட்டிகள்தான். அவர்கள் கடவுளை அடைய ஒரு வழி, அவர்களே கடவுள் அல்ல. இதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். மேலும் மன அமைதியின்மைக்கு நமக்குள்ளே மருந்து தேட வேண்டுமேயன்றி ஏதோ ஒரு சாமியார் ஆசிரமத்துக்குச் சென்று, அங்கே அவருக்கும் அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் தொண்டு செய்வதால் அமைதி வந்து விடாது. அப்படி தொண்டு செய்தால் மன அமைதி கிடைக்கிறதென்றால் வீட்டுக்கு அருகிலேயே எத்தனையோ தொண்டுகள் செய்யலாமே. அதற்கு நமக்கு மனம் இருப்பதில்லை. நம் பாரத பூமியில் , பகவத் கீதையில் கடமைதான் முதலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நம் குடும்பத்துக்கு, சமூகத்துக்கு, ஆற்ற வேண்டிய கடமைகளே பெரிதெனக் கூறப்பட்டுள்ளது. அப்படி தன் கடமையைச் செய்பவனைத் தேடிச் சென்று வீடு பேறு அளிப்பதாகப் பகவான் கூறுகிறார்.
இதோ தேர்தல் வரப் போகிறது. அதில் நாம் அனைவரும் ஓட்டுப் போடுவது நம் ஜனநாயகக் கடமை. நம்மைப் போன்ற படித்தவர்கள் அதைத் தவறாமல் செய்தாலே நிச்சயம் நம் நாடு எவ்வளவோ வளமாக இருக்கும். இந்த முறையாவது நாம் அனைவரும் நம் கடமையைச் செய்வோம் தேர்தல் நாளில்.
சுத்ததையும் ஆன்ம பலத்தையும் தன் இரு கண்களெனக் கருதும் இளைய சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுத்துக்கொண்டு நிலவொளியில் ஒரு குளியல்.
(மேலும் நனைவோம்…
========================================
படங்களுக்கு நன்றி: தினமலர், http://nithyananda.org
Very nice artice. I will defenitely remember these good thoughts. I will defenitely follow cleanliness and try to keep my surrounding clean. Not only me, I will suggest everybody to do this. Romba unnmaiyana oru paththi. Nalla soneenga.
மிகவும் அருமையான கருத்து. அறுபத்து மூவர் முடிந்த மறுநாள் காலை கபாலி கோயில் பக்கம் சென்றிருந்தேன்; கோவில் சுற்று வட்டாரமே குப்பை கூளங்களுடன் காணப்பட்டது. சித்திரை குளம் மற்றும் மாட வீதிகளில் குப்பைகள் மலை போல் குவிந்து, துர்நாற்றமும் வீசியது. நம் மக்களிடம் சுத்தம் என்ற மனப்பான்மை வெறும் பேச்சளவில்தான் உள்ளது.
நன்றாக எழுதியதற்கு வாழ்த்துகள்.
Good. Everyone should take responsibility to clean in around our sorroundings. Particulary, where there is crowd.
Thanks
Saradha Sridharan
கட்டுரை மிகவும் அருமை சுத்தம் தான் சோறு போடும் . உடலையும், உள்ளத்தையும் மற்றும் சுற்று புறத்தையும் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் .
நன்றாக எழுதியதற்கு வாழ்த்துகள் நன்றி.
திருச்சி ஸ்ரீதரன்
Congrats for once again touching a social issue of cleanliness. I fail to understand one thing. If the real intention is to provide food for poor, it can be done any day. Why to choose the chaotic 63-var day and waste food and make things haphazard?
You had reminded our Chitra Festival occasion. Even though I am inSenegal, I was able to recollect all these occasions and I had travelled to Madurai and from Senegal with in a second. Fortunately, I am also comming to India on 01st April and I am planning to see all these functions at madurai this time. Thanks a lot for giving these important informations to our generations.
Really superb article. Thanks mami.
regards
K. Ramesh
We have sixth sense. Animals only eat the food and leave the remaining food as such. We are all human being each and every person should have responsibility to keep our surrounding clean.
Even though dustbin is not available we should leave the waste material at beside of road ( the area where the people will not walk). Next day it will be removed by the cleaning agency
It is also mistake of food distributers. If we decide to distribute free food for 500 people, we should give quality food. For example let us assume three type of foods are distributed by three different parties, If one devote like lemon rice first he will get lemon rice only if the quality is not good, he threw away that food(since it is available at fee of cost) and he will try for next item, curd rice etc.
Madam Explained about Nithyananda. People should beat the person who distributes bit notice about him. If it happened two three places, nobody will talk about him.
Voting is our duty and responsibility. We all should vote. Dear viewer please don’t forget to vote on 13/04/2011.
சுத்தம் சோறு போடும் இதை உணர்தல் நம் கடமை
i also agree with u.i went there on that day.that place was full of garbage.no one was worried about that.we felt very bad to walk.