நாக்கே என் கட்டுப்பாட்டில் இரு

விசாலம்

உடல் உறுப்புகளில் ஒன்றான நமது   ‘நாக்கு’ இருக்கே   அதை  என்னவென்று சொல்ல!   வெளியே தெரியாமல் உள்ளடங்கி இருக்கிறது. சிருஷ்டிகர்த்தா வேண்டுமென்றுதான் அதை உள்ளே வைத்திருக்கிறார்  போலும்.  நம் உதடுகள் நாக்கை வெளியில் தெரியாமல்  மூடி வைத்திருக்கின்றன. ஒருவன் வாழ்க்கையில் நல்ல பெயர் எடுத்து முன்னுக்கு வருவதும்  பின் தங்குவதும் இந்த நாக்கின் காரணத்தினால் தான். நாக்கு சுத்தத்தினால் ஒருவன் வாழ்க்கையின் ஏணியில்  ஏறி வெற்றி பெறுவும் செய்கிறான்.  அதே நாக்கைக் கட்டுப்படுத்தாமல்   பாதாளத்தில்  விழவும்  செய்கிறான்.

ஒருவனை   ஆரோக்கியமாக்கவும், ரோகமாக்கவும் இந்த நாக்கினால் தான் முடியும். 

“நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும் ” என்ற பழமொழியும் உண்டு.

“யாகாவாராயினும் நா காக்க ,காவாக்கால் 
 சோகாப்பர்   சொல் இழுக்குப்பட்டு ”  என்று குறளும் கூறுகிறது.

ஒரு சமயம்  என் மகன்  தான் வேலை செய்யும் கம்பெனியின் சார்பில்  இன்டர்வியூ   எடுத்தான். காலியான இடம்  வைஸ் பப்ளிக் ரிலேஷன் ஆபீசர்  போஸ்ட். அதில்   ஒருவர் மிகவும் படித்தவர். பல பட்டங்கள் அவர் பெயருடன் இருந்தன. மற்றவர்  கிராஜுவேட் தான்.  ஆனால் நேர் காணலில் சிரித்த முகத்துடன் அன்பொழுகக்  கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்த  அந்தச் சாதாரண கிராஜுவேட்டுக்கே வேலை கிடைத்தது. என் மகனிடம் இது பற்றிக்கேட்டேன்.

“ஏன் ராஜா  இத்தனைப்படிப்பு படித்தவருக்கு இந்த வேலை கிடைக்கவில்லை?”

“அம்மா அவர் நாக்கு சரியா இல்லை. பேசும் விதத்தில் தான் என்ற எண்ணம் மிகுந்து காணப்பட்டது.  நான் கொடுக்கப்போகும் வேலைக்கு  இவர் சரி வராது. சூடான நாக்கு இதற்கு இருக்கக்கூடாது, பேச்சில் இனிமை  வேண்டும். அப்போதுதான் பிஸினஸ் க்கு  வெற்றி.  நிறைய  கிளையன்டஸ் பிடிக்க முடியும்”   என்றான்.

மாமியார்  மருமகள்  பிரச்சனை வருவதே இந்த நாக்கின் காரணத்தினால் தான். “இவள்  என்னை எதற்கு சொல்ல வேண்டும்” என்ற   ஈகோ தலைக்கு மேல் ஏற  அது   நாக்குக்கு வேலை வைக்கிறது. நாக்கும் “படபட” வென பொழிகிறது.  பின் இருக்கவே இருக்கிறது   “தலைகாணி மந்திரம்”. இதனால் வரும் விளைவு !   பிள்ளையின் மூடு அவுட். வீட்டில் பூசல் ஆரம்பம். இதெல்லாவற்றுக்கும் காரணம்  அந்த நாக்கே தான்.

மதில் மேல் இருக்கும் பூனை போல்  இந்த நாக்கைச் சொல்லலாம். இந்தப் பக்கமும் அது குதிக்கலாம் அந்தப்பக்கமும் அது குதிக்கலாம். அதாவது நாக்கு நமது நண்பனாகவும் ஆகமுடியும். எதிரியாகவும் ஆகமுடியும். இனிமையாகப் பேசவே  நாக்கை உபயோகித்தால் பிரச்சனை வர ஏதுமில்லை. கடவுள் நாக்கை எப்போதும் ஈரமாக அதாவது குளிர்ச்சியாக  வைத்திருக்கிறார். சுடு சொற்கள் வந்து  நாக்கு காய்ந்து போய்விட்டால்  என்ன செய்வது என்பதனால் தானோ  உமிழ்நீர் எப்போதும் கசிய வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். நாக்கினிலிருந்து  விழும் சொற்கள் தேன் போல் பாய வேண்டுமே தவிர நெருப்பைப்போல் ஒருவரை சுடக்கூடாது.

பேசும் போதும் கவனமாக சொற்கள் பிறழாமல் பேசவேண்டும் சில சமயம் சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடும். ராமாயணத்தில்  கும்பகர்ணனை இதற்கு உதாரணமாக காட்டலாம்.

கும்பகர்ணன் முதலில் தூங்குபவனாக   இல்லை. அவன் பிரும்மாவை நோக்கி,  தன்  மரணமில்லா பெரு வாழ்வு  வேண்டி, கடும்  தவம் இருந்தான். இதைப்பார்த்த தேவேந்திரன்  கும்பகர்ணனுக்கு  கிடைக்கப்போகும் அருள்  வருவதைத் தடுத்து நிறுத்த எண்ணினான். ஏனென்றால் இராவணனைவிட கும்பகர்ணன்  உருவத்தில் பெரியவன். அவனுக்கு இன்னும் சக்தி வந்துவிட்டால்  தன் இருக்கைக்கே ஆபத்து வந்து விடும் என  எண்ணி  ஸரஸ்வதி தேவியிடம் சென்று இதை எடுத்துச்சொல்லி தனக்கு அருள் புரியும்படி வேண்டிக்கொண்டான்.  ஸரஸ்வதியும், கும்பகர்ணன் முன்  பிரும்மா  தோன்றி  வரம் கொடுக்கும் நிலையில்  அவன் நாக்கில் அமர்ந்து கொண்டாள்.

கும்பகர்ணன்  கேட்க இருந்த வரம்    ” எனக்கு  நித்யத்துவம்   வேண்டும் ”  என்று ……….

ஆனால்  அவன் நாக்கில் அமர்ந்த  ஸரஸ்வதி  அவன் நாக்கைக்கொஞ்சம் குளற வைத்தாள்.

“நான்முகனே   எனக்கு நித்ரத்துவம்  வேண்டும்  அதைக்கொடுத்து அருளுங்கள்”

நித்ரத்வம் என்றால் தூக்கம் ………

நான்முகன்  ஆச்சரியத்துடன் அவனை நோக்கிய பின்  வரத்தையும்  அளித்தார்.  பின்  தன் நாக்கு செய்த சதியை நினைத்து நொந்து போனான்  கும்பகர்ணன். வாழ்நாள் முழுவதும் தூங்க, வாழ்க்கை என்பதற்கே அர்த்தமில்லாமல் ஆகிவிடும் என்பதனால் ஆறுமாதம்  தூக்கம், ஆறுமாதம் விழிப்பு என மாறியது பிரும்மா  அளித்த வரம்.

இனி ஆகாரத்துக்கு வருவோம்.   சர்க்கரை வியாதி  உள்ளவர்கள் இனிப்பை வளைத்து தின்றார்கள் என்றால் அது   எதில் முடியும்? அதே போல் வயிற்றில்  புண் இருக்க,  நாக்கைக் கட்டாமல்    ஊறுகாயில் புகுந்து  விளையாட   என்ன நடக்கும்? 

நாக்கு தான்  ருசிக்கு அதிபதி. நுனி நாக்கில் இனிப்பு உணர  முடியும்,  அடிநாக்கில்  கசப்பு அதிகமாக உணரமுடியும். சாப்பாடு விஷயத்தில்  கொஞ்சம் கவனக்குறை இருந்தாலும் ஆபத்து தான்  .  “ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடு” என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க,  நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

சிலரைப்பார்த்து   ” இவனுக்கு நாக்கு ரொம்ப நீளம் ” என்று சொல்வதுண்டு. சாப்பாட்டில் கொஞ்சம் எதாவது குறை தெரிந்தாலும் அதை உடனே சுட்டிக் காட்டுவார்கள். “உப்புமா அடிபிடிச்ச வாசனை அடிக்கறதே” ,,,,”வத்தக்குழம்பில் ஒரே புளி” …….”ரொட்டி  தோல் போல இருக்கே”  …..என்று  ………இந்த நாக்கு நீளக்காரரைத் திருப்தி  செய்வது  கொஞ்சம் கடினம் தான்.

தவளை  பல்லி பஞ்சோந்தி போன்ற ஜந்துக்களுக்கு உண்மையாகவே நாக்கு நீளம். அவை  நாக்கை  தன் வாயிற்குள் சுருட்டி வைத்திருக்கும். ஏதாவது பூச்சி அருகில் அமர,  தன் நீள நாக்கை வெளியில் நீட்டி  அதைத்தொடும்.   அந்த நாக்கின் நுனியில் பசை போல்  திரவம் இருப்பதால் பூச்சியும் பிசுக்கென்று  அதில் ஒட்டிக்கொள்ளும்.

சிலருக்கு  வாயில் புகையிலை அடக்கும் பழக்கமும்,  சிலருக்கு  பான் பராக்  மெல்லும் பழக்கமும்  இருக்கும்.  இந்தப்பழக்கத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும். நாக்கில் கேன்ஸர்   வந்தால் வைத்தியம் செய்வது மிக  கஷ்டம்.  நாய், பூனை மேலும் சில காட்டு மிருகங்களுக்கு நாக்கு மிகவும் சொரசொரப்பாக இருக்கும்.  அவை  தங்கள் உடலை நாக்கின் மூலம் சுத்தப்படுத்திக்கொள்ளும்.

தங்கள் உஷ்ணத்தைச் சீராக்கிக்கொள்ளவும்,  தங்கள்  நாக்கை  உபயோகிக்கின்றன. நாய் வேகமாக ஓடி வந்த பின்னர் தன் நாக்கு முழுவதும் வெளியே தொங்க போட்டபடி அமரும். இதனால் அது  தன்  சூட்டைக்குறைத்துக்கொள்கிறது .

மொத்தத்தில் நாக்கைப் பற்றிக் கூற வேண்டுமானால்

“எண்சாண் உடம்புக்கு  சிரஸே பிரதானம் “

“ஏற்றமிகு வாழ்வுக்கு நாக்கே  பிரதானம்”

About விசாலம்

எழுத்தாளர்

2 comments

  1. இளங்கோ

    ஏதாவது வாய்க் கொழுப்புல பேசினா ” நாக்கை இழுத்து வச்சு அறுக்கனும்” னு சொல்லுவாங்க எங்க ஊர்ப் பக்கம்.  அது போல ஆயிடும்னு, அதையே பதமா சொல்லியிருக்குறீங்க நீங்க. நல்லா இருக்குது இந்தக் கட்டுரை

  2. முகில் தினகரன்

    அடேங்கப்பா….நாக்கில் இத்தனை விஷயங்களா?
    திருக்குறளில் ஆரம்பித்து…ராமாயணத்தைத் தொட்டு…மாமியார் மருமகள் இடையில் புகுந்து…ஜந்துக்களையும் விட்டு வைக்காமல்….லாகிரி வஸ்துக்கள் பற்றிச் சொல்லி…ம்ஹூம்….அம்மா…வணங்குகிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க