உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-6)

ராமஸ்வாமி ஸம்பத்
‘வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோன் அமரும் சோலை’ என்றெல்லாம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரால் வர்ணிக்கப்பட்ட திருவரங்கத்தை அடைந்த முல்லைத்தேவன் கங்கையிற் புனிதக் காவிரியில் நீராடி விட்டுப் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனைச் சேவித்தான். பிறகு அந்த ஆலயத்தில் இருந்த அரையர்களுடனும் பட்டர்களுடனும் உரையாடித் தன் அரசனின் தில்லைப் புனரமைப்புத் திட்டத்தின்மீது அவர்கள் கருத்துக்களைச் சேகரித்தான்.

அதன் பின்னே வைணவத்தின் எழுஞாயிறு எனத்திகழ்ந்த பகவத் ராமானுஜர் தங்கியிருந்த மடத்திற்குச் சென்று அம்மகானுடன் கலந்து ஆலோசனை செய்ய விழைந்தான். அதற்குமுன், ’இராமானுச நூற்றந்தாதி’ என்ற யதிராஜரைப் போற்றும் பிரபந்தத்தினை இயற்றிய மூங்கிற்குடியைச் சேர்ந்த திருவரங்கத்து அமுதனாரைச் சந்தித்தான். அரங்கன் கோவில் நித்தியப்படி நிர்வாகத்தினைக் கவனித்து வந்த அவரது இயற்பெயர் பெரிய கோயில் நம்பி ஆகும். அமுதம் போன்ற இனிய குரலில் திவ்யப்ரபந்தப் பாசுரங்களை இசைக்கும் அவரை உடையவரே ‘அமுதனார்’ என்று அழைக்கலானார். அன்னாரிடம் தில்லையில் நடக்கப்போகும் விபரீதத் திட்டத்தை விவரித்தான். அமுதனார் உள்ளம் பதறிப்போய் அவனை உடையவரிடம் அழைத்துச் சென்றார்.

அவ்வமயம் எம்பெருமானார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநக்‌ஷத்திரங்களைக் கண்டவராய் மெலிந்த மேனியராய் தனது பீடத்தில் அமர்ந்து கொண்டு ‘த்வய மந்திரங்களை’ [ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய] மாறி மாறி ஜபித்துக் கொண்டிருந்தார். அவர் திருமுகத்தில் தன் மானசீக குரு யாமுனர் என்கிற ஆளவந்தாரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து விட்ட திருப்தி மேலோங்கியிருந்தது.

அமுதனார் மெள்ள யதிராஜர் அருகில் சென்று, முல்லைத்தேவனை அறிமுகம் செய்து வைத்து அவன் கொண்டுவந்த பயங்கரமான செய்தியைத் தெரிவித்தார்.

கண்களில் நீர்மல்க அப்பெருந்தகையாளர் ”இப்படியும் ஒரு அநியாயம் நடக்குமா? இது திருச்சித்திரகூட கோவிந்தராஜருக்கு அடுக்குமா?” என்றார்.

முல்லைத்தேவன் தாளும் தடக்கையும் கூப்பி யதிராஜரிடம் இவ்வாறு விண்ணப்பித்தான்: “எம்பெருமானாரே! இந்த விபரீதத்தைத் தவிர்க்குமாறு எம்மன்னனுக்குத் தங்களிடமிருந்து ஒரு மடலை என் மூலம் அனுப்பி வைத்தால் அவன் தங்கள் சொல்லைத்தட்ட மனமில்லாமல் தன் திட்டத்தை ஒருவேளை கைவிடலாம்.”

”நம்பெருமாளைத் தவிர யான் எவரிடமும் எதையும் யாசிப்பதில்லை. நீர் அக்கிழக்குத்தை ராஜாவுக்கு அந்தரங்க ஒற்றன் அல்லவா? தயை செய்து இவ்வரங்கனடியானின் கருத்தினை உம்மன்னனிடம் சொல்லி இந்தப் பாபத்தைச் செய்யாமல் தடுக்கவும். உம் கடமையைச் செய்து விட்டு அதன் பலனை அந்த லக்ஷ்மிநாராயணனுக்கே விட்டு விடவும். அவன் பார்த்துக் கொள்வான்.”

இதற்கு மேல் யதிராஜரை வற்புறுத்த இஷ்டமில்லாமல் முல்லைத்தேவன் தன் வைணவத்தைத் தழுவும் விருப்பத்தை அவர் முன் வைத்தான். மிக்க மகிழ்ந்த உடையவர், “ஒரு முக்கிய பணி நிமித்தம் திருப்பதிக்கு இன்று இரவு புறப்படவுள்ளேன். ஆகவே உன்னை வைணவனாக்கும் பணியினை அமுதனார் நாளைக் காலை நிறைவேற்றுவார்,” என்று அவனுக்கு ஆசி கூறி விடை கொடுத்தார். பிறகு தன் சீடரில் ஒருவரான வடுக நம்பி (ஆந்திர பூர்ணர்) அவர்களின் தோளைப்பற்றியவாறு மெள்ளத் தமது அறை நோக்கிச் சென்றார்.

மறுநாள் எம்பெருமானாரின் ஆணைப்படி, அமுதனார் முல்லைத்தேவனுக்கு ‘மாலடியான்’ என்று நாமகரணம் செய்து, நெற்றியில் திருநாமத்தினை இட்டு, இருபுஜங்களிலும் சங்க சக்கர சின்னங்களைப் பொறித்து, அவன் செவியில் ‘த்வய மந்திரங்களை’ ஓதி, அவனை ஒரு வைணவனாக்கி வைத்தார்.

பின்னர் அமுதனாரின் அடிபணிந்து விடைபெற்றுக் கொண்டு மாலடியான் வீங்குபுனல் காழி நகருக்குப் புறப்பட்டான்.

குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும்; நீள்விசும்பு அருளும்;
அருளொடு பெருநிலம் அளிக்கும்;
வலம் தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.’

”யார் இவ்வளவு இனிமையாக திருமங்கை மன்னனின் பாசுரத்தைப் பாடுகிறார்?” என்று கூறியவாறு மணிவண்ண நம்பி வாயிலை நோக்கிச் சென்றார். அங்கு வைணவச் சின்னங்களைத் தரித்த வண்ணம் வாயிலில் நின்றவனைக் கண்டு மகிழ்ச்சியுடன் அவர், “குமுதா! முல்லைத்தேவன் வந்தாயிற்று” என்று கூறித் தன் மகளை அழைத்தார்.

“ஐயா, இனி என்னை மாலடியான் என்றே அழைக்கலாம். வைணவத்தைத் தழுவிய எனக்கு இப்பெயரினைச் சூட்டியவர் திருவரங்கத்து அமுதனார் ஆவார். இது திருவரங்கத்தில் நேற்று யதிராஜர் ஆணைப்படி நடந்தது” என்றான்.

ஆனந்தத்தில் திளைத்த குமுதவல்லி, மாலடியானைக் காதல் பொங்கும் கண்களால் நோக்கினாள்.

சில நாட்களுக்குப் பின் அவர்கள் திருமணம் தாடாளன் சன்னிதியில் எளிய முறையில் நடந்தேறியது. தாயுமானவரும் மட்டுவார்க்குழலியும் காழி நகருக்கு வருகை புரிந்து இளம் தம்பதியரை வாழ்த்தி விடைபெற்றனர். மணிவண்ண நம்பியின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

மாலடியான் குமுதவல்லி இருவரும் இல்லற வாழ்க்கையைச் செவ்வனே நடத்தினர். அரச அலுவல் நிமித்தமாக அவன் அடிக்கடி வெளியூர் செல்ல நேர்ந்தாலும் அப்பணி தன் இல்லறத்துக்கு இடையூறாக இல்லாமல் பார்த்துக்கொண்டான். மணிவண்ண நம்பி அவர்கள் கூட இருந்தது ஒரு வகையில் உபயோகமாகவே இருந்தது.

தனக்கு இட்ட பணியினைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டு ஒருநாள் மாலடியான் தன் அரசனைக் கண்டு தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தான். அதனைப் படித்த மன்னன் சினம் கொண்டு, “இதற்காகவா உன்னைப் பல இடங்களுக்கு அனுப்பினேன்? என் திட்டத்திற்குச் சாதகமான சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்துவாய் என்றல்லவா நினைத்தேன்” என்றான்.

“மன்னிக்க வேண்டும் மகாராஜா. நான் ஒரு ஒற்றன். என் பணி நாட்டு நடப்பினை உள்ளது உள்ளபடி தங்களுக்குத் தெரியப்படுத்துவது. வைணவர்கள் மிகவும் கோபமாக இருக்கின்றனர். கோவிந்தராஜர் சிலையைக் கடலில் எறியும் தங்கள் திட்டம் நாட்டில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தும். திருவரங்கன் கோவிலை மற்றும் பகவத் ராமானுஜர் மடத்தைச் சார்ந்தவர்களும் குலோத்துங்கச் சோழ மன்னனுக்கு இது பற்றி ஒரு மடலைச் சமர்ப்பிக்கப் போகிறார்கள். பல சைவர்கள் தங்கள் பொன்னம்பலத்தை விரிவாக்கும் திட்டத்தை வரவேற்றாலும், ஒரு கடவுளின் சிலையைக் கடலில் எறியும் செய்கையை ஒப்பவில்லை. ஆகவே தாங்கள் அச்செயலைத் தவிர்த்து, அவ்வண்ணலுக்கு ஒரு தனி ஆலயத்தை நிர்மாணிக்கலாம்” என்றான் மாலடியான்.

“ஓஹோ, எனக்கே ஆணையிடுகிறாயோ? என் திட்டத்தில் ஒரு மாற்றமும் கிடையாது. தில்லைவாழ் மூவாயிரர்கள் (பொது தீக்‌ஷிதர்கள்) எனக்கு முழு ஆதரவு அளிக்கச் சித்தமாக உள்ளனர். குலோத்துங்கனோ விக்கிரமனோ இது பற்றி இப்போது கவலைப் படமாட்டார்கள். மேலும் சோழ வாரிசு பற்றிய சர்ச்சை ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்தனனுக்குக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் ஏனைய சிற்றரசர்களும் இடங்கை வலங்கையரும் தங்கள் தங்கள் திட்டத்துடன் தயாராக இருக்கிறார்கள். மீண்டும் உள்நாட்டுப்போர் வெடிக்கப் போகிறதோ எனும் ஐயப்பாடு எங்கும் காணப்படுகிறது. இதை விட நல்ல தருணம் எனக்குக் கிடைக்குமா என் திட்டத்தை எளிதில் நடத்தி முடிக்க?” என்று கொக்கரித்தான் அந்தக் குறுநில மன்னன்.

மேலும் மாலடியான் வைணவத்தைத் தழுவியது அம்மன்னனுக்கு எரிச்சலை மூட்டியது. “இப்போது நீ என் எதிர்க்கட்சியில் உள்ளாய். என் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டாய். இனி உனக்கு என் அந்தரங்க ஒற்றனாக இருக்கத் தகுதியில்லை. உன்னை அப்பதவியிலிருந்து நீக்கி விட்டேன். இத்தனை நாள் எனக்குச் செய்த சேவைக்காக உன்னை உயிரோடு விடுகிறேன். இனி என் முகத்தில் விழிக்க வேண்டாம்,” என்று நஞ்சு கலந்த சொற்களால் அவனைச் சாடினான்.

மாலடியான் செயலிழந்து அமைதியாக அங்கிருந்து அகன்றான்.

 

படங்களுக்கு நன்றி: http://srivaishnavam.wordpress.com/2010/04/07/thiruvarangathu-amuthanar-periya-koyilnambi-vaibhavam

http://www.antaryami.net/darpanam/index.php/essays/random/item/313-thirumangai-mannan-in-tiruppavai

1 thought on “உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-6)

  1. முற்றிலும் புதிய திசையை நோக்கிய இந்தப் பயணம் எங்கு முடியும் என அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். விறுவிறுப்பாய்ச் செல்கிறது.  அந்தக் கால கட்டத்துச் சூழ்நிலை கண்ணெதிரே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published.