தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 1

இன்னம்பூரான்

Innamburan

இன்னம்பூரானின் இயற்பெயர், ஸெளந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்திய தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

அவருடைய அனுபவங்களில் சில: ஆசிய தணிக்கைத் துறை இதழ் என்ற உலகளாவிய இதழின் ஆசிரியராகவும், இந்திய தணிக்கைத் துறையின் உலகளாவிய பயிற்சி மன்றத்தின் தலைவராகவும், அகில இந்திய ஐ.ஏ.எஸ். வகையறா உயர் அதிகாரிகளை நேர்காணல் கண்டு தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினராகவும், பணி புரிந்தவர். அரசு சார்ந்த ஸ்தாபனங்களுக்கு ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும் பணி புரிந்தவர். இங்கிலாந்தில், ஐந்து வருடங்களுக்கு மேலாக, மக்கள் ஆலோசனை மையத்தில், ஆலோசகராக, தன்னார்வ தொண்டு செய்தவர்.

பொருளியலிலும் (சென்னை), மக்கள் ஆலோசனை துறையிலும் (ஸ்டாஃபோர்ட்ஷையர்: இங்கிலாந்து) முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இந்தியாவிலும் / இங்கிலாந்திலும் / அமெரிக்காவிலும் வசிப்பவர். எங்கிருந்தாலும், தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் இயங்குபவர். தம் தணிக்கைத் துறை அனுபவங்களை வல்லமை வாசகர்களுடன் பகிர இசைந்துள்ளார். தணிக்கைத் துறையை அரசு எப்போதும் ‘முட்டுக்கட்டை’ என்று மக்களிடையே பிரசாரம் செய்வதால், இந்தத் தொடருக்குத் ‘தணிக்கை என்ற முட்டுக்கட்டை’ என்பதையே தலைப்பாகக் கொண்டுள்ளார். இந்தத் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல் தொடர், இதுவாகவே இருக்கக்கூடும். இன்னம்பூரான் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். 2011 ஏப்ரல் 1ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்குகிறது. அதே நாளில் இந்தத் தொடரை வெளியிடுவதில் மகிழ்கிறோம். – ஆசிரியர்.
================================================================================

1. ஒரு முகாந்திரம்:

அரசு இயந்திரத்தைப் பூரி ஜெகன்னாதர் தேருடன் ஒப்பிடுவார்கள். அத்தனை மெள்ள மெள்ள நகருமாம். ஆங்கில மொழியிலேயே அந்தச் சொல், ‘ஆடாமல் அசையாமல் வரும்’ ஆமை வேகத்திற்கு உவமை ஆகிவிட்டது. உவமை, மேலும் பல விதங்களில் பொருத்தம். ஊர் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடிக்கவேண்டும்; தேர்த்தட்டில் அமர்ந்தும் நின்றும் ஆடியும் பாடியும் கூவியும் ‘பண்டா’ எனப்படும் பூசாரி இனத்தவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

நம்மூர்ப் பக்கம் வருவோம். நமக்குத் தெரிந்தது, திருவாரூர் தேர். பெரிது. பல வருடங்கள் நிலை பெயரவில்லை, திருவெறும்பூர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனம், நவீன சக்கரங்கள் பொருத்தும் வரை. இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது எழுந்த வினா: முட்டுக்கட்டை எப்படி இருக்கிறது?; முட்டுக்கட்டையை தலைமுறை, தலைமுறையாக போடும் வம்சாவளி எங்கே? எங்கே?

ஐயன்மீர்! விழாக்கோலம் கொண்ட தேர் வலமும் வந்து, பெருமான் தரிசனமும் அளித்து, மக்கள் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டிய பிறகு, சொகுசாக நிலையில் வந்து, வருடம் முழுதும் அமரிக்கையாக இருக்க வேண்டும் என்றால், முட்டுக்கட்டையாருக்கு வந்தனமும் நன்றியும் சொல்லியாக வேண்டும்.

சிறியவனாக இருந்த போது, அரியக்குடியில் தேர் வடம் பிடித்திருக்கிறேன். பதவியில் இருந்த போது, பூரி ஜெகன்னாத் தேரையும் இழுத்திருக்கிறேன். இரு தடவையும், முட்டுக்கட்டையாரின் திறனையும் துணிவையும் வலிமையையும் உடனடி செயலையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்படும் மாலை மரியாதை, தாம்பூலம், திரவிய தானம், பரிசிலாகத் தேறல் எல்லாம் உகந்தது தான் என்பதில் ஐயமில்லை. உவமித்து கூறுவது யாதெனில், அரசு இயந்திரம் தேர் போல; வடம் பிடிப்போர் மக்கள் என்க. அரசு ஊழியம் செய்வோர், பண்டாக்கள் மாதிரி. இங்கு மட்டும் உவமை அரைகுறை பொருத்தம்தான். பிறகு விளக்குகிறேன்.

இத்தனை பீடிகை எதற்கென்றால், தணிக்கைத் துறை என்ற ‘நிர்வாக முட்டுக்கட்டை’க்கு இந்தியாவில் மதிப்பு குறைவு. அரசு புறக்கணிக்கும்; ஊடகங்கள் ‘ஏனோ தானோ’; மக்கள் இருளில். இந்த குறைகள் தீர்ந்தால்தான், அரசு சுதாரித்துக்கொள்ளும். ஊடகங்கள் கவனைத்தைத் திருப்பும். மக்களும், ‘நாக்கைப் பிடுங்கிக்கறாப்போல, நாலு கேள்வி’ கேட்க முடியும். அன்று தான் ஜனநாயகம் வலுப்பெறும். சுருங்கச் சொல்லின், தணிக்கைத் துறை, மக்கள் தொண்டு செய்ய இயலும், நல்லவை நடந்தால்.

ஆங்கில அரசின் படைப்பாக 150 வருடங்களாகப் பணி புரியும், அரசியல் சாஸனத்தில் நிர்வாக ஆணிவேராகச் சொல்லப்பட்ட, இந்த இலாகாவின் செயல்பாடுகளின் பயன் மக்களை அடைவதில்லை. அமெரிக்காவில் ‘ஜெனெரல் ஆடிட் ஆஃபீஸ்’ என்ற பெயரை கேட்டாலே, அழுத குழந்தையும் வாயை மூடும். அத்தனை அச்சம்! இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனரலைத் தேர்ந்தெடுக்கும் விதம் பாரபட்சம் அற்றது; எவராலும் மறுக்க இயலாதது; வீசும் வலையும் நாலாப்பக்கமும் அலையும். ஏனென்றால், அந்த வேலை ஆயுசு பரியந்தம் உறுதி. ஒரு உபகதை இருக்கிறது. பிறகு சொல்கிறேன். இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பவர் பிரதமர், நடைமுறையில். அது பற்றியும் பிறகுதான் அலச வேண்டும். இப்போதைக்கு பீடிகை போதும்.

indian audit and accounts department logoஒரு தற்கால விவகாரத்தை அவதானிப்போம். இந்த 2ஜி சமாச்சாரம் எங்கும் நிறைந்துள்ளது – உச்ச நீதி மன்றம், பிரதமரின் ஜவாபுகள், நாடாளுமன்றத்தில் கலாட்டா, அந்த மன்றத்துக் குழுக்களின் இழுபறி, தொலைக்காட்சிகளில் தொல்லை, இதழ்களில் முணுமுணுப்பு, உலகெங்கும் இந்தியாவை பற்றி இழிச்சொல், எள்ளல்.

இதற்கெல்லாம் மூலம் ஒரு சிறிய ஆடிட் ரிப்போர்ட் – 57 பக்கங்கள்; பேசும் ஆவணங்கள் 77 பக்கங்கள்; சிறிய முன்னுரை. அதன் சாராம்சம்  ஒரு வரியில்! சும்மா சொல்லக் கூடாது. குடை சாயும் தேரை, இந்த முட்டுக்கட்டை நிமிர்த்தும் போது, அந்தத் தேர் நடுநடுங்கித்தான் நின்றது. இத்தனைக்கும், அந்த ரிப்போர்ட், கண்ட கண்ட இடங்களில் சேதி கேட்கவில்லை; ஒற்று கேட்கவில்லை; வதந்திகளை நம்பவில்லை. டெலிகாம் துறையின் ஆவணங்களும், அத்துறை அருளிய விளக்கங்களுமே ஆதாரம், இந்த ரிப்போர்ட்டுக்கு.

ஆடிட் மரபுகள் மீறப்படவில்லை. வழக்கம் போல், தணிக்கை செய்யப் போகிறோம் என்று நோட்டீசும் கொடுத்து, (தீவட்டிக் கொள்ளைக்காரன் கூட இப்படி முன்னறிவிப்பு செய்வதில்லை!). அதை எப்படி செய்வோம் என்று முன் கூட்டி அத்துறையின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தணிக்கை முடிவுகளையும் அவர்களுடன் விவாதித்து, அவர்களின் விளக்கங்களைப் பெற்றபின்தான் அது ஃபைசல் செய்யப்பட்டது. இத்தனை முஸ்தீபுகள் செய்த பின், ‘ஐயகோ! மண்ணில் வீழ்த்தினானே! இவன் உருப்படுவானா!’ என்றெல்லாம் அலறி விட்டு, ‘மீசைலே மண் ஒட்டலே’ என்று நொண்டிச் சமாதானம் கூறினால், நடந்தது, நடக்கவில்லை என்று ஆகி விடுமா என்ன?

இந்த 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பல வகைகளில் வரலாறு படைத்தது. விக்கி லீக் மாதிரி, இந்த ரிப்போர்ட்டின் கசிவுகளை, ஆவணங்கள் ஆர்வத்துடன் அணைத்து ‘குய்யோ முறையோ’ என்று கூவின. அன்றாடம் எதிர்க் கூவல்கள். ஆடிட்டர் ஜெனரல் காஷ்ட மெளனம். எங்கள் துறையில் காபந்துகள் அதிகம், தொடக்கக் காலத்திலிருந்து. ஒரு மூச்சு! ஹூம்! கசிவுகள் எல்லாம் வேறிடங்களிலிருந்து.

ஆடிட் என்றால் வேம்பு, அரசு ஆளுமைக்கு. அரசியல் சாஸனத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணாக, எல்லாக் கட்சி அரசுகளும் தணிக்கை அறிக்கையை நாடாளும் மன்றம் ஒத்தி வைக்கப்படும் தினம், மூடு விழாவை போல, வைப்பார்கள், யாரும் படித்து வினா எழுப்பக் கூடாது என்ற குற்ற உணர்வோடு. வரலாறு காணாத முறையில், இந்த ரிப்போர்ட் முதல் முறையாக, உடனுக்குடன் நாடாளும் மன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு, அரசுக்கு நெருக்கடி. ஆடிட் ஆங்கிலம், அரசு ஆங்கிலம். மற்றவர்களுக்குப் புரியாது. இந்த ரிப்போர்ட் பரவாயில்லை. படிக்க முடிகிறது. நீங்களும் நானும் அலசலாம். படியுங்களேன்.

77 பக்கங்கள் கொண்ட ஆவணத் தொகுப்பு, ஒரு நல்வரவு. மத்திய அரசை ஒரு கை பார்த்துவிட்டது. இது கூட, தணிக்கைத் துறையின் இலக்கணத்தைப் பற்றிய விளக்கம் மட்டுமே. 2ஜி விவகாரம் என்ற கந்தல் புராணம் பற்றிப் பேசும் தருணம் இது அல்ல. பிறகு வருவோம்.

ஒரு சூடான செய்தி: “ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்.” பத்து தலை ராவணனையும் தோற்கடிக்கும் மயில் ராவணன்கள் நிறைந்த நன்னாடு இது. ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும் நிறுவனங்கள் / பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சிலரே இயக்குநர்கள் / பல வருமான வரி ‘பான் கார்டுகள்’ வைத்துள்ள ஏய்ப்போர் என்றெல்லாம், அரசு கவனத்திற்கு வந்திருக்கிறதாம். ஒரு சான்று: அசத்யம் செய்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இந்தக் கூத்தெல்லாம் நான் போன நூற்றாண்டின் அறுபதுகளிலேயே கண்டுகொண்டவன். தடுத்தாட்கொண்டதால், எனக்குப் பேரும் புகழும் வந்து சேர்ந்தன. அந்தக் காலத்து கான்ட்ராக்ட் ஒன்று, கோடிக்கணக்கில். மூன்று அரையணா ஆசாமிகள் போட்டி! போடாத போட்டி! அதாவது, மூன்று பேரும் உள்கை. விதிமுறைகள், ஆணைகள், வரை முறைகள் எல்லாமே அப்பழுக்கு இல்லாமல், பரிசுத்தம். நான் திட்டவட்டமாக, அந்த ‘பரிசுத்த’ டெண்டர்களை நிராகரித்தவுடன், அம்மாநிலத்து பொதுப்பணித் துறையின் மேலதிகாரிகள் ‘புலு புலு’ என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள். என்னை விட ரொம்ப சீனியர். ராஜாஜி அன்றொரு நாள் சொன்னார், ‘என் முதல் எதிரி, கம்யூனிஸ்ட்கள் அல்ல; பொதுப்பணித் துறைதான்’ என்று. அது நினைவுக்கு வர, எங்கள் முதல்வரிடம் ஓடினேன்….

(தொடரும்………..

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 1

 1. அருமை!

  இதைத்தான் வெகுநாட்களாக எதிர்பார்த்தேன்

  தேர்கள் குலுங்காமல் நிலைக்கு வராது.குலுக்கித்தான் ஆகவேண்டும்

  முட்டுக்கட்டையும் சரியான பாதைக்கு தேரை திருப்பவே அன்றோ

  அப்படிப்பட்ட முட்டுக்கட்டைகள் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. தங்கள் நகைச்சுவை கலந்த கமெண்டுகளுடனான மிகச் சுவையான ஒரு தொடராக இருக்கப் போகிறது என்று தெளிவாக விளங்குகிறது. தொடருங்கள் ஐயா. ஆவலாகக் காத்திருக்கிறோம், பல்வேறு, நடந்த, நடந்துகொண்டிருக்கிற, நடக்கப் போகும் நாட்டு நடப்புகளை உங்கள் விசேச பாணியில் அறிந்துகொள்ள! நன்றி.

 3. வழக்கம் போல் அருமையான யதார்த்தமான சொல்லாட்சி. முட்டுக்கட்டை என்ற சொல்லையும், சரியான பொருளில் எடுத்துக்கொண்டு அதன் பயனையும் விளக்கியது அருமையான தெளிவான பார்வையைக் காட்டுகிறது. எளிமையாகப் புரிய வைத்திருப்பதும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்று. குழந்தை படித்தால்கூடப் புரியும் வண்ணம் உள்ளது, எழுத்து நடை. அடுத்த பகுதியை இப்போதே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 4. ஊழல் மலிந்த நாடு நம் பாரத திருநாடு என அன்னியரும் போற்றும் பேர் பெறக் காரணம் நமது அரசியல் வியாதிகள். அவர்களை ஆட்டி வைக்கும் தொழிலதிபர்கள் என்னும் திருடர்கள். இவர்களின் கொள்(ளை)கைக் கூட்டணிதான் நாட்டின் வளங்களைத் திருடும் கூட்டணி. இதில் ஒருவருக்கு ஒருவர் கொள்ளைக்கு உடந்தை. இவர்களையெல்லாம் தட்டிக் கேட்க முடியாத போலி சனநாயகச் சட்ட முறைகள். எருமையின் மேல் பெய்த மழையென ம(மா)க்கள். இருப்பினும் இவர்களையும் தட்டிக் கேட்க என்றைக்கும் முடியும் என நமக்கு நம்பிக்கை தரும் இரண்டு அமைப்புகள். 1. நீதித் துறை 2. தணிக்கைத் துறை.
  இவ்விரண்டு துறைகளிலும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத, நாட்டின் மீது உண்மையான அக்கறை உள்ள மனிதர்கள் பதவியில் அமர்ந்தால் மட்டுமே நாட்டிற்கும் மக்களுக்கும் சனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும். அந்த வகையில் நமது அய்யா இன்னம்பூரனார் அவர்கள் தணிக்கைத் துறையில் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த பயனளிக்கும். ஊழல் ஒழிய வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் + தொழிலதிபர்களின் மறைமுகக் கூட்டணி அம்பலப்படுத்தப்பட வேண்டும். தொடரட்டும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பணிகள்.

 5. கருத்துக் கூறிய நால்வருக்கும் நன்றி. உங்கள் ஊக்கம், எனக்கு ஆக்கம். என் முயற்சியே, நான் கற்றுக்கொண்ட பாடங்களை, வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதே.

 6. நமஸ்தேஜி. அருமையாக துவங்கி இருக்கிறீர்கள். இந்திய அரசு தணிக்கைத் துறையில் இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல. தணிக்கைத் துறையில் இருப்பவர்களும் அறிந்துகொள்ள வேண்டிய சங்கதிகள் நிறைய தருவீர்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். நன்றி..

 7. திரு.இன்னாம்பூரான்
  தணிக்கைத் துறை பற்றிய அனைத்து விவரங்களையும் அறியக் காத்திருக்கிறோம்.
  மனம் அலுத்துப் போயிருக்கும் இந்த நேரத்தில்
  அரசு இயந்திரம் எப்படியெல்லாம் தணிக்கை முட்டுக்கட்டையைத் தள்ளிவிட்டு
  ஓடிவிடுகிறது என்று தெரியவும் ஆவல். மிகவும் நன்றி.

 8. நன்றி, திருமதி. ரேவதி நரசிம்ஹன்! இரு விளக்கங்கள்:

  =>1: முட்டுக்கட்டையைத் தள்ளும் தேர் தள்ளாடும்; குடை சாயும். அரசு இயந்திரம் உருப்படாமல் போவதற்கு அது ஒரு காரணம். நாம் தான் முன்னின்று விழிப்புணர்ச்சியுடன், தேரைக் காப்பாற்றி, ஹூம்!, உத்ஸவரையும், கீழே விழாமல், கவனமாக இருக்க வேண்டும்.
  (நாளை பாருங்கள்!)

  => 2: ஒரு மாதம் ஆன பிறகும், வந்த உங்கள் கருத்துக்கு இரட்டிப்பு வரவேற்பு. வாசகர்களின் கருத்து அறிய காத்திருக்கிறேன். இதற்குப் பிறகு, இத்தொடரில் பல கட்டுரைகள் வந்துள்ளன. தயங்காமல், நிதானமாக, நேரம் கிடைத்தபோது கருத்துகள் கூறவும். I am an evangelist.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *