மது ஏன் அப்படிச் செய்தாள்?

3

பவளசங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariவீடு கலகலத்துக்கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை சமயம் என்பதால், குடும்பத்தின் முக்கிய நபர்கள், அத்தனை பேரும் வந்தாகி விட்டது. வெகு தூரத்தில் இருக்கிற மும்பை அத்தை மற்றும் மலேசியா மாமா என்று எல்லோரும் வந்தாகி விட்டது. திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள்தானே இருக்கின்றன. மது எல்லோருக்கும் செல்லப் பெண். அதனால்தான் அரசின் உயர் பணியில் இருக்கும் தில்லி மாமா கூட தவறாமல் வந்திருக்கிறார். எல்லோரிடமும் உண்மையான பாசத்துடன் பழகும் அவள் குணம் அனைவரையும் சட்டெனக் கவர்ந்துவிடும். தொலைவில் இருக்கும் உறவினர்களைக் கூட குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் இனிய வழக்கமும் கொண்டதும் அவள் மேல் அனைவரும் பாசமாக இருப்பதற்கான காரணங்கள். இந்த வயதில் முதியோர் இல்லம், மனநலம் குன்றிய குழந்தைகள், எய்ட்ஸ் நோயாளிகள் என்று ஏதாவது ஒரு முகாமில்தான் அவளுடைய விடுமுறைகள் கழியும். தயங்காமல் எவரிடமும் உதவி கேட்டு, தேவைப்பட்டவர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதிலும் திறமை அதிகம் அவளுக்கு.

நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த புண்ணியம், பல நல்ல குணங்கள் அவளிடம் இயல்பாகவே இருந்தது. குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோரும் நல்ல தங்க நிறத்தில் இருக்கும்போது, தான் மட்டும் தொட்டால் ஒட்டிக்கொள்ளுவது போல ஒரு அடர் கருப்பு நிறத்தில் ஏன் பிறந்தோம் என்று பெரும் மனக்குறை அவளுக்கு உண்டு. அம்மாவிடம் அடிக்கடி அது பற்றிக் கேட்டுத் தொணதொணப்பாள். அம்மாவும், மது வயிற்றில் இருந்த போது தான் மிகவும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டதால், நிறைய இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டதால் குழந்தையின் நிறம் கருத்துப் போய்விட்டது என்று சொல்லிச் சமாளிப்பாள். ஆனால் மதுவிற்கு அந்த விசயம், கொஞ்சம் உறுத்தல்தான். தான் ஏதோ இந்த நிறம் காரணமாக, குடும்பத்தில் இருந்து அன்னியப்பட்டு நிற்கிறோமோ, என்று கூடத் தோன்றியது அவளுக்கு.

திருமணப் பேச்சு வந்தவுடன், தன் சொந்த அத்தையின் மகனையே திருமணம் முடிக்கப் பெற்றோரும் பாட்டி தாத்தாவும் ஆசைப்பட்டனர். சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதும் ஒரு காரணம். அத்தையிடம் முதலில் கூறிய போது, அத்தை சற்றே யோசித்துவிட்டுக் கூறுவதாகச் சொன்னது, பாட்டிக்கும் தாத்தாவிற்கும் வருத்தம் அளித்தது. ஆயினும் அத்தை கூறிய காரணம் அவர்களைச் சமாதானப்படுத்தியது. ஆம், மெழுகுச் சிலை போன்று பளபளவென ஆறடி உயர்ந்து நிற்கும் தன் அத்தை மகன் அனந்தன் எங்கே, கருமை நிறமாக, 5 அடியில் அவன் கழுத்து வரை மட்டுமே இருக்கும் தான் எங்கே என்று நினைத்துத்தான் அவளும் ஒப்புதல் சொல்லாமல் இருந்தாள். ஆனால் மாமா மட்டும், “என்னம்மா இது? நிறத்தில் என்ன இருக்கிறது? உன் படிப்பு, உன் குணம் இவற்றின் முன் என் மகன் சாதாரணம்” என்றார்.

மது, பொறியியல் பட்டம் பெற்று, இப்போது ஐ.ஏ.எஸ். தேர்விற்குப் படித்துக்கொண்டிருப்பவள். படிப்பு முடித்துத் திருமணம் என்றால் நாட்கள் கடந்து விடும். தாங்கள் இருக்கும் போதே ஒரு நல்ல காரியம் நடத்திப் பார்க்க வேண்டுமென்ற தாத்தா பாட்டியின் ஆசைதான் வென்றது. ஆனால் ஏனோ அத்தை மட்டும் முழு மனதாக ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் முகத்தில் ஒரு வாட்டம் இருந்துகொண்டேதான் இருந்தது. தன் ஒரே மகன் திருமணம் என்ற பெரிய மகிழ்ச்சியெல்லாம் இல்லாமல் ஏனோ தானோ என்றுதான் காரியங்கள் செய்துகொண்டிருந்தார். பெரியவர்கள் மீதிருந்த மரியாதையில் தடை ஏதும் கூறாமல் இருந்திருப்பார் போல. தன் மகனை விட அதிகம் படித்திருக்கிறாளே என்ற எண்ணமும் இருந்திருக்கலாம் அத்தைக்கு.

நிச்சயதார்த்தம் முடிந்து 15 நாட்கள் தான் இருக்கும். அதற்குள் திருமணம் வந்துவிட்டது. வீட்டில் அனைவரும் கலகலப்பாக இருந்த போதும், மதுவின் மனத்தில் மட்டும் ஒரு சலனம் இருந்துகொண்டே இருந்தது. ஊர் முழுவதும் திருமணப் பத்திரிகை விநியோகம் முடிந்துவிட்டது. வீட்டில் குலதெய்வ வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. திருமணத்தின் போது மண்டபத்தின் வாயிலில் வைப்பதற்காக பிரம்மாண்ட பேனரும் கூட தாயாராகி வந்துவிட்டது! அத்தை மகனும் மாமன் மகளும் அழகாகச் சிரித்துக்கொண்டு அனைவரையும் கும்பிட்டு வரவேற்பது போன்ற படம்……  ஊரின் அத்தனை முக்கிய பிரமுகர்களும் பெரும்பாலும் கலந்துகொள்ளக் கூடும் என்பதால் ஏற்பாடுகள் பலமாகவே இருந்தன.

வாழ்க்கைச் சக்கரம் சுழலும்போது அது பல நேரங்கள் பாரபட்சமின்றி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட்டு விடும். அது மனித மனங்களாக இருந்தாலும் கூட அதற்குக் கவலை இல்லை. கால தேவனுக்குப் பெரியவன், சிறியவன், அறிவாளி, மூடன், மூர்க்கன், என்ற பாகுபாடெல்லாம் கூட கிடையாது. நியாயத் தராசில் அனைத்தும் சமம்.

குலதெய்வ வழிபாடு அழகாக நடந்து முடிந்தது. அன்று செவ்வாய்க்கிழமை ஆதலால் துர்க்கைக்கு நெய் தீபமேற்றி வழிபடும் பழக்கம் அத்தைக்கு உண்டு. திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஏகப்பட்ட வேலைகள். இருந்தாலும் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் தெய்வ காரியம். அதை நிறுத்தக் கூடாது என்பதற்காக எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு, கோவிலுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

கோவிலில் கூட்டம் அதிகமில்லை என்றாலும், வாடிக்கையாக இந்த நேரத்தில் தீபமேற்ற வரும் பெண்கள் வந்திருந்தனர். அப்போது தன் தோழி மாலதியைப் பார்த்து நலம் விசாரித்துக்கொண்டே மளமளவென தீபம் போடுவதற்காக, எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, சாரை அங்கிருந்த மண் கலயத்தில் பிழிந்துவிட்டு அப்படியே அந்தப் பழத்தின் பகுதியை, அழகாகத் திருப்பி விளக்காக மாற்றி, அந்த இரு தீபத்திற்கும், ஐந்து முகமாக மஞ்சள், குங்குமம் வைத்து, திரி போட்டு, நெய் விட்டு தீபமேற்றினாள்.

அந்த நேரத்தில்தான் மாலதியிடம், புதிதாக வந்த ஒரு பெண், அத்தையைக் காட்டி, “இவர் பெரிய ஐயா வீட்டு பெண் தானே” என்று கேட்டுவிட்டு அவளருகில் வந்து ஏதோ குசுகுசுவென இரகசியம் சொன்னாள். அதைக் கேட்ட மாலதியின் முகம் போன போக்கு சரியில்லை. மிக அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் போல, பாவம். உடனே மாலதியோ தன் முகத்தைப் பார்க்கவும், அத்தைக்கு ஒன்றும் புரியவில்லை. மாலதி திரும்பவும் அந்தப் பெண்ணிடம்,

“உண்மையைச் சொல், விளையாட்டாக நீ ஏதும் சொல்லவில்லையே” என்றாள்.

அந்தப் பெண்ணும், “சே, சே, அப்படியெல்லாம் விளையாடக் கூடிய விசயமா இது? அதுவும் மது என் கல்லூரித் தோழி. அவளைப் பற்றி, தேவையில்லாமல் ஒரு தவறான செய்தி சொல்ல வேண்டிய அவசியம் தான் என்ன” என்றாள்.

இவர்களின் பேச்சில் மதுவின் பெயர் அடிபடவும், சற்றே ஆச்சரியமாக, “உனக்கு எங்கள் மதுவைத் தெரியுமா? நீ அவள் தோழியா?” என்றாள் அத்தை யோசனையுடன்……

மாலதியோ, அவசரமாக, “அம்மா, நீங்க வீட்டிற்குக் கிளம்புங்கள். இந்தப் பெண் ஏதோ உளறுகிறாள் என்று நினைக்கிறேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் இருக்கும் போது இப்படிச் சொல்கிறாள் இந்தப் பெண். இதெல்லாம் சாத்தியமில்லை, நீங்கள் வீட்டிற்கு கிளம்பிச் சென்று பாருங்கள்” என்று சொன்னவுடன், அவள் வார்த்தையில் இருந்த பரபரப்பு தன்னை மேற்கொண்டு ஏதும் பேச விடாமல், சுவாமியை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு, தாயே நீயே துணை என்று சொல்லிக்கொண்டே கிளம்பினாள் வேகமாக!

வீட்டில் உள்ளே அத்தை நுழைவதற்கும், வெளியே சர்ரென கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வெளியே எட்டிப் பார்த்தால், காரிலிருந்து மது  கழுத்தில் மாலையுடன் கீழே இறங்கிக்கொண்டிருந்தாள். தன் கண்ணையே நம்ப முடியாதவளாக கண்ணை தேய்த்துக்கொண்டு திரும்பவும் பார்த்தால், முன் புறமிருந்து தன் மகன் அனந்தன் இறங்குவதையும்………. ஆனால் அவன் கழுத்தில் மாலை இல்லை…

மது குனிந்து காரினுள் எட்டிப் பார்த்து கையை நீட்டுவது தெரிந்தது. இரண்டு கைகளையும் குழந்தை போல நீட்டிக் கொண்டு கபடமில்லாமல் சிரித்துக்கொண்டு, மாலையை ஆசையாக தொட்டுப் பார்த்துக்கொண்டு, விகல்பமில்லாமல், துள்ளிக்கொண்டு இறங்கிய அந்தப் பையன் கழுத்தில் மணமாலை!

அடக் கடவுளே! என்ன நடக்கிறது இங்கே. மாப்பிள்ளை பக்கத்தில் இருக்க, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்கு 2 நாட்களே இருக்கும் நிலையில் வேறு எவனையோ இழுத்துக்கொண்டு வந்திருக்கிறதே, இந்த கழுதை. என்ன துணிச்சல் இவளுக்கு? இதற்கு இந்த மடையன் அனந்தன் வேறு காவலா, ஒன்றுமே புரியாமல் தலை சுற்ற, “அண்ணீ…….” என்று போட்ட கூச்சலைக் கேட்டு, குடும்பமே வெளியில் ஓடி வர…

அத்தனை பேரும் மதுவின் மணக்கோலம், வேறு ஒருவனுடன், கண்டு அதிர்ச்சியில் வாயடைத்து நின்றுவிட்டனர். மதுவிற்கும், என்ன சொல்வது, எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது. தான் திருமணம் செய்துகொண்ட சூழலின் நிதர்சனம் இவர்களுக்குப் புரியுமா……..பெருங் குழப்பமாக இருந்த வேளையில், அனந்தன் மெதுவாக தொண்டையைச் செருமிக்கொண்டு,

“மது, மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு உள்ளே வாம்மா. உள்ளே போய் பேசிக்கொள்ளலாம்” என்றவன், ஏதோ நினைத்துக் கொண்டவனாக, தன் தாயின் புறம் திரும்பி, “அம்மா, ஆரத்தி எடுக்கனுமே, கொஞ்சம் கொண்டுவருகிறீர்களா” என்றான்.

அவன் அம்மாவோ ஏதோ சொல்லக் கூடாத மோசமான வார்த்தையைச் சொல்லிவிட்டது போல, வெறுப்பாக மகனைத் திரும்பிப் பார்க்க, சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அனந்தன், அவர்களை அங்கே நிற்கச் சொல்லி, தானே உள்ளே சென்று பணியாளின் உதவியுடன் ஆரத்தி எடுத்து வந்தான். அனைவரும் அதிர்ர்சியில் உறைந்திருந்த அந்த நேரத்தில், ஆரத்தியை பல காலமாக வீட்டில் சமையல் வேலை பார்க்கும், முத்தம்மா பாட்டியையே எடுக்கச் சொல்லி அவர்களை உள்ளே கூட்டிவர முற்பட்டான்.

திடீரென சுய நினைவு வந்தவளாக மதுவின் தாய், “அடிப்பாவி, இப்படி தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே. என்ன வந்தது உனக்கு? இதற்குத்தான் பொதுச் சேவை, அது இதுன்னு ஊரைச் சுத்தினாயா? பாவி படுபாவி” என்று கத்திக்கொண்டே அடிக்கப் போனவளைத் தடுத்து நிறுத்திய அனந்தன், “அத்தை அவசரப்படாதீங்க, உள்ளே வாங்க. என்ன நடந்ததுன்னு சொல்றேன்” என்றான்.

“சீ, இந்தக் கேடு கெட்ட சிறுக்கி மட்டும் வீட்டுக்குள்ள வரவே கூடாது. இனி என் கண் முன்னால் நிற்கும் தகுதியே இவளுக்கு இல்லை…… ஐயோ, எங்கள் மானம், மரியதை எல்லாமே போய்விட்டதே. இனி எப்படி நாங்கள் வெளியில் தலை காட்ட முடியும்? குடும்பத்தோடு நாண்டுகிட்டுச் சாக வேண்டியதுதான்” என்று பெரும் குரலில் கத்த ஆரம்பித்துவிட்டார்.

அத்தையோ, “அடிப்பாவி, சண்டாளி… என்ன நெஞ்சழுத்தமடி உனக்கு? எவனோடயோ ஓடற கழுத, நிச்சயதார்த்தம் செய்வதற்கு முன்னாலேயே ஓடித் தொலைய வேண்டியதுதானே…….? ஊரெல்லாம் பத்திரிக்கை வைச்சு அழைச்சப்புறம் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டயேடி பாவி….. உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கனும்…. எல்லாம் படிச்சிருக்கிற திமிரு……” என்று ஆவேசம் வந்தவள் போல் குதித்தாள்.

தாத்தாவும் பாட்டியும் அதிச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார்கள்.

அனந்தனும் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான். சொன்னால் இவர்களால் புரிந்துகொள்ள முடியுமா, அல்லது அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமோ, தெரியவில்லையே என்று யோசித்து எப்படியும் சொல்லித்தானே ஆக வேண்டுமென்று பேச ஆரம்பித்த போது,…..

“ஹை……. அங்கொரு மது……. பெரிய மது எவ்வளோ அழகா இருக்கா…….” என்று ஓடிப்போய் அந்தத் திருமண மண்டபத்தில் வைக்க வேண்டிய பேனரில் இருந்த மதுவின் படத்தை ஆசையுடன், தடவிக் கொடுத்துக்கொண்டு, குழந்தையென கலகலவெனச் சிரித்துக்கொண்டிருந்தான் அந்த மாப்பிள்ளைப் பையன், சூழ்நிலை பற்றிய உணர்வே இல்லாமல்!

அடுத்த பேரிடி அனைவருக்கும், என்ன இது இப்படி, என்ன பண்ணுகிறான் இவன்….. வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிக்கும் போதே, மது நிதானமாக மாலையைக் கழற்றி வைத்துவிட்டு, அவனருகில் சென்று,

“வினு, இங்க பாருங்க இப்படில்லாம் பண்ணக் கூடாது. அமைதியா இருக்கணும் தெரியுமா?”

“இல்ல… இந்த மது அழகா இருக்கா பாறேன்… அதான் அவளுக்கு ஒரு கிஸ் குடுக்கலாமுன்னு போனேன்…….”

“அதெல்லாம் பண்ணக் கூடாது, வந்து இங்க உக்காருங்க” என்றாள் மது.

அவள் சொன்னவுடன் அமைதியாக சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்துகொண்டான் வினு.

ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. இடி மேல் இடி…… என்ன இது இந்த பையன் இப்படி இருக்கானே என்று யோசிப்பதற்குள், அனந்தன் பேச ஆரம்பித்தான்.

“தாத்தா, மதுவைப் பற்றி முழுசா புரிஞ்சிக்கிட்டவரு நீங்க. உங்க அம்மா மாதிரியே தயாள குணம் மதுவிற்கு என்று நீங்கள் தானே எப்போதும் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இன்று அதை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறாள் உங்கள் பேத்தி. ஆம் தாத்தா, இவர் வினு, சிறு வயதில் அதிக காய்ச்சல் வந்து ஜன்னி வந்ததால், மூளை சிறிது பாதிக்கப்பட்டுவிட்டது. சரியாகப் படிப்பு வரவில்லை. மற்றபடி சொன்னதைக் கேட்டுக்கொள்வார். எந்தப் பிரச்சனையும் இல்லை இவரால். இவருக்கென்று இருப்பது, இவருடைய பெற்றோர் மட்டும்தான். ஆனால் அவர்களும் சென்ற மாதம் ஒரு விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

மது இவருக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று ஒரு ஏழைப் பெண்ணாகப் பார்த்து முடிவு செய்து வைத்திருந்தாள். இன்று காலைதான் அந்தப் பெண்ணுடன் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது. நாங்களும் அதற்குத்தான் கிளம்பிப் போனோம். அங்கு போனவுடன் நிலைமையே மாறிவிட்டது. அந்த மணப் பெண் கடைசி நேரத்தில் இவரை மணக்க மறுத்துவிட்டாள். அவள் பெற்றோர் பணத்திற்கு ஆசைப்பட்டு, இவரின் நிலை குறித்து அந்த பெண்ணிடம் ஏதும் கூறாமலே திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்கள். அதை அறிந்துகொண்டவள் இறுதியில் மறுத்துவிட்டாள். எவ்வளவு சொல்லியும் சேட்கவில்லை. அந்த நேரத்தில்தான் மது திடீரென இந்த முடிவு எடுத்து விட்டாள்.

நான் கூட சொன்னேன், வேறு பெண் பார்த்து இவருக்குத் திருமணாம் செய்து வைக்கலாம் என்று. ஆனால் அவளோ, இவரின் பெற்றோர் பல நாட்களாக இவருக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் எதுவும் சரி வராததால் மிகுந்த வேதனை கொண்டிருந்ததாகவும் கூறினாள். திருமணம் முடித்தால் அவர் மனநிலை பூரணமாகக் குணமாகும் வாய்ப்பு நிறைய இருப்பதாக மருத்துவர் கூறியிருப்பதாகவும் கூறினாள். அது மட்டுமில்லாமல், இவரின் பெற்றோரும் இறந்து போனதால் வேறு ஆதரவும் இல்லாத நிலையில் தனி மரமாக நிற்கும் மனிதரைப் பார்க்க பாவமாக இருப்பதாகவும் கூறி வருந்தினாள். அதனால்தான் நானும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டது……”

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்தாலும், விரைவில் சரியாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் மது வெகு இயல்பாக வினுவைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள்……..

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மது ஏன் அப்படிச் செய்தாள்?

 1. இப்படிப்பட்ட தியாகங்கள் விலை மதிப்பில்லாதவை

  ஆனால் இப்போதெல்லாம் இந்த மனிதாபிமானம் காணாமல் போய்விட்டது என்பதே உண்மை

  ஆனாலும் எங்கோ சிலர் இது போன்ற தியாகங்களை யாருமே அறியாமல் விளம்பரமே இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. கதையை படித்ததும் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை, ஆனால் ஒரு சோகம் வந்து மனதில் படிகிறது.

  மது செய்தது சரிதான என்று யோசித்தால், பதில் சொல்ல இயலாத நிலைதான் எனக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *