காங்கிரசுக்குத் தமிழர்களிடம் வாக்கு கேட்கத் தகுதியில்லை: சீமான்

0

seeman_mylapore

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது தமிழர்களிடம் வாக்கு கேட்டு வர என்ன தகுதி இருக்கிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான தங்கபாலுவுக்கு எதிராக, 2011 ஏப்ரல் 3 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது,

“63 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை அத்தனை தொகுதிகளிலும் தோற்க வைக்க, நாம் களம் இறங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சியினரும் இதே பணியில்தான் உள்ளனர். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் 40இல் போட்டி வோட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பீகார் மாநிலத்திலாவது காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தன. இங்கு அதுவும் கிடைக்காது. நாங்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராட வந்த அரசியல்வாதிகள் இல்லை.

உலகத்தில் உள்ள சிறிய நாடுகளில் கூட, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 8 மணி நேரம், 10 மணி நேரம் என்றும், சில கிராமங்களில் 3, 4 நாட்களுக்கு கூட மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்சாரமே இல்லையாம், இதில் இலவச மின்சாரத் திட்டமா? நல்ல வேடிக்கை. நாங்கள் இலவச மின்சாரம் கேட்கவில்லை, தடையில்லா மின்சாரத்தைத்தான் கேட்கிறோம்.

இலங்கையிலே ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது தமிழர்களிடம் வாக்கு கேட்டு வர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது?

யாராவது உங்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்க வந்தால், அவர்களிடம் உங்களுக்கு இந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? என்று கேளுங்கள். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். மக்களின் உழைப்பைச் சுரண்டிச் சேர்த்த பணம். அதை வாங்கிக்கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

seeman_mylaporeதமிழகத்தில் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் தோல்விக்கான காரணத்தை ஊடகங்கள் ஆராயும்போது,  ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்த துரோகத்திற்காகத்தான் தோல்வி கிடைத்தது என்பது தெரியவேண்டும்” என்றார்.

வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களத்தில் இருக்கையில் நாம் மட்டும் ஏன் கங்கிரஸுக்கு எதிராக யுத்தம் செய்கிறோம். ஏனென்றால் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைத் தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி துணை போகிறது. இந்த அக்கிரமங்களையெல்லாம் இந்தியக் கடலோரக் காவல் படையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கிற இலங்கை அரசுக்குத் துணை போகிற காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடியுங்கள். ஈழத் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதற்காக அள்ளி, அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். எனவே இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற டி.ஜெயக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

=================================
தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.