பால சந்திரன் விக்ன வினாயகன்
விசாலம்
“ஸ்ரீ மஹா கணபதிரவதுமாம் …..” என்ற கௌளை ராகப் பாடலில் ஸ்ரீமுத்துசுவாமி தீட்சதர் அவர்கள் சரணத்தில் “பால சந்திரம்” என்ற சொல்லை உபயோகித்திருக்கிறார். சிவபெருமானுக்குச் சிரசில் சந்திரக்கலை உண்டு. அதே போல அம்பாள் சிரசிலும் பிறைச்சந்திரனை நாம் காண்கின்றோம். பிள்ளையாரையும் நாம் பாலசந்திரன் என்கிறோம். சம்ஸ்கிருத மொழியில் பாலம் balam என்றால் “மேல் நெற்றி” என்று கொள்ளலாம். தன் மேல் நெற்றியில் ஒரு பக்கத்தில் சந்திரனைத் தரித்திருக்கிறார் பிள்ளையார். இவர் ஏன் சந்திரனைத் தரிக்கவேண்டும் ? இப்படித் தரித்த கணபதி எங்கு அமர்ந்து அருள் புரிகிறார் ?
இதைப்பார்க்க நாம் திருஎறும்பியூர் செல்ல வேண்டும். இந்தக் கோயிலின் தலபுராணத்தில் பார்த்த பாடல்…
“பூமேவும் ஒரு கொம்பன் என்றதிருப்
பேரென்றும் பொலியக் கோடு
நாமேவும் அம்பல் முகதவுண னோடும்
சமர்புரிந்த ஞான்று மன்றிப்
பாமேவு பாரதம்கை யானெழுதும்
அஞ்ஞான்றும் பரிவு னேந்தும்
காமேவும் எறும்பியூர்ப் பாலசந்திர
வினாயகனைக் கருதி வாழ்வாம் “
இந்த இடம் தற்போது திருவெறும்பூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி தஞ்சாவூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கோயிலில் இருந்து அருள் பாலிக்கும் ஈசன் “எறும்பீசன்”, அம்பாள் “நறுங்குழல் நாயகி”. இந்த ஊரின் பெயரைப் பார்த்தாலே எறும்பு வழிபட்ட இடம் என்று தெரியவருகிறது.
இனி பாலசந்திரன் புராணக்கதையைப் பார்ப்போம் .
ஒரு தடவை சந்திரன் தன் அழகில் கர்வமுற்றான். அந்த நேரம் பார்த்து வினாயகர் தன் மூஷிக வாஹனத்தில் ஏறி லோகங்களை வலம் வந்தார். அவரைப்பார்த்த சந்திரன் “அகல காதுகள், மூக்கோ நீண்ட தும்பிக்கை, வயிறோ ஒரு பானை, உடலோ ஒரு குண்டு, காலோ குட்டை” என்று சத்தமாக கூறிப் பரிகாசம் செய்தபடி சிரித்தான்.
வினாயகரும் சளைக்கவில்லை.
“ஹே சந்திரனே,உனக்கு சொந்தமாக ஒளியில்லை. தெரியுமா? சூரியனிடமிருந்து ஒளியை இரவல் வாங்கிக்கொள்கிறாய். உன் உடலிலும் சில இடங்கள் கறுத்து, பார்க்க நன்றாக இல்லை. கவிஞர்கள் பலர் உன்னைப் புகழ்ந்து பாட, உன் கர்வம் தலைக்கேறி விட்டது. நீ இருபத்தேழு பெண்களை மணந்து கொண்டாலும் ரோகிணியிடம் மட்டும் பிரியமாக இருந்து, அதனால் தட்சனின் சாபம் பெற்று தேய்ந்து போனாய். என் தந்தை பரமேஸ்வரன் அருளால் நீ அவர் முடியில் மூன்றாம் பிறையாக சூட்டப்பட்டாய். அவரால்தான் நீ திரும்பவும் வளர ஆரம்பித்தாய். இல்லாவிட்டால் அன்றே நீ தேய்ந்து போயிருப்பாய். இன்று திரும்பவும் நீ என்னை ஏளனமாகப் பேசுகிறாய். உன் கர்வம் போக வேண்டும். இனி உன்னைப் பார்ப்பவருக்கு களங்கம் வரட்டும். அவருக்கு வீண்பழி உண்டாகட்டும் .”
சந்திரனுக்கு இந்தச்சாபம் பெரிய தண்டனையாகத் தோன்றியது. ஒரே அவமானம். எல்லோரும் தன்னைத் திட்டித் தீர்ப்பார்களோ என்ற வருத்தம். என்ன செய்வது ? ஓடிப்போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
சந்திரன் இல்லாமல் உலகத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டன. உலகமக்கள் யாவரும் துன்பமடைந்தனர். வழக்கம்போல் தேவர்களும் முனிவர்களும் பிரும்மனிடம் சென்று முறையிட்டனர்.
“பிரும்ம தேவரே ! நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும். சந்திரனை பழையபடி பிரகாசிக்க செய்ய வேண்டும்.”
“தேவர்களே கணபதி கொடுத்த சாபத்தை நான் மாற்றவோ அல்லது பரிகாரமோ சொல்ல முடியாது. நீங்கள் ஆதிமுதல்வனான அந்த விக்னேஸ்வரனையே தொழுது, சதுர்த்தி விரதமிருந்து குழக்கட்டைப் பிரசாதத்துடன் அப்பம் பொரி அவல் வைத்து வழிபடுங்கள்.”
அதன்படியே தேவர்கள் கணபதியை வழிபட்டு சந்திரன் ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனிடம் சென்று அவருக்கு உபதேசம் செய்தனர். சந்திரனும் தன் கர்வம் நீங்கி, தவறை உணர்ந்து, மனம் வருந்தி கணபதியைத் தொழ ஆரம்பித்தான். பிள்ளையாரும் கருணை கொண்டு தன் சாபத்தை மாற்றினார். உலகத்தாருக்கு கர்வம் கொள்வது சரியாகாது என்பதை உணர வைக்க ஒரு நிபந்தனையுடன் சாபத்தை மாற்றினார். அதாவது சுக்லபட்ச சதுர்த்தியில் [வளர்பிறை] வரும் சந்திரனை எவரும் பார்க்கக்கூடாது என்றும் இதை மீறினால் வீண் அபவாதம் வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். பின் சந்திரனுக்கு அருளும் வழங்கினார்.
“இனிமேல் என்றும் என் நெற்றியில் தரிக்கும் கிரீடத்தின் மேல் பிறைச்சந்திரனாக நீ அமர்ந்திருப்பாய். நான் இதனால் பாலசந்திரன் என்ற பெயரும் கொள்வேன்.”
தகுந்த பாடம் புகட்ட சாபம் கொடுத்தாலும் கருணை உள்ளத்துடன் சந்திரன் செய்த பூஜையை ஏற்று, தரிசனம் தந்து தன் கிரீடத்தின் மேலும் தரித்துக்கொண்ட பிள்ளையார், என்றுமே சந்திரனுக்கு அருள் புரிந்துவருகிறார்.
இந்தக்கோயிலின் ஈசன் எறும்பீசன். எறும்புகள் பூசித்ததால் இந்தப் பெயர் பெற்றார். ஒரு சமயம் தாருகாசுரனை அழிக்க முடியாமல் கஷ்டப்பட்டு, இந்திரனும் தேவர்களும் பிரும்மனிடம் சென்று வழி கேட்டனர். அவர் சிவனைப் பூசிக்க சொல்லி தாருகாசுரனுக்குத் தெரியாமல் இருக்க வழியும் சொன்னார். அதாவது அவர்கள் எறும்பாக மாறி சிவனைப் பூஜிக்க வேண்டும். அதே போல் அவர்கள் எறும்புகளாக மாறி சிவலிங்கத்தின் மேல் ஏற எண்ணெய்ப் பிசுக்கினால் ஏற முடியாமல் வழுக்கி வழுக்கி விழுந்தனர். இதனால் சிவபெருமான் மனம் இளகி தன் மேனி முழுவதும் புற்று மணலால் மாற்றிக்கொண்டாராம். பின் ஏறுவதற்கு சௌகரியமாக, சற்று சாய்ந்து பூஜையை ஏற்றுக் கொண்டாராம். இதனால் எறும்புகள் மளமளவென ஏறி பூசையை முடித்துக்கொண்டனவாம்.
இதனால்தான் அங்கு மூலவருக்கு அபிஷேகமில்லை. இந்தக் கோயில் மலையின் மேல் உள்ளது. இந்த இடம் பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
என்றும் கேட்டதெல்லாம் வழங்கும் அந்தப் பிள்ளையாரை, பாலசந்திரனாக திருவெறும்பூரில் எழுந்தருளியிருக்கும் அந்த விநாயகனை நாமும் வழிபடுவோமாகுக.