நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-13)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
சுந்தரத்தின் ஆபீசில் ஜாடை மாடையாக எல்லாரும் அவனைப் பார்த்துப் பேசுவது போலப் பட்டது அவனுக்கு. ஆனால் காரணம் புரியவில்லை. ஒரு நாள் எதேச்சையாக கேஷியரும், பியூனும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது.
“ஏன் கேஷியர் சார்? வேலுமணி, கணேசன் கேஸ் எந்த நிலமையில இருக்கு?”
“அதை ஏன் கேக்கற போ! இப்போ அதுல ஒரு புது டர்னிங்க் பாயிண்ட் வந்திருக்கே உனக்குத் தெரியாதா?”
கணேசன், வேலுமணி கேஸில் புதிய டர்னிங்க் என்றதும் காதைத் தீட்டிக் கொண்டு கவனித்தான் சுந்தரம்.
“என்ன சார்? என்ன டர்னிங்க் பாயிண்ட்? “
அக்கம் பக்கம் பார்த்து விட்டு மிகவும் ஜாக்கிரதையாக மெதுவான குரலில் சொல்ல ஆரம்பித்தார் கேஷியர். அவர் மெதுவான குரலில் சொன்னாலும் சுந்தரத்துக்கு நன்றாகக் காதில் விழுந்தது.
“இப்போ அந்தக் கேஸ்ல கணேசன் வேலுமணி தவிர மூணாவதா ஒரு நபரும் சம்பந்தப் பட்டுருக்கறதா சந்தேகப் படறாங்க?”
சுந்தரம் யோசனையில் ஆழ்ந்தான். “மூணாவதா ஒரு நபரா யாரு? எனக்கே தெரியாத இந்த விவரம் கேஷியருக்கு எப்டித் தெரிஞ்சது? சரி மேலே கேட்போம்” என்று முடிவு செய்தான்.
“மூணாவது நபரா? யார் சார் அது?”
“சொன்னா நீ ரொம்ப ஆச்சரியப் படுவ! நம்பக்கூட மாட்ட”
“அப்டி அது யாரு சார்?”
“சொல்றேன். நான் சொல்றதை வெளில எங்கியும் சொல்லிடாதே என்ன?”
“என்ன சார்? நான் அப்டிச் சொல்லுவேனா? சும்மாச் சொல்லுங்க சார். துடிக்குது எனக்கு”
“இரு இரு, நான் சொன்னதும் உன் துடிப்பு அடங்கிடும்”
“அட! இன்னும் சொல்லாமலேயே இருக்கீங்களே”
“சொல்றேன்ப்பா சொல்றேன். நம்ம டெபுடி மேனேஜர் சுந்தரம் தான் அந்த மூணாவது நபர்.”
கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு மயக்கமே வரும் போல ஆகி விட்டது. “என்ன நான் சம்பந்தப்பட்டிருக்கேனா? யார் சொன்னது?” என்று கத்திக் கேட்கத் துடித்த மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு மேலும் கவனித்தான்.
“என்ன நம்ம சுந்தரம் சாரா? என்னால நம்பவே முடியல்லியே? சார் நீங்க சொல்றது உண்மையா?”
“பாத்தியா நான் சொன்னேனில்ல நீ நம்ப மாட்டேன்னு”
“நான் நம்பாதது இருக்கட்டும் சார். உங்களுக்கு யார் சொன்னா? முதல்ல நீங்க இத நம்புறீங்களா?’
“நான் நம்பறேனோ இல்லியோ! இது தான் உண்மைன்னு மேனேஜரே எங்கிட்ட சொன்னார்னா பாத்துக்கயேன். “
“மேனேஜர் எதுக்கு சார் இதை உங்க கிட்ட சொல்லணும்?”
“நீ என்ன பெரிய என்குவாரி கமிஷன் மாதிரி தொளச்சுத் தொளச்சுக் கேக்கற? மேனேஜர் சில கேள்விகள் என்னைக் கேட்டாரு சுந்தரத்தைப் பத்தி, வேலுமணிக்கும் , கணேசனுக்கும் சுந்தரம் எவ்ளோ தூரம் ஃப்ரெண்டுங்கறதைப் பத்தி?”
“அதை ஏன் உங்க கிட்ட கேக்கணும்?”
“நான் கணேசனுக்கு கொஞ்ச நாள் ஃபிரெண்டா இருந்தேன் இல்ல. அந்த பாவத்துக்குத்தான் என்னைக் கூப்பிட்டு குடஞ்சு தள்ளிட்டாரு மேனேஜர். தப்பிச்சு வரதுக்குள்ள உன் பாடு என்பாடு ஆயிடிச்சு”
“சே! என்ன அநியாயம்? நீங்க அதுக்கு என்ன பதில் சொன்னீங்க?”
“எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். அதாவது வேலுமணியும் சுந்தரமும் தனியா இருக்கும் போது நல்லாப் பேசிக்குவாங்க. ஆனா யாராவது வந்துட்டாங்கன்னா சண்டை போட்டுக்குவாங்க அப்டீன்னு சொன்னேன்.”
“ஏன் சார் அப்டி சொன்னீங்க? சுந்தரம் சாருக்குத்தான் வேலுமணியைக் கண்டாலே பிடிக்காதுன்னு எல்லாருக்கும் தெரியுமே?”
“நானும் அப்டித்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். போன வாரம் ஒரு நாள் சுந்தரம் சாருக்குத் தலைவலி. அதோட அவரு வேலை பாத்துக்கிட்டு இருந்தாரு. அப்போ வேலுமணியும்,கணேசனும் துடிச்சுப் போயிட்டாங்க. அவங்க தான் டீ வாங்கிக் குடுத்து, மாத்திரை வாங்கிக் குடுத்து ஹெல்ப் பண்ணாங்க! “
“இது ஒரு சாதாரண உதவி. இதை யார் வேணாலும் செய்யலாமே? அப்டிப் பாத்தா இந்த ஆபீசுல இருக்கறவங்க எல்லாரும் எனக்குத்தான் குளோசா இருக்கணும். ஏன்னா நான் தான் அவங்களுக்கு டீ வாங்கிட்டு வரேன். வேற எதாவது இருந்தாக்கூட நான் தான் வாங்கிக் குடுக்கறேன்”.
“இரு! அவசரப் படாதே! நான் சொல்றதை முழுசாக் கேட்டுட்டு அப்புறம் சொல்லு.”
“சரி! சொல்லுங்க!”
“நீ சொல்றா மாதிரி மாத்திரையும்,டீயும் வாங்கிக் குடுக்கறது ஒரு சாதாரண ஹெல்ப் தான். ஆனா சுந்தரம் சார் ஏம்ப்பா நான் அந்தப் பக்கம் போகும் போது வேலுமணியையும்,கணேசனையும் திட்டறா மாதிரி நடிக்கணும்?”
“அவரு நடிச்சாருன்னு உங்களுக்கு எப்டித் தெரியும்?”
“எல்லாம் விவரமாக் கேளு! திருப்பி நான் அந்தப் பக்கம் வரும் போது வேலுமணியும்,கணேசனும் சிரிச்சுக்கிட்டே வெளிய வந்தாங்க! அதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“நீயெல்லாம் ஒரு…, யாராவது திட்டு வாங்கிக்கிட்டு சிரிச்சுக்கிட்டே வருவாங்களாய்யா? நான் அடிக்கறா மாதிரி அடிக்கறேன் நீ அழறா மாதிரி அழுன்னு தானே அதுக்கு அர்த்தம்.”
“நீங்க சொல்றதெல்லாம் நம்பவும் முடியல,நம்பாம இருக்கவும் முடியல! நம்ம சுந்தரம் சார் கண்டிப்பா அப்டி செஞ்சிருக்க மாட்டாரு சார்”
“நீ ரொம்ப அப்பாவியா இருக்க சபாபதி! எந்தப் புத்துல எந்தப் பாம்போ? யாருக்குத் தெரியும்? வாய் கிழிய நேர்மை,நீதின்னு பேசறவங்களை நம்பவே கூடாது”
இருவரின் குரல்களும் தூரத்தில் தேய்ந்து மறைந்தன. சுந்தரத்துக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. சென்ற வாரங்களில் நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக வந்து போயின. “என்ன ? என்னையா சந்தேகப் படுறாங்க? “என்பதற்கு மேல் மூளை சிந்திக்க மறுத்தது. கிட்டத்தட்ட 22 வருடங்கள் இந்த பேங்கிற்காக உழைத்திருக்கிறான். இது வரை இது போலப் பழி சுமந்ததில்லை. மனம் மீண்டும்”நானா? என்னையா?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனுடைய இருக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான். கண்களில் இருந்து நீர் வரட்டுமா? என்றது. நெஞ்சை அடைத்தது. “இது தான் சத்திய சோதனை என்பதுவா?”
“மிஸ்டர்.சுந்தரம்”
மேனேஜரின் குரல் கேட்டுப் பதறி எழுந்தான் அவன். எப்போதும் சுந்தரம் என்று உரிமையோடு அழைக்கும் அவர் இன்று மிஸ்டர் போட்டு அழைப்பதன் காரணம் அவனுக்குத் தெரிந்தது.
“மிஸ்டர். சுந்தரம்”
மீண்டும் குரல் கொடுத்தார் மேனேஜர்.
“சொல்லுங்க சார்” என்றபடி எழுந்து நின்றான்.
“தயவு செஞ்சு என் ரூமுக்கு வர முடியுமா? நான் உங்க கூடக் கொஞ்சம் பேசணும்” என்றார்.
இருவரும் மேனேஜர் ரூமுக்குள் மௌனமாக நுழைந்தனர். அவர் என்ன பேசப் போகிறார் என்று ஓரளவு ஊகிக்க முடிந்தது சுந்தரத்தால்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார் மேனேஜர்.
“மிஸ்டர். சுந்தரம், நான் உங்க மேலே எவ்ளோ நம்பிக்கை வெச்சிருந்தேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். உங்களை விட வயசுலயும் அனுபவத்துலயும் மூத்தவன் நான். அதனால் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க”
“சொல்லுங்க சார்” என்றான் சுந்தரம். மேனேஜர் ரூமிலிருந்த கடிகாரக்குருவி இவன் மனதைப் போலவே ஆடிக்கொண்டிருந்தது.
“நாம எல்லாரும் மனுஷங்க தான் கடவுள் இல்ல. அதனால தப்பு செய்யறது ஈசி. ஆனா செஞ்ச தப்பை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேக்கறது தான் செஞ்ச தப்புக்கு சரியான பரிகாரம்னு நான் நினைக்கறேன். நீங்க என்ன சொல்றீங்க?”
“தப்பு செஞ்சவங்க மனசு திருந்தி மன்னிப்புக் கேக்க வேண்டியது தான்.”
“வெரி குட்! நான் நெனச்சதையே தான் நீங்களும் சொல்றீங்க! இப்போ விஷயத்துக்கு வரேன். இந்த வெலுமணி கணேசன் கேஸ்ல நீங்களும் சம்பந்தப் பட்டுருக்கீங்கன்றதுக்கு எங்களுக்கு சில க்ளு கெடச்சிருக்கு. அப்டி நீங்க சம்பந்தப் பட்டிருந்தா நீங்களே விஷயத்தை ஒத்துக்கிட்டா உங்களுக்கு நல்லது. என்குவாரி சிம்பிளா முடிஞ்சிடும். பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும் அதோட ஒரு மாசம் சஸ்பென்ஷன் குடுப்பாங்க. அவ்ளோதான். நீங்க என்ன சொல்றீங்க?”
“சார்! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க சார்! நான் எந்தத் தப்பும் பண்ணல்ல!”
“இத நான் எதிர் பார்த்தேன். “
“இல்லை! நீங்க என்னை சரியாப் புரிஞ்சிக்கல சார்! 22 வருஷ சர்வீஸ் . என்னிக்காவது ஒரு நாள் தேவையில்லாம லீவு போட்டிருப்பேனா? இல்லை என்னைப் பத்தின புகார் எதாவது உங்களுக்கு வந்திருக்குமா? அப்டி இருக்கும் போது என்மேல எப்டி சார் நீங்க ஒரு அபாண்டத்தை சுமத்தலாம்?”
“இதப் பாருங்க சுந்தரம். எனக்கொண்ணும் உங்க மேல பர்சனல் பகை கிடையாது. நீங்க இதுல இன்வால்வ் ஆகியிருக்கீங்கங்கறதுக்கான ஆதாரம் எங்களுக்குக் கெடச்சிருக்கே”
“என்ன சார் ஆதாரம்?”
“நீங்க வேலுமணி,கணேசன் மூணு பேரும் சேந்து தான் இதையெல்லாம் செஞ்சீங்கன்னு அவங்களே சொல்றாங்களே. என்குவாரிலயும் இதையே சொன்னாங்கன்னா உங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க! அதுக்கேத்தா மாதிரி நீங்களும் அவங்க கூட நட்பாப் பழகியிருக்கீங்க!”
“யாரு சார் சொன்னது நான் நட்பா அவங்க கூடப் பழகறேன்னு?”
“யாரு சொல்லணும்? ஆபீஸ் முழுக்க சொல்லுது! ஏன் நானே ரெண்டொரு தடவை பாத்திருக்கேன்”
“அவங்க கூடப் பேசினதுக்காக என்னை சந்தேகப் படறீங்கன்னா ஆபீஸ்ல எல்லாரையும் தானே சந்தேகப் படணும்?”
“நியாயம் தான் நீங்க சொல்றது. ஆனா மத்தவங்களுக்கெதிரா எந்த ஆதாரமும் சிக்கலியே?”
“என்ன சார் ஆதாரம் ஆதாரம்னு அதையே சொல்லிகிட்டு இருக்கீங்க? என்ன ஆதாரம்னு அதையும் சொல்ல மாட்டேங்கறீங்க?”
“இதப் பாருங்க மிஸ்டர். சுந்தரம் நான் இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லக் கூடாது. இருந்தாலும் உங்க மேல இருக்கற நல்ல அபிப்பிராயத்துல சொல்றேன். உங்க பேர்ல ஒரு மொட்டை லெட்டர் மேலிடத்துக்கு வந்துருக்கு. அதுல நீங்க இதுல சம்பந்தப் பட்டுருக்கறதாகவும், மேற்கொண்டு விசாரிக்கும் படியாகவும் எழுதியிருந்தது. அது படி விசாரிச்சதுல வேலுமணியும்,கணேசனும் உங்களைப் பத்திச் சொன்னாங்க.”
“ஏன் சார் ஒரு மொட்டை லெட்டரை வெச்சா என் நேர்மையை சந்தேகப் படுறீங்க? அந்த ராஸ்கல்ஸ் சொன்னதை நம்பி என் மேல பழி சுமத்தியிருக்கீங்க?”
“ஒரு மொட்டை லெட்டர் இல்ல மிஸ்டர்.சுந்தரம். பல கடிதங்கள் வந்தது.”
“எத்தனை வந்தா என்ன சார்? மனுஷனுக்கு ஒரு மரியாதை இல்லியா? நான் உங்க மேல மதிப்பும் மரியாதையும் வெச்சுருக்கேன் சார். நீங்க இப்டிப் பண்றது கொஞ்சம் கூட நல்லால்ல. உங்களை என் கூடப் பிறந்த அண்ணனா மதிச்சேன் சார். எத்தனை நாள் நீங்க ராத்திரி இருந்து ஃபைலை முடிச்சுக் குட்டுத்துட்டுப் போன்னு சொல்லியிருக்கீங்க? ஒரு நாளாவது நான் மாட்டேன்னு சொல்லியிருப்பேனா சார்? எத்தனை நாள் காலையில சீக்கிரம் வந்து மத்தவங்க வேலையும் சேத்துப் பாத்துருக்கேன் .அதுக்கெல்லாம் நீங்க குடுக்கற கூலியா சார் இது? ஊழல் பண்றவன் எவனாவது இப்படி வேலை செய்வானா சார்?”
சுந்தரத்தின் தொண்டை தழுதழுத்தது. பேச முடியாமல் கண்கள் நிறைந்தன. மேனேஜருக்கே என்னவோ போலாகி விட்டது. அவருக்கு நன்றாகத் தெரியும் இதில் சுந்தரம் கண்டிப்பாக சம்பந்தப்பட்டிருக்க மாட்டான் என்று. ஆனால் அவரால் வெளிப்படையாக அதைச் சொல்ல இயலவில்லை. அவர் கையை நீட்டி சுந்தரத்தின் கையைப் பற்றினார்.
“சுந்தரம் காம் டௌன். ஏன் இப்டி உணர்ச்சி வசப் படறீங்க? பிளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க! ” என்று தட்டிக் கொடுத்தார்.
அது சுந்தரத்துக்கு மிகவும் இதமாக இருந்தது.
“உணர்ச்சி வசப்படாம எப்டி சார் இருக்கறது? இது என் வாழ்க்கைப் பிரச்சனை சார்”
“சுந்தரம் இன்னோரு விஷயம் உங்க கிட்ட சொல்றேன். இட்ஸ் பிட்வீன் மீ அண்ட் யூ ஒன்லி ஓகே?”
“ஓகே சார் , சொல்லுங்க”
“இன்னோரு முக்கியமான ஆதாரம் உங்களுக்கெதிரா நம்ம விஜிலென்ஸ் டிப்பார்ட்மெண்டுக்கு சிக்கியிருக்கு. அது தான் உங்க மேல அவங்களுக்கு சந்தேகம் உறுதியாகக் காரணமா இருந்தது.”
சுந்தரம் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“என்ன சார் அது?”
“இந்த மொட்டைக் கடுதாசிங்கள்ல்லாம் வந்த பிறகு உங்க மேல ஒரு கண்ணு வெச்சுக்கச் சொல்லி நம்ம ஹெட் ஆபீஸ் விஜிலன்ஸுலருந்து சில ஆட்கள் வந்தாங்க. அவங்க உங்களை மட்டுமில்ல உங்க ஃபேமிலியைக் கண்காணிச்சிருக்காங்க. அப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க மனைவி ஒரு ஏஜன்சி மூலமா வெளி நாட்டுக்கு பணம் அனுப்பியிருக்காங்க! அது எந்த நாடு? எவ்ளோ அமௌண்ட் இதெல்லாம் ரகசியமா வெச்சுருக்காங்க எனக்கே கூட அந்த விவரமெல்லாம் தெரியாது. அந்த ஆதாரத்தை வெச்சு உங்களுக்கு வெளி நாடுல அக்கவுண்டு இருக்குன்னு சந்தேகப் படறாங்க.”
“சார்! இது அபாண்டம் சார்? என் வைஃப் எதுக்கு சார் வெளி நாட்டுக்கு பணம் அனுப்பப் போறா? யாரோ எங்களுக்கு வேண்டாதவங்க தூண்டி விடறாங்க சார்.”
“இல்ல சுந்தரம். இது உண்மை தான். உங்க வைஃபை நேரில பாத்தவரே சொன்னாரு. இது கொஞ்சம் சீரியசான விஷயம் தான். வேற ஏதாவது ஆதாரம் தேடி வீட்டை சோதனை போடக் கூட வரலாம். இது உங்களுக்கு சர்ப்பிரைசா இருக்கக் கூடாதேன்னு தான் நான் மொதல்லயே சொல்றேன். நியாயப் படி பாத்தா நான் இதை உங்க கிட்ட சொல்லவே கூடாது. ஆனா எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு அதனால் சொல்றேன். போங்க வீட்டுக்குப் போயி நல்லா யோசிங்க” என்று கூறினார்.
சுந்தரத்தின் மேல் ஆகாயமே இடிந்து வீழ்ந்தாற் போல இருந்தது. அவன் மனமெல்லாம் இதே கேள்வி தான் ,”கல்யாணி எதுக்கு வெளி நாட்டுக்கு பணம் அனுப்புனா?” அவனுக்கு அந்த சவுத் ஆப்பிரிக்கா விவகாரம் நினைவில் இல்லவே இல்லை.
“அப்டி அவ அனுப்பினது உண்மைன்னா? யாருக்கு எதுக்கு அனுப்பினா? அதோட எவ்ளோ பணம் அனுப்பினாளோ? யாராவது நூறு இருநூறுன்னு வெளி நாட்டுக்கு அனுப்புவாங்களா? ஆயிரக்கணக்கில தான் அனுப்பியிருப்பா? அவ்ளோ பணம் அவளுக்கு ஏது?
கோபம் பொங்கியது சுந்தரத்துக்கு. “இந்தக் கல்யாணியை ஒரு கை பார்க்க வேண்டும். அவளுக்கு எவ்ளோ திமிர் இருந்தா எனக்குத் தெரியாம இந்த வேலையெல்லாம் செய்வா? என் நேர்மையையே சந்தேகப்பட வெச்சிட்டாளே? சீ இனிமே அவ முகத்துல முழிக்கறதே பாவம், அவளைத் தொலச்சுக் கட்டிட்டு தான் மறு வேலை” கோபத்தில் எண்ணங்கள் தாறுமாறாக ஓடின.
கல்யாணியிடம் விளக்கம் கேட்க வீடு நோக்கி ஒரு புயலென விரைந்தான் சுந்தரம்.
படத்திற்கு நன்றி: http://www.marquette.edu/hr/managerstoolkit.shtml