கருணை செய்யும் ‘கர’ வருடம்

இன்னம்பூரான்

Innamburan‘பிரபவ’ என்று தொடங்கி அறுபது வருடங்கள் சுழன்று சுழன்று வரும் காலச் சக்கரம் அநாதி என்க. ‘விக்ருதி’ ஆண்டு முடிந்து, 2011 ஏப்ரல் 14 அன்று ’கர’ வருடம் பிறக்கிறது: கடக லக்னம், மகம் நக்ஷத்ரம், சிம்ம ராசி. ஒரு ஜோதிடர் இந்த வருடம் கருணாமூர்த்தி என்றார். அது மனதுக்கு ஹிதமாக இருக்கவே, அதையே தலைப்பாக வரித்துக்கொண்டேன். இந்தப் பஞ்சாங்கப் படனம், வருஷாந்திர பலன், வாஸ்து புருஷ வர்ணனை, புளிப்பும் இனிப்பும் கலந்த மாங்காய்ப் பச்சடி, கோயில், குளம், புத்தாண்டு வாழ்த்துகள், தீர்மானங்கள் எல்லாம் எதற்கு? மனசுக்கு சந்துஷ்டி தேடிண்டு தான்.

இந்த மனசு, சொன்னபடியா கேட்கிறது? இல்லை. அது சொன்னபடியா நமது நடை, உடை, பாவனை எல்லாம்? மாங்காய்ப் பச்சடி என்றால், அது உன் மனோரதம் என்னப்பா என்று கேட்கிறது. கையோடு கையாக, காலம் போகும் போக்கில், அநாயாசமாக இழுத்துக்கொண்டு, அங்குமிங்கும் ஓடி அலைக்கழிக்கிறது. இலக்கணத்தார் காலத்தின் நிலையை, ‘இறந்த காலம்/ நிகழ் காலம்/ வருங்காலம்’ என்று வகுத்துள்ளார்கள். பரிட்சை பாஸ் செய்யணும் என்றால், அப்படித்தான் எழுத வேண்டும்.

ஆனால் பாருங்கோ. காலமாவது இறக்கறாதவது? அபத்தம். வேணும்னா, கடந்த காலம் என்று சொல்லுங்கள். எதை, எப்போது கடந்தது என்று மனசு கேட்டால், பேந்த, பேந்த முழியுங்கள். ‘நி’யின் நிகழ்காலம், ‘ழ்’ வருவதற்குள் முடிந்துவிட்டது. ஒரே நதியில் இருமுறை கால் அலம்ப முடியுமோ? சரி. எதை ‘வருங்காலம்’ என்கிறீர்கள்? நாளை உதிக்கும் ஆதவன், உன்னுடைய மூதாதைகளில் முதல்வர் ஜனிக்கும் முன், அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன் உதித்தவன். என்னோட அலமு பாட்டி, மத்தவா மனசை படிச்சுறுவாள். இந்தப் பூவுலகில் தற்காலம் வாசம் செய்யாவிடினும், வந்து பேசுவாள்; தெம்பு கொடுப்பாள்; பளிங்கு நீர் மாதிரி கலகலப்பாள். வீணை நாதமும் உண்டு, அவளிடம்; அவள் மிருதங்க பாஷிணியும் கூட. சுளுவா கேட்டாள், ‘ஏன்டா! உன்னிடம் பேசும் நான் ‘காலமாயிட்டேன்’ என்றால், அது வாயா வார்த்தை. எல்லாரும் என்றும் தேவர்கள்தாம். கோட்டையில் இருந்தால் என்ன? கொத்தளத்தில் இருந்தால் என்ன? ஏன் வாயடைத்து நிற்கிறாய்? சொல்’ என்றாள்.

ஒரு உரையாடல் தொடர்ந்தது. என் மனதே பாட்டி. அதுவே நான்.

நான்: “பாட்டி, என்ன பிளேட்டோ மாதிரி பேசறே. இன்னிக்குக் கருணை செய்யும் “கர“ வருடம் பிறந்தது. வள்ளலார் ஞாபகம் வந்தது. வந்து நிக்கிறதோ நீ!’’

பாட்டி: ‘‘பேசுவைடா! பேசுவை! உங்க அப்பன் பசங்களைத் தன்னிச்சையா வளத்துட்டான். குறஞ்ச்சா போய்ட்டேன், நான்?”

நான்: இல்லை பாட்டி. புத்தாண்டுக் கொண்டாட்டம் நாளை. வருங்காலம். இந்த பாழாப் போன மனசு இந்த இலக்கணக் காலவரையை, ‘துக்கிரி’ மாதிரி கேலி செய்கிறது. ஒரே எள்ளல், கண்ணாடி உடஞ்ச மாதிரி ‘ஹோ ஹோ’ சிரிப்பு. எனக்குத் தாங்கல, பாட்டி.

tamil years

பாட்டி என்னை எடுத்து மடியில் விட்டுக்கொண்டாள். தலை முடியைக் கோதினாள். கன்னத்தில் முத்தமிட்டாள். மனத்தை தழுவினாள். தூக்கத்திற்குள் தூக்கம் எனக்கு. நிம்மதி என்னை ஆட்கொண்டது. காலம் சென்றதா, இருந்ததா, வந்ததா? யான் அறியேன். மாத்ருபூதம் வந்து எழுப்பினான். ‘என்னடா அப்படி தூக்கம்? போய்ட்டையோ என்று நினைத்தேன்’ என்று அவன் தூபம் போட, நான் சொன்னேனாம்!

“அலமு பாட்டி வந்தாள். புத்தாண்டு வாழ்த்துச் சொன்னாள். கருணையின் மறு வடிவமடா, அவள். கவலையற்க என்றாள். தெளிவு பட, அவள் அளித்த அறிவுரை கேள்.

“மனசு என்பது பொதுச் சொத்து. உன்னுடையதும் என்னுடையதும் அன்று. என்றோ உதித்த துருவ நட்சத்திரமப்பா, அது. ஸ்திரமானது. காலம் என்ற பரிமாணத்துக்கு அப்பாற்பட்டது. அழியாதது. அது சிரஞ்சீவி, ராஜூ. யாரும் அதை உருவாக்கவில்லை. அத்தைப் பாட்டி கதையெல்லாம் கேட்காதே. அந்த அருவம் புராதனமானது; பரிசுத்தமானது; எங்கும் நிறைந்தது. புல், பூண்டு எல்லாவற்றுக்கும், இந்தப் பரந்த மனத்தில் இடம் ‘ரிசர்வ்ட்’. நீ மனதுடன் பேசச் சொல்லிக் கொடுத்துவிட்டேன். எல்லா ஜீவன்களுடனும் நேசத்துடன் பழகு. புலியுடன் உனக்கு விரோதம் எதற்கு? பாம்பும் ஜீவித்திருக்க வேண்டாமோடா? இன்னும் சொல்லப் போனா, புலியும் பாம்புமாக, மனுஷா இருக்காளே, அப்பா. நீ நேசித்தால், எல்லாப் பிராணிகளும் உன்னை நேசிக்குமே. பிள்ளையாருக்கு மூஞ்சூறு, ஐயப்பனுக்கு புலி, மஹாவிஷ்ணுவுக்கு ஆதிசேஷன் என்றெல்லாம் வாஹன பிராப்தியே, உனக்குப் பாடம். நேசித்தால் மட்டும் போறாது. பசித்தவனுக்குச் சோறு போடு. வித்யா தானம் செய். உன்னால், உன்னைச் சேர்ந்தவர்கள் – அதாவது ஜீவன்கள் எல்லாம் – மேன்மை அடைய வேண்டும். உன் கடன் பணி செய்து கிடப்பதே. கொஞ்சம் கொஞ்சமாவது எல்லாரும் இப்படி இருந்துட்டா, இந்த உலகத்தை உய்விக்கலாமே.”

krishnaமூச்சிரைக்க மேலும் சொன்னேன் என்றாள், பக்கத்தில் வந்து நின்று கொண்ட எச்சுமி, “எங்கு பார்த்தாலும் கொள்ளி, கொள்ளை, கொலை, உலகெங்கும். எரியற வீட்டிலே, பீடிக்கு நெருப்பு கேட்கிறாங்க! நம்ம தேசாபிமானம் கரைஞ்சுண்டே வரது. எங்க காலத்திலே, காந்தி மஹான் என்று ஒருத்தர், ஊரைக் கூட்டி வெள்ளைக்காரனை விரட்டிட்டார். பாரதியார் என்ற மஹாகவி ஒரு உத்வேக வெள்ளமடா, ராஜூ. ஏன்? நீங்களெல்லாம், மனசை உதறிட்டு, கரும்புள்ளியும் செம்புள்ளியும் தானே குத்திண்டுட்டு, அரைப் பட்டினி கழுதை மேலே, தலையைத் திருப்பிண்டு, கண்ணை மூடிண்டு, அழுதுகொண்டே சவாரி செய்கிறேள்.”

மூச்சுத் திணற, விழுந்து விட்டேனாம். ஓடோடி வந்த குழந்தை ஒன்று, முகத்தில் தீர்த்த பிரஸாதம் தெளித்ததாம். அதனிடம், பாட்டி சொல்கிறாள், “கிருஷ்ணா! நீ தான்டா இந்த பூலோகத்தை உஜ்ஜீவிக்க வேண்டும். ‘கர’ வருஷமும் பிறந்தது. கருணா கோஷமும் எழுந்தது. நல்லதே நடக்கட்டும். அந்த அக்னியில் தீது எல்லாம் பொசுங்கிவிடும்.”

[அலமு பாட்டி ஜபிக்கிறாள்.]

ஜய ஜய ஹே! ஜகதீஷ ஹரே!
ஜய ஜய ஹே! காமாக்ஷி தேவி!
ஜய ஜய ஹே! சதா சிவா!
ஜய ஜய ஹே! கருணா ‘கர’!

{கோயில் மணி அடித்தது. நாற்று தலையாட்டியது. ஆனை ஆசி வழங்கியது. பசு மாடு ‘அம்மா’ என்றது. பாட்டி மலையேறிவிட்டாள்.}

=================================

படங்களுக்கு நன்றி: http://mail2gokul.blogspot.com, http://debosmita.wordpress.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கருணை செய்யும் ‘கர’ வருடம்

 1. ஜய ஜய ஹே! ஜகதீஷ ஹரே!
  ஜய ஜய ஹே! காமாக்ஷி தேவி!
  ஜய ஜய ஹே! சதா சிவா!
  ஜய ஜய ஹே! கருணா ‘கர’!//

  கருணா”கர” வருட வாழ்த்துகள். பாட்டி சொல்லைத் தட்டாமல் இருக்கிறேன். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

 2. பாட்டி மலையேறியது பற்றி வருத்தமே இல்லை
  மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இறங்கி வருவாள் இரக்க மனசுக்காரி பாட்டி.

  ஆனால் பேரன் சரியான தளமேறியிருக்கிறார்

  அதுதான் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  இந்த தளத்தில் வல்லமையுடன் திடமாக நிற்கட்டும்

  இரக்கமுள்ள பல பாட்டிகள்,தாத்தாக்கள் எங்களுக்கு வேண்டும்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 3. ஆனால் பாருங்கோ. காலமாவது இறக்கறாதவது? அபத்தம். வேணும்னா, கடந்த காலம் என்று சொல்லுங்கள். எதை, எப்போது கடந்தது என்று மனசு கேட்டால், பேந்த, பேந்த முழியுங்கள். ‘நி’யின் நிகழ்காலம், ‘ழ்’ வருவதற்குள் முடிந்துவிட்டது. ஒரே நதியில் இருமுறை கால் அலம்ப முடியுமோ? சரி. எதை ‘வருங்காலம்’ என்கிறீர்கள்? நாளை உதிக்கும் ஆதவன், உன்னுடைய மூதாதைகளில் முதல்வர் ஜனிக்கும் முன், அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன் உதித்தவன். என்னோட அலமு பாட்டி, மத்தவா மனசை படிச்சுறுவாள். இந்தப் பூவுலகில் தற்காலம் வாசம் செய்யாவிடினும், வந்து பேசுவாள்; தெம்பு கொடுப்பாள்; பளிங்கு நீர் மாதிரி கலகலப்பாள். வீணை நாதமும் உண்டு, அவளிடம்; அவள் மிருதங்க பாஷிணியும் கூட. சுளுவா கேட்டாள், ‘ஏன்டா! உன்னிடம் பேசும் நான் ‘காலமாயிட்டேன்’ என்றால், அது வாயா வார்த்தை. எல்லாரும் என்றும் தேவர்கள்தாம். கோட்டையில் இருந்தால் என்ன? கொத்தளத்தில் இருந்தால் என்ன? ஏன் வாயடைத்து நிற்கிறாய்? சொல்’ என்றாள்.

  <<<<<<<<<<<<<<<

  ஆஹா உன்னதமான சொற்கள் உள்ளத்தை அப்படியே உலுக்குகிறது.

 4. மனதை நெகிழச் செய்கிறது தங்கள் பதிவு. அலமு பாட்டியின் ஆசி அனைவருக்கும் கிடைக்க பாட்டியையே வேண்டிக் கொள்வோம். நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *