உறவுக்குக் ‘கர’மளிக்கும் புத்தாண்டே வருக!

3

ஷைலஜா
shylajaவரமாகி உரமாகி உறவுக்கு நற்
கரமளிக்கும் புத்தாண்டே வருக! வாழ்க!
தரமான வாழ்வை என்றும் மக்கள்
தாராளமாய்ப் பெறத் தயக்கமின்றி தருக!

சொத்தாகி சுகமாகிப் பொருளை அள்ளிச்
சுற்றமெல்லாம் களிக்கச் சுவையாய் வருவாய்!
கொத்தாகிக் குலையாகிப் பூக்கள் பூக்கும்
கோடையிலே பூத்திடவே கர ஆண்டே வருக! வருக!

இயற்கைத்தாய் சீறிடாமல் எம்மைக் காப்பாய்!
இவ்வுலக உயிரினங்கள் தம்மைக் காப்பாய்!
அயர்வின்றி பெருகிடவும் மனித நேயம்
அருகுபோல் வேருன்றி உலகம் எங்கும்
வியனுறவே வளர்ந்திடவே செய்வாய் தாயே!
வேற்றுமைகள் போக்கிடவே வளங்கள் சேர்ப்பாய்!
செயற்கைக்கோள் விஞ்ஞானச் செயல்கள் யாவும்
சீர்பெற்று ஓங்கிபுகழ் அடையச் செய்வாய்!

சித்திரையில் கால் ஊன்றி வந்த தாயே!
செந்தமிழ்போல் எமையெல்லாம் செழிக்க வைப்பாய்!
இத்தரையில் புல்பூண்டு அனைத்தும் வாழ
இதமான மழையைப் பின் தருவாய் நீயே!

முத்தாக மலராகத் தோன்றும் எங்கள்
முத்தமிழ்போல் நிலைவாழ்வு அளிப்பாய் தாயே!
வித்தாக மனிதநேயம் மனத்தின் உள்ளே
சத்தாக இருந்திடவே செய்வாய் தாயே!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “உறவுக்குக் ‘கர’மளிக்கும் புத்தாண்டே வருக!

  1. இப்படி விழைந்து, குழைந்து அழைத்தால், அவள் வரத்தான் செய்வாள். வந்து நிறைவும் கொடுப்பாள். வாழ்த்துக்கள்.

  2. அருமையான புத்தாண்டு வாழ்த்து.

    அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *