“ஆதிமூலமே என்னைக் காப்பாற்று”

1

விசாலம்

Gajendra Moksham

சித்திரை மாதத்தின் பௌர்ணமி மிகவும் விசேஷம் வாய்ந்த ஒன்று. இந்தப் பௌர்ணமியில் தான் “கஜேந்திர மோக்ஷம்” என்னும் நிகழ்ச்சி, சில வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படும். சென்னையில் நெற்குன்றம் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவிலில்  இந்த நிகழ்ச்சி நடக்கும். இதே போல் காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலும் நடக்கும்.

ஸ்ரீரங்கத்தில் காவிரி தீரத்தில் அம்மா மண்டபம் எனும் படித்துறை இருக்கிறது. இந்தப் படித்துறையில்தான் ‘கஜேந்திர மோக்ஷம்’ விமரிசையாக  நடக்கும். நாமும் அந்த இடத்திற்குச் செல்வோம்.

எங்கும் பக்தர்கள் கூட்டம். சிலர் புருஷ சூக்தம் சொல்கின்றனர். இந்த நேரத்தில் ராஜ நடை போட்டபடியே ஸ்ரீரங்கம் கோயில் யானை அலங்காரத்துடன் வருகிறது. யானை இப்போது யானைப் பாகன் உதவியுடன் காவிரி ஆற்றில் இறங்கி நிற்கிறது.

யானையின் காலைக் கவ்வ ஒரு முதலை வரவேண்டுமே! நிஜ முதலையை நம்ப முடியுமா? அதனால் வெள்ளியினால் செய்யப்பட்ட முதலையை ஆற்றில் விட்டு யானையின் காலைக் கவ்வுவது போல் காட்டுகிறார்கள். பின் விஷ்ணுவின் நாமம் ஒலிக்க, ஒரு சக்கரம் வந்து முதலையின் வாயை அறுப்பது போல் ஒரு காட்சி……

இந்த யானையின் கதை என்ன? இந்த யானை யார்?

அரசன் இந்திரதும்யன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். எப்போதும் அவன் வாய், ‘நமோ நாராயணாய’ என்ற நாமத்தை ஜபித்தபடி இருக்கும். ஒரு சமயம் அவன் பூஜையில் இருக்கும் போது துர்வாச முனிவர் வந்தார். பூஜைக்கு முக்கியத்தவம் கொடுத்த அவன், பூஜை முடிந்த பின்தான் முனிவரைக் காண வந்தான். அதுவரை துர்வாசர் காத்துக்கொண்டிருந்தார். துர்வாசர்தான் கோபத்திற்குப் பேர் போனவர் ஆயிற்றே! வந்துவிட்டது கோபம்! பிடி சாபம் என்று சாபமும் கொடுத்தார்.

“என்னை மதிக்காமல் பூஜை செய்த நீ, மதம் பிடித்த யானையாக மாறக் கடவது”

மன்னன், அவர் கால்களின் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பின் நான் யானையானாலும் விஷ்ணு பக்தி தொடர வேண்டும் என வேண்டினான். துர்வாசரும் கோபம் தணிந்து,  “அந்த விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும்” என்றார்.

யானையின் காலைப் பிடித்த முதலை யார்? அதன் கதை என்ன?

கந்தர்வன் ஒருவன், மிகவும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தான். அவன் பெய்ர் “கூஹூ”.  அவன் அடிக்கடி ஒரு பொய்கைக்கு வந்து அங்கே கால் கழுவ வருபவர்களின் காலை இழுப்பான். அவர்கள் பயத்தில் அலறுவார்கள். ஒரு சமயம், முனிவர் ஒருவர் அந்தப் பொய்கைக்கு வந்தார். பொயகை நீரில் காலை அமிழ்த்தினார். கூஹூ அவரது காலையும் இழுத்து விளையாடினான். அவரும் கோபம் கொண்டு “நீ தண்ணீரிலேயே  அமிழ்ந்து தவிக்கும் முதலையாக ஆகிவிடுவாய்” எனச் சாபம் கொடுத்தார்.

கந்தர்வனும் தன் தவற்றினை உணர்ந்து, அவர் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க, “விஷ்ணுவினால் உன் சாப நிவர்த்தி ஏற்படும். அவரது சுதர்சனச் சக்கரம், உன் மேல் பட, நீ பழைய நிலைக்கு வருவாய்”  என்றார். இதனால்தான் முதலை மேல் சுதர்சன சக்கரத்தை மஹாவிஷ்ணு வீசி, கந்தர்வனுக்கு மோக்ஷம் அளிக்கிறார்.

இந்தக் கதையினால் நமக்குப் பூரண சரணாகதியின் சிறப்பு தெரிய வருகிறது.

யானை முதலில் தன் உடல் வலிமையினால் தப்பிக்க முயல்கிறது. பின் தன் சகாக்களின் உதவியால் தப்பிக்க முயல்கிறது. அப்படியும் ஒரு பலனும் இல்லாமல் போக, தன் தும்பிக்கையைத் தூக்கி,  “ஆதிமூலமே நீயே கதி” என அலறியவுடன், மஹாவிஷ்ணு கருட வாகனத்தில்  வந்து, சுதர்சன சக்கரத்தை வீசிக் காப்பாற்றுகிறார். திரௌபதியைக் காத்ததும் பூரண சரணாகதிதான்.

அகங்காரம், மமதை ஆகியவற்றை விட்டு, மாயையிலிருந்து விடுபட்டு, அவன் தாள் பற்றினால், அதுவே பூரண சரணாகதியாகும். நம்மைக் காப்பாற்ற இறைவன் ஓடோடியும் வருவான் என்பது நிச்சயம்.

==============================================

படத்திற்கு நன்றி: http://srivaishnavanetwork.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““ஆதிமூலமே என்னைக் காப்பாற்று”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *