ஷைலஜா

“அட! நீங்… நீ… ர…. ரங்கப்ரியா தானே?’’ திகைப்புடன் ராதிகா கேட்டபோது புன்னகையுடன் தலையாட்டியவளைப் பார்த்து மேலும் சொன்னாள்.

“நெனச்சேன்; அந்த உதட்டு மச்சமும், சுருட்டை மயிரும் உன்னை ரங்கப்ரியாவே தான்னு சத்தியம் பண்றதுடி! வாட் எ பிளெசெண்ட் சர்ப்ரைஸ்!” பதினைந்து வருடங்கள் கழித்து தனது பழைய சிநேகிதியை நேரில் பார்த்த உற்சாகத்தில் கூவினாள் ராதிகா.

“அம்மா! அம்மா!’’ தனது கால்களைக் கட்டிக்கொண்ட மகன்களைச் சேர்த்து அணைத்தபடி நின்றவளை ரங்கப்ரியாவும் ஏறிட்டாள்.

முப்பத்து ஐந்து வயதில், கூட பத்து வயசு மதிக்கலாம் போலிருந்த ராதிகாவின் தோற்றத்தைக் கண்டு வாடிய முகத்தைச் சமாளிக்க, “ராது! உன்னைப் பார்க்கணும்னு தேடி வந்திருக்கிறேன். இத்தனை வருஷம் கழித்து வந்து நிக்கிறவளை ’வா ரங்கப்ரியா! சௌக்யமா இருக்கியா? வீட்டுக்குள்ள வாடி’ அப்படீன்னு வரவேற்காமல் அப்படியே நிக்கறயேடி!  ஹம்… படிக்கிற நாளிலும் இப்படித்தானே. பிரமிப்பான விஷயங்களை பார்த்தாலோ கேட்டாலோ நீ ஸ்தம்பித்துப் போயிடுவே? அந்த விஷயத்துல நீ மாறவே இல்லை…’’ என்றாள் சிரித்தபடி.

“ஓ… ஸாரி  ஸாரி… உள்ள வாடி… வீடு ரகளையா இருக்கும். ஒண்ணும் நினைச்சிக்காத, பிளீஸ்.. மூணும் வால் குழந்தைங்க, அதான்…’’

ரங்கப்ரியா ஜாக்கிரதையாகப் பாதத்தைத் தூக்கி வைத்து, காலடியில் கூடம் முழுவதும் இறைந்திருந்த ஹெலிகாப்டர், கார், கிரிக்கெட் மட்டை, பென்சில் பாக்ஸ், நோட்டுப் புத்தகம் – எதன்மேலும் விரல் நுனி படாமல் சோபாவில் உட்கார்ந்தாள்.

“வசுதா, அக்க்ஷய், அசோக்! நீங்க மூணு பேரும் வாசல்ல கொஞ்ச நாழி வெளையாடிட்டு வாங்க… நான் என் ஃப்ரண்ட் கிட்ட பேசிட்டு வரேன், என்ன?’’

“யாரும்மா இந்த ஆண்ட்டீ? ஜீன்ஸ் டீ ஷர்ட், கூலிங்கிளாஸ் பாப்கட்டுனு அசத்தலா இருக்காங்க?’’ பன்னிரண்டு வயது மதிக்கலாம் போலிருந்த வசுதா ஆர்வமாய் கேட்டாள்.

ராதிகா ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் ரங்கப்ரியா, “நான் உங்கம்மாவோட காலேஜ் மேட்!  ராதிகாவுக்கு ரிஸல்ட் வரதுக்குள்ள கல்யாணம் ஆகிட்டது. நான் மேற்படிப்புக்காக அமெரிக்கா போனேன், அங்கேயே வேலை கிடைச்சி, இப்பத்தான் இரண்டு வாரம் முன்னாடி சென்னைக்கு வந்திருக்கேன். இனிமே சென்னை வாசிதான் நான்’’ என்றாள்.

“கூல் ஆண்ட்டி! ஹாவ் எ நைஸ் டைம்! நாங்க விளையாடப் போறோம்!’’

“பாத்து வசு, அசோக் கேட்டைத் தாண்டி வாசல்ல போயிடாம பாத்துக்கோ…’’ என்று மகளை எச்சரித்துவிட்டு ராதிகா, ரங்கப்ரியாவிடம் சட்டெனக் கேட்டாள்.

“ரங்கப்ரியா! காலேஜ் நாள்ல சொன்ன மாதிரி நீ இன்னமும் கல்யாணமே பண்ணிக்கலையாடீ?”

ரங்கப்ரியா புன்னகைத்தாள். “பெண்கள் என்றால் கல்யாணம், புருஷன், குழந்தை குட்டீன்னு வாழற வாழ்க்கைக்கு நான் எதிரின்னு அன்னிக்கு சொன்னபடிதான் இப்பவும் வாழறேன்!’’ என்றாள்.

“நெஜமாவா? அமெரிக்கால யாரையும் காதலிக்கலையா? கல்யாணம்? குழந்தைகள் ஏதும்…?’’

“பிடிக்காத ஒண்ணை நெருங்க விட்டுடுவோமா? உயிரோடு இருந்தவரை அமெரிக்காவுக்கு என் கூட வந்து இருந்த அம்மா வற்புறுத்தினாங்க. நாளைக்கு உன்னைக் கவனிக்க ஒரு குழந்தை வேண்டாமா? அதுக்காகவாவது கல்யாணம் செஞ்சிக்கோ’’ என்று சொன்னாங்க. எனக்கு அந்த மாதிரியான வாழ்க்கை அமைப்பில் பிரியமில்லைன்னு சொல்லிட்டேன். இப்பவும் அந்த எண்ணம் இல்லை, ராதிகா. ஒரு பெண்ணின் எதிர்காலக் கனவைக் கல்யாண வாழ்க்கை குழிதோண்டிப் புதைச்சிடுது. உன்னையே எடுத்துக்கோ. எவ்வளவு நன்றாய் நீ பாடுவாய்! ’துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ன்னு நீ பாடினால் உருகாத நெஞ்சமும் இருக்குமா? கல்யாணம் ஆனபிறகு உன் பாடல்கள் எல்லாம் என்னாச்சு? நானும் அமெரிக்காவிலிருந்தப்போ இன்டர்நெட்டுல தமிழ்நாட்டுச் செய்திகள் படிக்கிறபோது என்னிக்காவது ஒரு நாள், ’பிரபல பாடகி ராதிகா அவர்களின் இசை நிகழ்ச்சி’ன்னு எங்காவது செய்தி வராதான்னு பார்ப்பேன். நான் யூகிச்ச மாதிரி நீ குடும்ப வலைல விழுந்து “குழந்தை, குட்டின்னு உன் திறமைகளை எல்லாம் இழந்து நிற்கிறே!’’

“ப்ச்… என்னடி பண்றது? உலகத்துல பல பெண்களின் நிலை இதுதான். வெற்றிபெற்ற ஒவ்வொரு ஆணின் பின்பு ஒரு பெண் நிற்கிறாள் என்றால், பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவள் குடும்பமே நின்றாலே ஒழிய அவள் சாதிக்கச் சாத்தியமில்லை. அல்லது உன்னைப் போல தனிக்கட்டையாய் இருக்கணும். அதிருக்கட்டும், திடீர்னு எதற்கு இந்தியாவுக்கு வந்திருக்கே?’’

“அமெரிக்கால சம்பாதிச்சதை எடுத்திட்டு வந்து இங்கே ஏதாவது சமூக சேவை செய்யலாம்னுதான் வந்திருக்கேன். கோடம்பாக்கத்துல ஒரு ஃப்ளாட்டுல குடி இருக்கேன். தனியா ஒரு பெண் வாழ்வது அமெரிக்கால தவறான விஷயமில்லை. இங்கே நாகரீகம் வளர்ந்தாலும் இன்னமும் ஜனங்களின் கண்ணோட்டம் மாறலை. ஃப்ளாட்டில் பலரின் பார்வை என் மேல சந்தேகக் கீற்றோடு விழுது. நான் அதுக்கெல்லாம் கவலைப்படலை. ’உலகின் வாயைத் தைப்பது கடினம், உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்’னு கவிப்பேரரசு சொல்லி இருக்கிறதைச் செயல்படுத்திக் கொள்கிறேன். சரி, கௌம்பறேன் ராது. இந்தா குழந்தைகளுக்கு சாக்லேட் நிறையக் கொண்டு வந்திருக்கேன், நீ கொடுத்திடு.’’

பெரிய சாக்லேட் டப்பாவை ராதிகாவின் கையில் தந்துவிட்டு ரங்கப்ரியா விடைபெற்றாள்.

“சாப்ட்டு போகக்கூடாதடீ?’’

“ஃபார்மாலிடீஸ் எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும். சாப்பிடத் தோணினா நானே வருவேன்.’’

“பிடிவாதம் போகலைடி உனக்கு”

“பிடிவாதம் இல்லை, பிடிமானம். அது இருக்கிற வரைதான் பிடிப்பில் பற்று இருக்கும். சரி, வரட்டுமா?’’

“ம்.. பை ரங்கப்ரியா’’

கையசைத்து விடைபெற்று வெளியே வந்து காரில் ஏறினாள்.

செல்போன் மணி அடித்தது.

“ஹலோ?’’ என்றாள் ரங்கப்ரியா.

“ரங்கப்ரியா மேடம் நான், கோடம்பாக்கம் மலர்கள் அபார்ட்மெண்ட்ஸ், மகளிர் சங்கத்தின் செக்ரடரி சுபரேகா பேசறேன்!’’

“சொல்லுங்க… ஃப்ளாட் வந்த மறுநாளே எனக்கு உங்க அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி. என்ன விஷயமா இப்ப போன் பண்ணீங்க சுபரேகா?’’

“மேடம்! புறநகர்ப் பகுதில புதுசா முளைத்து இருக்கிற சில அனாதை இல்லங்களில் பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி விக்கறாங்களாம்.  அரசு மருத்துவமனையில் பிறக்கிற சிசுவிலிருந்து, பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஐந்து வயது குழந்தைகள் வரை பல குழந்தைகளைக் கடத்தி வைத்து இல்லத்தில் பாதுகாப்பதாய்ச் சொல்லி விக்கறாங்களாம். இதை என் ஃப்ரண்ட் பூர்ணிமா, தனக்கும் குழந்தையில்லைன்னு அங்கே போய் சொல்லிக் கேட்டபோது, ஐம்பதாயிரம் தந்தால் தர்றதா சொன்னதிலிருந்து தெரிய வந்தது. உடனே போலீசுக்குச் சொல்லி நடவடிக்கை எடுக்கிறோம். நீங்ளும் புறப்பட்டு வாங்க மேடம்!’’

“இதோ வர்றேன். என்ன அக்கிரமம்! ஆஸ்பத்திரிலேந்து திருடறாங்களா? பள்ளிக்கூடத்திலிருந்து கடத்தறாங்களா? அநியாயம். கொடுமை, மகாக் கொடுமை!’’ கத்தியபடி செல்போனை ஆஃப் செய்தாள்  ரங்கப்ரியா. அப்போது… படபடவென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. நா வறண்டு  போனது. சட்டென நெற்றி வியர்க்க பின் முதுகில் ’சுளீர்’ என வலி தோன்ற ஆரம்பித்தது.

காரை உசுப்ப, சாவியைக் கஷ்டப்பட்டு எடுக்க முயலுகையில் கையிலும் வலி பரவியது. அவ்வளவுதான் ’ஆ’ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கார் ஸ்டியரிங் மீது சாய்ந்துவிட்டாள்.

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த வசுதா, தற்செயலாய்த் திரும்பியவள் ரங்கப்ரியாவின் நிலையைக் கண்டு கார் அருகில் ஓடி வந்தாள்.

கதவைத் திறந்து “ஆண்ட்டீ! ஆண்டடீ!’’ என்று கூவினாள்.

பதில் இல்லை.

கலவரமாய் தன்னைத் தொடர்ந்த உடன்பிறப்பிடம், “தம்பி… வீட்ல போய் அம்மாகிட்ட சொல்லுடா… ஆண்ட்டீக்கு என்னவோ ஆயிடிச்சின்னு சொல்லி இங்கே கூட்டிட்டு வா, ம் சீக்கிரம் போ…’’ என்று உத்தரவிட்டாள்.

“ஐயையோ ஆண்ட்டிக்கு என்னவோ ஆச்சி… அம்மா… அம்மா…’’ கதறிக்கொண்டே அக்ஷய், ராதிகாவை அழைக்க ஓடினான்.

அசோக் ’திருதிரு’வென முழித்துக்கொண்டு அக்காவின் விரல்களை இறுகப் பற்றி நின்றான்.

வசுதா, தன் பாவாடையை விசிறி போல் மடித்து ரங்கப்ரியாவின் மீது காற்றை வீச முயன்றாள். காருக்குள் தண்ணீர் பாட்டில் எங்காவது இருக்கிறதா என அவள் கண்கள் சுழன்று தேடின.

அதற்குள் ராதிகா அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்தவள், “ஐயோ என்னடீ ஆச்சு  என் சிநேகிதிக்கு? வசுதா, அடுத்த தெருவுல டாக்டர் பத்ரிநாத்னு போர்டு போட்ட வீட்டுக் கதவைத் தட்டி, அவரைக் கையோடு அழைச்சிட்டு வா, போ சீக்கிரம்’’ என்று பதற்றமாய்ச் சொன்னாள்.

“சரிம்மா… நீ ஆண்ட்டியைக் கவனமா பாத்துக்கோ… டாக்டர் அங்க இல்லேன்னா நான் ஆ°ஸ்பத்திரிக்கு போன் பண்ணி ஆம்புலன்சை வரவழைக்கிறேன்…’’

“அம்மா, இந்தா தண்ணீ… ஆண்ட்டியோட மூஞ்சில அடிச்சிப் பாரும்மா, மயக்கமா இருக்கும்’’ என்று அக்ஷய் ஒரு டம்ளரில் தண்ணீரோடு வந்தான். ராதிகா அதை வாங்கிக்கொண்டாள்.

அசோக் என்னவோ ஏதோ என்று அழத் தொடங்கிவிட்டான்.

தண்ணீர் முகத்தில் பட்டதும் மெல்லக் கண் விழித்த ரங்கப்ரியா சிரமப்பட்டு ஏதோ பேச முயலும் போது வசுதா, டாக்டருடன் அங்கு ஸ்கூட்டரில் வந்து விட்டாள்.

அடுத்த அரை மணிக்குள் நர்ஸிங் ஹோமில் சேர்க்கப்பட்ட ரங்கப்ரியாவைப் பரிசோதித்த டாக்டர் பத்ரிநாத், “இவங்களுக்கு மாரடைப்பு வந்திருக்கு… சரியான டைம்ல கவனிச்சதால உயிர் பிழைச்சது. கொஞ்சம் தாமதமாயிருந்தா என்ன வேணாலும் ஆகி இருக்கும்’’ என்றார். பிறகு கட்டில் அருகே கண்ணில் நீர் மல்க நின்று கொண்டிருந்த வசுதாவைப் பார்த்து, “இந்தப் பொண்ணு நாலுகால் பாய்ச்சல்ல ஓடிவந்து என்னை உடனே கிளம்பி வரச் சொன்னபோது இவளுக்கிருந்த படபடப்பை அப்போ பார்க்கணுமே! பை தி பை.  இந்தப் பொண்ணு யாரு?’’ என்று கேட்டதும் ராதிகா, “என் பொண்ணுதான்’’ என்றாள். பெருமையாக.

“எனக்கும் இனிமே வசுதா பொண்ணுதான்… இந்த இரண்டு குழந்தைகளும் எனக்கும் பையன்கள்தான்…’’ என்ற ரங்கப்ரியாவின் குரல் நெகிழ்ந்து வந்ததை ராதிகா உணர்ந்து, அவள் தலையை ஆறுதலாய்க் கோதிவிட்டாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *