செண்பக ஜெகதீசன்

காத்திருக்கிறானாம் காதலன்-

மலைசொன்ன சேதி

மனதுக்குப் பிடித்துவிட்டது,

மலையில் தவழ்ந்த சிற்றாறுக்கு..

 

ஆடி அசைந்து

அமைதியாய் வந்த ஆறு,

ஆர்வம் அதிகமாகிக் குதித்தது

அருவியாக..

காயம் ஏதும் படவில்லை-

காதல் என்றாலே

கடுகுதானே மலைகூட…

 

தரைக்கு வந்ததும்

தானாக வந்தது பாட்டு..

வரப்புக்களின் அணைப்பிலே

வழிநடைப் பயணம்-

சல சல சத்தத்துடன்,

வளம்சேர்க்கும் நதியாக..

 

துள்ளிக் குதித்தும்,

தள்ளிக்கொடுத்தும் தடுக்கிவிழுந்தும்,

சுழித்தும் சுழன்றும்,

தடைகளைத் தகர்த்தும்

துடிக்கும் இளமையாய்..

 

கரையோர மரமெல்லாம்

வாழ்த்துச் சொல்ல,

கைமாறாய்த் தாகம் தணித்து

தாவிச் செல்கிறது

இலக்கை எட்டிப்பிடிக்க..

 

மலையரசன் சொன்னது சரிதான்-

அலைக்கரங்கள் நீட்டிக்

கடற்காதலன் காத்திருக்கிறான்..

கண்டுகொண்டது நதி-

கட்டுப்பாடுகள் கட்டறுந்து

தாவி விழுந்தது

தலைவன் கரங்களில்…!

 

மீண்டும் தொடங்குகிறது

காதல்கதை,

அதுவே தொடர்கதையாய்-

மலைமேலே…!

 படத்துக்கு நன்றி

http://www.zastavki.com/eng/Widescreen/wallpaper-5159.htm          

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அதே கதையாய்…

  1. நாங்கள்லாம் ஆத்தில தண்ணி ஓடுதுன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்.
    நீங்கள் அதை உவமைகளோடு அழகு நிறைந்த கவிதையாக அல்லவா கொடுத்து விட்டீர்கள்.

  2. தேமொழி அவர்களின் ரசனைக்கும்
    கருத்துரைக்கும் நன்றி…!

           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *