இருளில் ஒளிரும் தீப ஒளி!

0

பவள சங்கரி

தலையங்கம்

புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு, வானவேடிக்கை என்று தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடிய காலமொன்று இருந்தது. வருடம் முழுவதும் உழைத்து, அதில் பெற்ற ஊக்கத் தொகையை வைத்து ஆயிரம் கற்பனைகளுடன் காத்திருக்கும் குழந்தை குட்டிகளுக்கு ஓரளவிற்காவது திருப்திபடுத்தி இன்பமாக கொண்டாடிக் கொண்டிருந்ததற்கும் இன்று வேட்டு வைத்தாகிவிட்டது. “என்னங்க …. தீபாவளி, வயித்துப்பாட்டுக்கே இங்கே திண்டாட்டமா இருக்கு, இதுல எங்க, பண்டிகைக் கொண்டாட்டமெல்லாம்” இதுதான் இன்றைய ஜவுளி நகரமான கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தின் மத்தியதர மற்றும் கீழ்தட்டு மக்களின் புலம்பலாக இருக்கிறது. மத்தியதர குடும்பங்களும் இன்று கீழ்தர பொருளாதார நிலைக்கு இறங்கியுள்ளதுதான் வேதனையின் உச்சம். உழைக்கத் தயாராக இருக்கும் மக்களுக்கே இந்த நிலை என்றால் ஏனையோருக்கு கேட்கவே வேண்டியதில்லை. மின்வெட்டு, வேலை இல்லை என்று சுருண்டு கிடக்கப் பழகிவிட்டார்கள். ஆம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே தொழிற்கூடங்கள் இயங்க முடிகிற இன்றைய நிலையில் தொழிலாளர்களுக்கு, சிறு முதலீட்டாளர்கள் எந்த அளவிற்கு ஊக்கத்தொகை கொடுக்க முடியும்? எட்டு மணி நேரம் செய்யும் வேலைக்கு வாங்கும் கூலியே வாய்க்கும், வயிற்றுக்கும் போதவில்லை, குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை என்று புலம்பும் தொழிலாளர்கள் இன்று மூன்று மணி நேர வேலை மட்டுமே செய்ய முடிந்து அதற்கான கூலியை மட்டுமே பெறும் சூழலில் புலம்பவும் சத்தில்லாமல் நொந்து போய்க் கிடக்கிறார்கள் என்பதுதான் உணமை.. 50 தறி போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு முதலீட்டாளர், மூன்று மணி நேர மின்சாரம் மட்டுமே இருக்கும் சூழலில் , கொள்முதல் செய்யும் சரக்கின் அளவும் குறைந்து, அந்த வியாபாரிக்கும் சரக்கு தேங்கிப் போகும் சூழலோடு, தொழிலாளர்களுக்கு மூன்று மணி நேரத்திற்குரிய கூலி மட்டுமே கொடுக்க முடிகிறது.  அவர்களுக்கான ஊக்கத் தொகையும் கனிசமாகக் குறைத்து விட்டது.. சமத்துவம் என்று வாயளவில் பேசுபவர்களின் பாரபட்சம் விளங்கவில்லை. கடுமையாக தொழில்நிலை பாதிக்கப்பட்டு, மொத்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்யக்கூடிய ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் நலிவடையும் படியாக கடுமையான மின்வெட்டு இருக்கும் போது சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மட்டும் 2 மணி நேரமே மின்வெட்டு என்று நிர்ணயிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இதற்கான எதிர்ப்புகளும் கிளம்பிய சூட்டோடு அணைக்கப்பட்ட மர்மமும் புரியவில்லை. இந்த இலட்சணத்தில் பண்டிகை கொண்டாட்டங்களுக்காகச் சில பெரிய கடைகளில் சீரியல் விளக்குகளைப் போட்டு மின்சாரத்தை வீணாக்கும் கொடுமையைக் கேட்க எவரும் இல்லை, சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதற்கான பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடியச் சூழலில் நோம்பிய்ம், நொடியும் தேவையா என்று நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் இன்றுவரை வெளிவரவில்லை என்பதே நிதர்சனம்.  இருளில் ஒளிரும் தீபத்திருநாளுக்கு வாழ்த்துக்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *