திலகபாமாவின் இரு கவிதைகள்
மழையாகிய மேகங்கள்
திரளுகின்ற மேகங்கள்
காணாது போவது பற்றி
குற்றப் பத்திரிகை வாசிக்குமுன்
வேரூன்றி நின்று போன
மரமாகி விட்ட உனை
குளிர்த் தூவலில் நனைத்தவளும் நானே
என்று புரிவாயா?
நிரம்பி வேறொன்றாய்
மாறிவிட்ட என்னைப் பார்த்தபின்
காலியாவது உசிதமானதென்று
கட்டளையிடுகின்றாய்
வேறொன்றுமாவதும்
ஒன்றுமில்லாததும்
வேறு வேறானவை என்ற புரிதலின்றி.
====================================
மசோதா பொய்கள்
சட்டங்கள் எண்ணிக்கையின்
கூடுதலில் அரியணை ஏற
மனங்கள் கணக்கிடுகின்றன
பாதரட்சைகளை
பீடமர்த்தி விட்டு பதவிகளைக்
கையெழுத்துக்கிடையில்
காசாக மாற்ற
தேன் குடித்த சிட்டின் கால்களில்
மகரந்தச் சேர்க்கைகள் நிகழ்ந்துவிட
மசோதாக்கள் தாண்டி
பொய்களை நிஜங்களாக்கிய உலகத்தில்
நிஜங்கள் வாழ்வாகும்.
தெரியாதிருந்த விண்மீன்
மாறும் நாளிரவுகளில்
பகலிலும் பார்க்கலாம்
பெண் தினங்கள் அன்று
காணாமல் போகலாம்.
9.03.10
மகளிர் மசோதா நிறைவேறிய தினம்.
======================================
படத்திற்கு நன்றி – http://mathibama.blogspot.com
‘pen dhinangal kaanaamal pogaadhu ‘ yendru nambinaalum, “poigalai nijangalaakkiya vulagaththil” indha kavidhaikul kaaththirukkum kobam pol, vaasippu aazhaththai thoondugiradhu thilagabama’vin padaippu.