துளசிச் செடிகளில் மணக்கும் மனித உறவுகள்

5

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி  18)

வெங்கட் சாமிநாதன்

Venkat_swaminathan_paintingநண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பெருமை சேர்த்தது. இதெல்லாம் தற்செயலாக நேர்ந்தது தான். இதே போல இன்னொருவருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியாது. செல்வாக்கே ஏதும் இல்லாத எனக்கு, சந்தர்ப்பங்கள் கூடி வந்ததால் கிடைத்த ஒன்றே அது அல்லாது என் சாமர்த்தியத்தால் அல்ல. இருந்தாலும் தேவசகாயத்துக்கும் வேலுவுக்கும் என்னிடம் சினேகம் நெருக்கமானது, இதனால் அல்ல. இதில்லாமலேயே அவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் முதலிலிருந்தே இருந்தார்கள்.

உண்மையில் சொல்லப் போனால், அங்கு புர்லாவில் 1951இலிருந்து 1956 வரை இருந்த அந்த ஆறு வருடங்களில் அந்த வீட்டில் என்னோடு குடியிருக்க வந்தவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். சுமார் இருபது பேர்கள் அவ்வப்போது வருவதும் பின்னர் இடம் மாறிப் போவதுமாக இருந்தாலும், யாருடனும் மனக் கசப்பு இருந்ததில்லை. யாரையும் ‘இனி நமக்கு ஒத்து வராது, நீங்கள் வேறிடம் பார்த்துப் போகலாம்’ என்று சொல்ல நேர்ந்ததில்லை. கேலிகள் உண்டு. சில சமயங்களில் தெரியாது மனம் வேதனைப்படச் செய்ததுண்டு. அப்படியும் ஒரு தடவை நேர்ந்தது. ஆனால் அதைச் சொன்னால் படிப்பவர்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.

குழந்தைகள் இல்லாதது வெறிச்சென்று இருந்தது என்று சொன்னேன். ஆறு மாத காலமோ, என்னவோ. கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியது. எங்கிருந்தோ ஒன்றிரண்டு துளசிச் செடிகளைக் கொணர்ந்து, தாழ்வாரத்தில் நட்டிருந்தார்கள். ஹிராகுட்டில் மழைக் காலம் ரொம்பவும் தீவிரம். நிறைய ஓயாது மழை பெய்யும். வருஷத்துக்கு 90 அங்குலம் மழை பெய்யும். அந்த மழையே போதுமோ, என்னவோ விவசாயத்துக்கு. எந்த நிலத்துக்கும் நீர்ப் பாசனம் செய்து நான் பார்த்தது இல்லை. யாரையும் வயலில் உழுது, பரம்படித்து நாற்று நட்டு பார்த்ததில்லை. ஆனால் செழித்து வளர்ந்து காற்றில் அலையாடும் நெற்பயிரைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு செழிப்பான பருவமும் நிலமும் கொண்டது அந்த இடம்.

துளசி

மழைப் பருவம்  ஓய்ந்ததும் பார்த்தால் தாழ்வாரம் முழுதும் துளசிச் செடிகள். குழந்தைகள் நட்டிருந்த துளசிச் செடி வளர்ந்து அதன் விதைகள் காற்றில் பறந்து தாழ்வாரம் மூழுதும் பரவி விழுந்து, இப்போது மழைக்குப் பின் பார்த்தால் ஒரே துளசிக் காடாக இருந்தது தாழ்வாரம் முழுதும். காடாக மண்டிக் கிடந்தாலும் அந்தத் துளசிச் செடிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் குழந்தைகள் நினைவுதான் எனக்கு வரும். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் பார்த்தால் தாழ்வாரம் வெறிச்சென்று கிடந்தது.

அவ்வளவு செடிகளையும் வேரோடு கல்லி கொல்லைப் புறம் எறிந்திருந்தார் சீனுவாசன். அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். ஒரு அரிய காரியத்தைத் தனி ஒருவனாகச் சிரமம் எடுத்துச் செய்த பெருமிதம் அவர் முகத்தில் பிரகாசித்தது. “கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டேன். பாத்தேன். ஏன், நாமே செய்துடலாமேன்னு தோணித்து. நானே எல்லாத்தையும் கிளியர் பண்ணீட்டேன் சாமிநாதன். இனிமேல் கொசுத் தொல்லை இராது” என்றார்.

எனக்கு எதையோ பறிகொடுத்தது போன்று மனத்தில் வேதனை. அதை அவரிடமும் சொல்ல முடியாது. அவரிடமென்ன?, யாரிடமுமே சொல்ல முடியாது. சிரிப்பார்கள். இது நடைமுறை விவேகத்துக்கும் அலைபாயும் மனச் சலனங்களுக்கும் உள்ள பெரும் இடைவெளி.

இது, 1952இல் நடந்த சமாசாரம். இப்போது கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகப் போகின்றன. அந்தக் குழந்தைகள் இப்போது 60 சொச்சம் கிழவர் கிழவிகளாகியிருப்பார்கள், பேரன் பேத்திகளோடு. இப்போது என்ன? அவர்கள் புர்லாவை விட்டுப் போன மறுநாளே அந்தக் குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்திருக்கும். வயதான எனக்குத்தான் ஞாபகங்கள் மனத்தை வருத்திக்கொண்டிருந்தன.

இதைப் பற்றி பத்து வருடங்கள் கழித்துக் கூட எங்கோ எழுதியிருக்கிறேன் என்று நினைவு. எழுத்து பத்திரிகைக்கு எழுதிய ஏதோ ஒரு கட்டுரையில், 1961-82இல். துளசிச் செடிகள் கல்லி எறியப்பட்டால் இழந்த நெருங்கிய மனித உறவுகளை அது நினைவுபடுத்தும் என்றால், அது ஒவ்வொரு மனதுக்குத்தான். எல்லோருக்கும் அல்ல.

பின்னால் சில வருஷங்களுக்கு முன் ஒரு கவிஞர் வள்ளலாரின் ‘வாடிய பயிரைக் கண்டு வாடினேன்’ என்ற வரியை மேற்கோள் காட்டி ஏதோ சொல்ல, அதை மறுக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் அப்போது மார்க்சீய அறிஞர் என அறியப்பட்ட அ.மார்க்ஸ், “ஏன் வாடணும்? தண்ணி ஊத்தீருக்கலாமே, அது ஏன் தோணலை” என்றோ என்னவோ அவருக்குப் பட்டதைச் சொல்லியிருந்தார்.

எனக்கு அன்றும், சரி இன்றும், மனித சமுதாயத்துக்கு என்றுமே வள்ளலாரின் அந்த வரி எல்லா உயிரிடத்தும் பாசம் கொள்ளும் மகத்தானதும்  சக்தி வாய்ந்ததுமான மந்திரம் போன்ற வரி அது. அதை நிஷ்டூரமாக உதறித் தள்ளும் மனது, மூர்க்கம் நிறைந்த மனதாகத்தான் இருக்க வேண்டும். என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ.

THIRUKARUKAVOOR

நண்பர் சீனிவாசன், திருக்கருகாவூர்காரர். அது பின்னர் தான் எனக்குத் தெரிந்தது. ஒரு சமயம், 1958 என்று நினைவு. விடுமுறையின் போது,  உடையாளூரிலிருந்து பாகவத மேளா நாடகம் பார்க்க மெலட்டூருக்கு நடந்து சென்றேன். வழியில் திருக்கருகாவூர். அங்கு என் மாமா ஒருவர் வீட்டில், ‘குழந்தை மாமா’ என்று நாங்கள் அவரைக் கூப்பிடுவோம். அங்கு உட்கார்ந்திருந்தபோது, திடீரெனக் கதவைத் திறந்து உள்ளே வந்தவர் யாரென்று பார்த்தால், சீனுவாசன் முன்னே நிற்கிறார்.

நாங்கள் இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் இப்படி திடீரென சந்தித்ததில் திகைப்புற்று, “நீ எங்கய்யா இங்கே?” என்று சந்தோஷத்தில் தேவைக்கு மேல் சத்தமாகச் சொல்லவே, மாமாவும் திகைப்புக்கு ஆளானார். “நீங்க ரண்டு பேரும் தெரிஞ்சவாளா? ஆச்சரியமா இருக்கே” என்று அவரும் சத்தமாகத்தான் சொன்னார். இப்போதென்ன, எப்போதுமே, நம்மை ஆச்சரிய்படுத்துகிறவர் தான் சீனுவாசன்.

புர்லாவிலிருந்து ஊருக்குத் திரும்பிப் போகும்போது எங்களுக்கெல்லாம் சீனுவாசன் சொன்ன கடைசி வார்த்தைகள், உலகத்தில் வேறு யாரும் சொல்லியிருக்க முடியாத வார்த்தைகள்.

‘இந்தா சாமிநாதா, இதைக் கேட்டுக்கோ, வேலு, சுப்பிரமணியன், சிவசங்கரன், தேவசகாயம், எல்லோருக்கும் தான் சொல்றேன். எல்லோரும் சேர்ந்து இருந்தோம். நன்னா பழகினோம். சந்தோஷமா இருந்தது. அதான் வேண்டியது.. ஆனால் ஊருக்குப் போனா எல்லாருக்கும் லெட்டர் போடுவேன். நீங்களும் எனக்கு லெட்டர் போடணும்னு எல்லாம்  வச்சுக்காதீங்க. அதெல்லாம் சரிப்படாது. கட்டுபடியாகாது. இப்படி போற இடத்திலெல்லாம் எத்தனையோ பேரைப் பாப்போம். அவங்களூக்கெல்லாம் லெட்டர் போடறது அவங்ககிட்டேருந்து லெட்டர் எதிர்பாக்கறதுன்னு வச்சிண்டா வேறே காரியம் பாக்க முடியாது. லெட்டர் தான் போட்டுண்டு இருப்போம். அனாவசியம். என்ன புரிஞ்சதா? எல்லோரையும் எல்லாரும் ஞாபகம் வச்சிண்டு என்ன பண்ணப் போறோம்? முடியவும் முடியாது. ஞாபகம் இருக்கறது இருக்கும். இல்லாதது மறந்து போகும். அதை வலுக்கட்டாயமா லெட்டர் போட்டு ஞாபகம் வச்சுக்கறது அசட்டுத்தனம்’ என்று சொல்லிக்கொண்டே போனார். எல்லோரும் சிரித்தோம். அவரும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டார்.

அதை நான் மாமாவுக்குச் சொன்னேன். ‘ஊரை விட்டுப் போகும் போது இப்படிச் சொல்லிட்டுப் போன மனுஷன் இவர்?’ என்றேன்.

‘ஆச்சரியமா இருக்கே?’ என்றார் மாமா.

‘இருந்துட்டுப் போறது போ. யார் போற இடமெல்லாம் லெட்டர் போட்டுண்டு இருக்கா சொல்லு பாப்போம்’ என்றார் சீனுவாசன்.

சீனுவாசன் ஒரு வித்தியாசமான மனிதர். அதற்காக அவர் மனத்தில் சினேகம் போன்றதுக்கெல்லாம் இடமில்லை என்று அர்த்தமில்லை. அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அவரால் மடமையும் அறியாமையும் பந்தா பண்ணுவதைச் சகித்துக்கொள்ள முடியாது.

Hirakud_Dam

அவர் என் வீட்டில்  எங்களோடு தங்க வந்த போது ஒரு கண்டிராக்டரிடம் அக்கௌண்டண்டாக வேலை பார்த்தார். முதலில் Canal Cirleஇல் வாய்க்கால் வெட்டும் குத்தகைக்காரரிடம் அப்போது அவர் இருந்தது, சிப்ளிமா என்ற, சுமார் 25-30 மைல் புர்லாவுக்குத் தள்ளி இருந்த காம்ப்பில். இப்போது அதை விட்டு, Main Dam Cirlcleஇல் மெயின் டாம் கட்டும் இடத்தில் வேலை செய்யும் கண்ட்ராக்டரிடம்.

ஒரு நாள் திடீரென வந்து, ‘இனி இந்த மடையன் கிட்டே வேலை செய்யப் போறதில்லே. வேறே இடம் தேடணும். இல்லே ஊருக்குப் போகணும்’ என்றார்.

என்னவென்று கேட்டோம்.

‘பின் என்னய்யா, இந்த மடையனுக்கு ஹைட்ரோ டைனமிக்ஸும் தெரியலே, ஹைட்ரோ ஸ்டாடிக்ஸூம் தெரியலே. ஏதாவது தெரியணுமே. தப்பு  தப்பா சொல்றான். இவன் எப்படிய்யா மெயின் டாமிலே குத்தகை எடுத்த வேலையைச் செஞ்சு  கிழிக்கப் போறான்? இந்த மடையன் கிட்டே எப்படி வேலை செய்ய முடியும்?’ என்று எரிச்சலுடன் சொன்னார்.

அவரை சமாதானப்படுத்த நாங்கள் எல்லோருமே சேர்ந்து, ‘உம்ம வேலை, அக்கௌண்டண்ட் வேலை. அதுக்கும் அவனுக்கு என்ஜினியரிங்லே என்ன தெரியும் தெரியாதுங்கறதுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க ரொம்பவும் ஓவரா போறீங்க’ என்று சொன்னோம்.

எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது.

‘என்னமோ என்னாலே ஒரு மடையன் கிட்டே வெலை செய்ய முடியாது?’ என்பது தான் அவர் பதிலாக இருந்தது.

அதன் பின் வேறு வேலை தேடிக்கொண்டாரே தவிர, அந்த கண்டிராக்டரிடம் அவர் திரும்பப் போகவில்லை.

(நினைவுகள் தொடரும்………

==============================

படங்களுக்கு நன்றி: http://ta.wikipedia.org/wiki/துளசி, http://www.karma.org.in, http://en.wikipedia.org/wiki/Hirakud_Dam

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “துளசிச் செடிகளில் மணக்கும் மனித உறவுகள்

 1. ஊருக்குப் போனா எல்லாருக்கும் லெட்டர் போடுவேன். நீங்களும் எனக்கு லெட்டர் போடணும்னு எல்லாம் வச்சுக்காதீங்க. அதெல்லாம் சரிப்படாது. கட்டுப்படியாகாது. //இப்படி போற இடத்திலெல்லாம் எத்தனையோ பேரைப் பாப்போம். அவங்களுக்கெல்லாம் லெட்டர் போடறது அவங்ககிட்டேருந்து லெட்டர் எதிர்பாக்கறதுன்னு வச்சிண்டா வேறே காரியம் பாக்க முடியாது. லெட்டர் தான் போட்டுண்டு இருப்போம். அனாவசியம். என்ன புரிஞ்சதா? எல்லோரையும் எல்லாரும் ஞாபகம் வச்சிண்டு என்ன பண்ணப் போறோம்? முடியவும் முடியாது. ஞாபகம் இருக்கறது இருக்கும். இல்லாதது மறந்து போகும். //

  உண்மை. கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது இனிமேல் பிரியவே கூடாது. லெட்டர் மூலம் தொடர்ந்து சந்திக்க வேண்டும் என நினைத்துச் சத்தியமெல்லாம் செய்த ஆட்கள் உண்டு. ஆனால் ஒரு கடிதம் கூட போடாமலேயே அந்த நட்புகள் மறைந்துவிட்டன. ஆனால் கடிதம் போட வேண்டும் என்றெல்லாம் சொல்லாமலேயே இன்றும் தொடரும் நட்புகள் உண்டு. நன்றாய் இருக்கிறது உங்கள் தொடர்.

 2. அப்பப்பா! எத்தனை விஷயம் உங்களுக்கும் எனக்கும் ஒத்துப் போகின்றன. வியப்பா இருக்கு. என்னுடைய காதலிகளில் ஒருத்தி, ஒரிஸ்ஸா. ஹீராகுட் எனக்குப் பிடித்த, மெடிடேஷன் செய்ய உகந்த ஸ்தலம். நீங்கள் பாகவத மேளாவுக்கு மெலட்டூருக்குப் போனால், நான் சாலியமங்கலம் போனேன். திருக்கருகாவூருக்கும் ஒரு நடை. உம் சீனிவாசன் மாதிரி எனக்கு ஒரு சக்ரவர்த்த்தி கிடைத்தான், அறுபது வருடங்களுக்கு, பிறகு. நானும் ஒரு மல்லிகைப் புதர் அழிக்கப்பட்டதைக் கண்டு மன்ம் நொந்திருக்கிறேன்; வள்ளலாரின் ‘‘வாடிய பயிரைக் கண்டு” வாடியிருக்கிறேன்.

  போதாக் குறைக்கு, ‘ஹைட்ரோ டைனமிக்ஸும் தெரியலே, ஹைட்ரோ ஸ்டாடிக்ஸூம் தெரியலே’ என்பதைப் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும், நான் அக்கெளண்டண்ட் கூட இல்லை. ஆடிட்டர். நல்ல தொந்தம் நமுக்குள்ளே. தாங்க்ஸ், சார்.

 3. //சீக்கிரமே வந்துட்டேன். பாத்தேன். ஏன், நாமே செய்துடலாமேன்னு தோணித்து. நானே எல்லாத்தையும் கிளியர் பண்ணீட்டேன் சாமிநாதன். இனிமேல் கொசுத் தொல்லை இராது” என்றார்.//

  மிக யதார்த்தமான தங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது ஐயா. தொடர் மிக நன்றாக இருக்கிறது. நல்ல எண்ணங்களை விதைக்கும் அருமையான தொடர். நன்றி.

 4. எனக்கு அன்றும், சரி இன்றும், மனித சமுதாயத்துக்கு என்றுமே வள்ளலாரின் அந்த வரி எல்லா உயிரிடத்தும் பாசம் கொள்ளும் மகத்தானதும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் போன்ற வரி அது. அதை நிஷ்டூரமாக உதறித் தள்ளும் மனது, மூர்க்கம் நிறைந்த மனதாகத்தான் இருக்க வேண்டும். என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ.//

  உண்மை ஐயா, துளசிச் செடிகள் அழிக்கப்பட்டதை நினைத்து எனக்கும் வருத்தம் ஏற்பட்டது. துளசிச் செடிகள் மண்டி இருக்கையில் வீசும் காற்றில் பரவும் அதன் மணம் உங்கள் எழுத்திலும் உணர முடிந்தது. அதுவும் இப்போ என் கண்கள் முன்னால் நாங்கள் அருமையாக வளர்த்த வாழைமரம், குலை தள்ளி இருக்கும் நேரம் பார்த்துப் பக்கத்து அபார்ட்மெண்டில் கட்டும்போது விழும் சிமெண்டினால் மரமே பட்டுப் போய்விடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது. ஏற்கெனவே மாமரம் பட்டுப் போக ஆரம்பித்துவிட்டது. வாடிய பயிரைக்கண்டு வாடியதால் தானே அதற்கு ஒரு நல்ல முடிவு தேடவேண்டும் எனத் தோன்றியது வள்ளலாருக்கு. சும்மாத் தண்ணீரை விட்டால் பத்தாதா என்பதெல்லாம்……….. :(((

  ஊரில் இல்லை, அதனால் இந்த இழையை தாமதமாய் இன்று தான் பார்த்தேன்.

 5. ippadi niraiya sirukadhaigalai vaasikka nerugriadhu. sirukadhai yendra thalaippin keezh idhai veliyittirundhaal, idhu sirukadhai yendraagippoyirukkum siru niyaayam nigazhndhirukkum. vadiva vaippai sariyaaga payanpaduththikolgira yezhuththan yaarum pathikkum sirukadhaikkumaana idaiveliyai vudaiththu idhai sirukadhai aakki iruppargal. neengal odhungikolgireergal. varuththamaaga vulladhu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *