பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 28

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

E.Annamalai

செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 2:

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் Area Studies வழியாக நடைபெற்ற மொழிசார் ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளை மதிப்பிட வேண்டுகிறேன்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

காலனிய காலத்தில் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காலனிகளின் சமூகம், பழமைக் காலம், கலாச்சாரம், மொழி, இலக்கியம் முதலியவை பற்றிய அறிவை ஆட்சிக்குத் துணைசெய்யும் கருவியாக வளர்த்துக்கொள்ள வந்த துறைகளில் ஒன்று கீழைத் தேயவியல் (Oriental Studies).

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பழைய காலனி ஆதிக்கம் முடிந்துகொண்டிருந்தது. புதிய காலனி ஆதிக்கம், துவக்கத்தில் இருந்தது. இதில் முன்னணியில் இருந்த நாடு அமெரிக்கா. போரின்போது போர் வீரர்களுக்குப் போரிடச் செல்லும் நாடுகளின் மொழிகளில் பயிற்சி கொடுக்கத் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போர் முடிந்த பிறகு இந்த ஏற்பாடுகள் சில வகைகளில் நிலைப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சில பல்கலைக்கழங்களில் துவங்கப்பட்ட, மொழியை மையமாகக் கொண்ட மண்டலவியல் (Area Studies) துறைகள்.

உலகப் போரின் பின் தொடர்ந்த பனிப்போரின் பின்னணியில், நாடுகளின் எல்லைகள் மாறிய புதிய பூகோளத்தின் அடிப்படையில் அமைந்த உலகப் பகுதிகளைப் புரிந்துகொள்ள, அவற்றில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள இந்தத் துறைகள் தேவைப்பட்டன. மேலே சொன்ன பாடங்களோடு அரசியல், தற்கால வரலாறு முதலியன சேர்க்கப்பட்டன. இந்தத் துறைகளில் ஒன்று தென்னாசியவியல் (South Asian Studies) துறை. இந்தியத் துணைக் கண்டம் என்னும் நிலப் பகுதி, மண்டலப் படிப்பில் தென்னாசியாவாக விரிந்தது.

மண்டலவியல் படிப்பு, புதிய வல்லரசாக உருவாகிய அமெரிக்காவில் ஆழமாக வேரூன்றியது. 1957இல் சோவியத் யூனியன் வெற்றிகரமாக ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவிய அதிர்ச்சியில் அமெரிக்கா கல்வி வளர்ச்சிக்காகப் பணத்தை வாரி வழங்கியது. அந்தப் பணத்தில் மண்டலப் படிப்பிற்கும் அதில் மொழிப் படிப்பிற்கும் பங்கு கிடைத்தது.

கென்னடியின் அமைதிப் படை (Peace Corps) தொண்டர்கள் திட்டத்தின்கீழ் இந்தியா சென்ற மாணவர்கள் பலர் திரும்பி வந்த பின், தென்னாசியத் துறையில் சேர்ந்தார்கள். இந்தக் காரணங்களால் தென்னாசியப் படிப்பு, அமெரிக்காவில் வளர்ந்தது.

தென்னாசியத் துறைகளில் சமஸ்கிருதம், இந்தி நிச்சயமாகக் கற்றுக் கொடுக்கப்படும். அதற்கு மேல் உருது, தமிழ் சேர்க்கப்படும். அதற்கடுத்து வங்காளம். பிற மொழிகள் மாணவர்களின் தேவையைப் பொறுத்து, மானியத்தைப் பொறுத்துக் கற்றுக் கொடுக்கப்படும். தற்கால மொழிகளைக் கற்றுக் கொடுக்க இந்தியாவிலிருந்து இளநிலை விரிவுரையாளர்கள் வந்தார்கள். அவர்களில் பலர் முனைவர் பட்டத்திற்கு மொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்.

இவர்கள், மொழி கற்றுக் கொடுப்பதற்குப் பாடங்கள், தொகுப்புகள் (Readers) தயாரித்தார்கள். தமிழைத் தமிழ் தெரியாதவர்களுக்கு இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொடுக்கும் முறை தென்னாசியத் துறைகளில் வளர்ந்தது. பேச்சுத் தமிழ் ஒரு கற்பிக்கும் பாடமாக இங்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

மொழிசார் ஆராய்ச்சியில் இலக்கிய ஆராய்ச்சியும் அடங்கும். தமிழ் இலக்கிய ஆராய்ச்சி, தமிழ்க் கலாச்சார ஆராய்ச்சியின் பகுதியாக, இந்திய இலக்கியங்களின் ஆராய்ச்சியின் பகுதியாக வளர்ந்தது. இந்த ஆராய்ச்சி உலகளாவிய பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு, பிற மொழி அறிஞர்களை எட்டுகிறது. தமிழ் இலக்கிய நூல்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் தெரியாதவர்களுக்கு அறிமுகமாகின்றன.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களால் தென்னாசியப் படிப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. பேராசிரியர் மட்டத்தில் நியமனங்கள் குறைந்து வருகின்றன. தமிழ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தாங்கள் பணியில் சேரும் பிற கல்வித் துறைகளில் இந்த ஆராய்ச்சியைத் தொடரும் நிலை வரலாம். இந்த மாறுதல்களால் தமிழ் மொழிப் பயிற்சியும் ஆராய்ச்சியும் மாற்றம் பெறலாம்.

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

Leave a Reply

Your email address will not be published.