முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiசுமார் அறுநூறு வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் ஒரு கற்பனை. ஒரு இந்து மத ஆச்சாரியரைப் பற்றியது.

இந்த இந்து மதத் தலைவர் பிறப்பதற்கு முன் அவருடைய பெற்றோர்கள் கனவில் இறைவன் தோன்றி, தான் அவர்களுடைய மகனாகப் பிறக்கப் போவதாக அறிவிக்கிறார். இறைவன் வாக்களித்தது போலவே இவர்களுக்கு மகனாக அவதரிக்கிறார். இறைவனின் அவதாரமல்லவா? சிறு வயதிலேயே அவன் மிகவும் புத்திசாலியாக விளங்குகிறான். குறிப்பாக, இறைவனைத் துதிக்கும் பாடல்களில் தேர்ச்சி பெற்றவனாக இருக்கிறான்.  இவனது இறை பக்தியைக் கண்டு இறைவனுக்குத் தொண்டு செய்யும் பலர், இவனைத் தங்களின் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.  கடைசியில் அந்த அதிர்ஷ்டம் ஒருவருக்குக் கிடைக்கிறது. இவனுக்கு மேலும் இறைவன்மேல் பக்தி உண்டாகும்படி பல வித்தைகளைக் கற்பிக்கிறார். இவன் பெரியவனானதும் இறைத் தொண்டையே தன் வாழ்க்கையின் முதல் இலக்காகக் கொள்கிறான்.

இனி இவரை அவர், இவர் என்று மரியாதை கொடுத்துப் பேச வேண்டும். இவருக்கு நிறைய சீடர்கள் சேருகிறார்கள். இவர் பேசுவது, செய்வது எல்லாம் இறைவனின் செயல்கள் என்று பாமர மக்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். இதற்கிடையே இவர் இறைவன் மீது நிறையப் பக்திப் பாடல்கள் இயற்றுகிறார். இவருடைய பக்திப் பாடல்களின் எண்ணிக்கை கூடக் கூட இவர் இறைவனின் அவதாரம் என்ற எண்ணம் மக்களிடையே இன்னும் வேகமாகப் பரவுகிறது.

இப்போது ஆங்கிலத்தில் திறமை பெற்றிருந்தால் பெரிய மேதை என்று மக்கள் எண்ணுவது போல், அப்போது வடமொழியான சமஸ்கிருதத்தில் பேசினால், எழுதினால் அவரை இறைவனின் அவதாரம் என்று எளிதில் நம்பிவிடுவார்கள். இவர் தமிழில் இருந்த இறைவனின் பாடல்களை அடியொற்றிச் சமஸ்கிருதத்தில் பாடல் எழுதினார்; வியாக்கியானம் செய்தார். என்னே இவருடைய மேதைத்தனம்; என்னே இவருடைய இறை பக்தி; என்னே இறையருள் என்று பாமர மக்கள் கொண்டாடத் தொடங்கினர். பாமர மக்களிடம் இவர் புகழ் பெருகப் பெருக இவரைச் சார்ந்திருந்தவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொண்டனர். நாட்டின் அரசனுக்கும் இவர் மேல் பக்தியும் மரியாதையும் ஏற்பட்டது.

இவர் புகழ் பரவப் பரவ, இவரை நேரில் பார்த்து இவரிடம் ஆசி பெறவும் இவர் இறைவனைப் பற்றிப் புகழுவதைக் கேட்கவும் தூர இடங்களிலிருந்தும் கூட்டம் கூடியது. இவரைப் பார்த்தாலே, இவர் பேச்சைக் கேட்டாலே தங்களுக்குத் தங்கள் பாவங்களிலிருந்து விமோசனம் கிடைத்துவிட்டதாகப் பாமர மக்கள் நினைக்கத் தொடங்கினர். தன்னிடம் இத்தனை பேர்கள் வருகிறார்கள் என்றால் தன்னிடம் ஏதோ ஒரு இறைத்தன்மை இருக்க வேண்டும் என்று இவரும் நம்பத் தொடங்கினார். மக்கள் இவரிடம் வந்து இவரைத் தொழுவதை இவரும் ரசிக்கத் தொடங்கினார்.

கடவுளை எந்த உருவத்தில் வழிபட்டால் நேரே சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று இவர் உபதேசித்ததை மக்களும் நம்பி, சொர்க்கத்திற்குப் போவதற்கு இவர் சொல்லிக் கொடுத்த வழி மிக எளியது என்று கருதி, அதைத் தீவிரமாகப் பின்பற்றவும் செய்தார்கள். ஆனால் உயர்ந்த குலப் பக்தர்களுக்கு மிகவும் பிரியமான இவரைத் தாழ்ந்த குலத்தில் பிறந்த யாரும் அணுக முடியாது. இவர் சொற்பொழிவுகள் நடக்கும் கோவில்களுக்குப் பக்கத்தில் கூட இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எல்லா மனிதர்களிடமும் இறைவனின் அம்சம் இருக்கிறது என்று கூறும் இந்து மதத் தலைவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் சூத்திரர்கள் என்றும் சிலரை ஒதுக்கி வைத்தார்கள். அவர்கள் சொர்க்கத்திற்குப் போக அருகதை இல்லாதவர்கள் என்று இவர்கள் நினைத்துவிட்டார்கள் போலும்.

என்னதான் கடவுள் அவதாரம் என்றாலும் இவர் கடவுள் அல்லவே. இவரும் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். இவரைக் காப்பாற்ற பிரபல மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கடைசியில் இவரும் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்தார். இவரைக் கடவுளாக நினைத்தவர்கள் அழுது புலம்பினார்கள். ஆண்டாண்டு அழுது புலம்பினாலும் மாண்டார் வருவாரா? இவர் என்ன இயேசு கிறிஸ்துவா, இறந்த பின் உயிர்த்தெழுவதற்கு?

இதே சமயத்தில் இதே நாட்டில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சமூகம் அளித்த இழிந்த வேலையைச் செய்து வந்தார். இவருக்குப் படிப்பு வாசனை எதுவும் கிடையாது. இவரை யார் படிக்கவிட்டார்கள்? அல்லது யார் இவருக்குக் கற்க வேண்டியது உலகளவு இருக்கிறது என்று சொல்லிப் பள்ளிக்கு அனுப்பினார்கள்? அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருந்தார். இவரிடம் வேலை வாங்கியவர்களைத் தவிர இவரை யாருக்கும் தெரியாது. ஆனால் இவர் தன் வேலையைச் செய்யாமல் கடமை தவறியிருந்தால் ஊரின் நிலை சீர்கெட்டுப் போயிருக்கும்.  எவ்வளவு இழிந்த வேலையை எவ்வளவு குறைந்த ஊதியத்திற்குச் செய்தார் என்றெல்லாம் யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவரும் ஒரு நாள் உடல்நலம் குறைந்து இறந்து போனார். இவருடைய மறைவிற்குத் துக்கப்பட இவர் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலே குறிப்பிட்ட மகானுக்கு நடந்தது போலன்றி, இவருடைய உடல் எந்த வித ஆரவாரமுமின்றித் தனிச் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இப்போது இந்த இருவரும் ஒரே நிலையில் இருக்கிறார்கள். உலகில் வாழ்ந்தபோது இருந்த ஏற்றத் தாழ்வு இருவரிடையேயும் இல்லை. இருவரும் நேரே இறைவனிடம் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டியதுதான்; அல்லது மறுபடி பிறவி எடுக்க வேண்டும்.  இதில் யாருக்கு இறைவன் என்ன கொடுத்திருப்பான்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *