அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 2

2

கீதா சாம்பசிவம்

geetha sambasivamஅம்பத்தூரில் இங்கே எங்க வீட்டுக்கு இரு பக்கத்திலும் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கும் எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவருக்கும் (காம்பவுண்ட்) இரண்டடி கூடக் கிடையாது. அதிலும் இப்போது புதிதாய்க் கட்டுபவர்கள் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியானது, நேரே எங்கள் வீட்டுக் காம்பவுண்ட் சுவருக்கு மேலே வருகிறது. அவங்க போடும் குப்பை எல்லாம் நேரே எங்க வீட்டுக்குள் வந்து விழும். அதோடு மழை நீர், கழிவு நீர், வீடு கழுவும் நீர் எல்லாமே எங்க வீட்டுக்குள் வந்து விழும். அந்தப் பக்கம் நடமாடுவது என்றால் நாங்க யோசிக்க வேண்டி இருக்கும்.

யாரையாவது குடித்தனம் வைத்தால் அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும். தினம் தினம் சொல்லிட்டு இருக்க முடியுமா? உங்க தண்ணீர், குப்பை எல்லாம் எங்க பக்கம் வருது என்று? சொன்னாலும் கோவிச்சுப்பாங்க. கீழே இறங்கி வந்து, குப்பையைக் கொடுப்பவர்கள் ரொம்பக் குறைச்சல். அதிலும் நம்ம ஊரிலே பக்கத்து வீட்டு வாசலில் குப்பையைக் கொட்டுபவர்களைத்தான் இன்று வரை பார்த்து வருகிறேன்.  அதோடு இந்தக் கட்டடம் கட்டும்போதும், பொறுப்பு எடுத்துக்கொண்டு கட்டும் கட்டடக் காண்ட்ராக்டர்கள், சாமான்களை எல்லாம் அடுத்த வீட்டு வாசலில் அவங்களை ஒரு மரியாதைக்குக் கூடக் கேட்காமல் போட்டு விடுகின்றனர்.

மணல் ஒரு லாரி திடீரென நம் வீட்டு வாசலில் ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் ஒரு லாரி ஜல்லிக் கற்களும் வந்துடும். போதாததுக்கு சிமெண்ட் கலவை போடும் மெஷினை நம்ம வீட்டுக்கு எதிரே வாசலில் வைப்பாங்க. இங்கே தான் எங்களுக்குக் கலவை போட செளகரியம். மணலும் ஜல்லியும் இங்கே தானே இருக்கு என்பது அவங்க கட்சி. அதோட தண்ணீர் நிரப்பும் பெரிய டிரம்மையும் சரியாக நம் வீட்டுக் கதவுக்கு முன்னே வைச்சு தண்ணீரையும் நிரப்பிடுவாங்க. வீட்டிலிருந்து வெளியே வர முடியாது. அவங்க இதை எல்லாம் செய்யும் முன்னர் வீட்டுக்கு வெளியே சென்றிருந்தோமானால் வீட்டுக்கு உள்ளே வர முடியாது. அவங்களைக் கெஞ்சணும்.

வேலை செய்யும் ஆட்களின் அட்டூழியம் அதுக்கும் மேலே. சாப்பாடு இங்கே தான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. சரி, போகட்டும். நிழலுக்கு வராங்கன்னு விட்டால், சாப்பிட்ட மிச்சம் எல்லாம் வீட்டு வாசலிலேயே கிடக்கும். டீ குடிச்சுட்டு டிஸ்போஸபில் கப்புகளைத் தூக்கி எறிய மாட்டாங்க. அல்லது குப்பைகளோடு சேர்த்தும் வைக்க மாட்டாங்க. அதெல்லாமும் வீட்டு வாசலில் கோலம் போட்டிருக்கும் இடத்தில் உருண்டுகொண்டு இருக்கும். இதை எல்லாம் எடுத்துச் சுத்தம் செய்யக் கூடாதா எனக் கேட்டால் நாங்க இந்தப் பக்கம் வரவே இல்லை, நாங்க போடவே இல்லைனு சத்தியம் செய்துடுவாங்க. பக்கத்து பில்டிங் கட்டறவங்க போட்டிருப்பாங்கனு சொல்லிடுவாங்க.

பக்கத்து பில்டிங் கட்டறவங்களாலேயும் தொந்தரவு தான் என்றாலும் இங்கே எதிரே இருக்கிறவங்களை விடக் கொஞ்சம் கம்மினு சொல்லிக்கலாம்.  டீ கப்பெல்லாம் போட்டதில்லை. சாப்பாடு இங்கே வந்து சாப்பிடறதில்லை. அப்படிக் குப்பையாய் இருந்தாலும் பெருக்கிக் கொடுத்தாங்க. இப்போ இவங்க எதிரே கட்ட வந்ததுக்கு அப்புறம் இவங்க வராங்கனு அந்தக் கட்டடத்து ஆட்கள் இங்கே வரதில்லை. எதிரே கட்டறவங்க தான் வராங்க. கேட்டால் ஒருத்தரும் உண்மையை ஒத்துக்கறதில்லை. எங்க வீட்டில் வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் நான் எடுக்க மாட்டேனு சொல்லிடறதாலே நாங்க தான் தினம் சுத்தம் செய்யறோம். என் கண்ணிலே பட்டால் நானும், அவர் கண்ணிலே பட்டால் அவரும் சுத்தம் செய்யறார். அப்போவும் அவங்க பார்த்துட்டுத் தங்களுக்குள்ளே சிரிச்சுப்பாங்க. ஆனால் வந்து செய்து தரமாட்டாங்க.

apartment construction

இவ்வளவு விபரமாக விளக்குவதன் காரணமே, இது போல் வெளிநாடுகளில் மேல் நாடுகளில் செய்ய முடியாது என்பதைச் சொல்லவே.  அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போருக்கு எனத் தனிச் சட்டமும், தனி வீடுகளில் இருப்போருக்கு எனத் தனிச் சட்டமும் இருக்கின்றது.  பிறருக்குத் தொந்திரவு தரக் கூடாது என்பது அங்கே மிக முக்கியமான ஒன்று. இங்கே எங்க பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ, அல்லது கச்சேரிகளையோ அங்கே இருப்பவங்க கேட்டால், தெருவுக்கே வேறு தனி நிகழ்ச்சி தேவை இல்லை.  அவ்வளவு சத்தமாக வைப்பார்கள். நாம் சொன்னாலும் தப்பாய்ப் போயிடும். சொல்லவும் முடியாது.

அதோடு கைபேசியில் அவங்க பேசறது இங்கே கேட்கும். ஒரு சிலர் கைபேசியில் பாட்டும் கேட்கும் வசதி இருப்பதால் கழுத்தில் அதைத் தொங்க விட்டுக்கொண்டு பாட்டும் கேட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். அப்போவும் சத்தம் தாங்காது. மேல் நாடுகளில் என்றால் காரின் ஹாரன் கூட அடிக்க முடியாது. அப்படி யாரானும் ஹாரனை அடித்தால் அவங்களைக் கேவலமாய்ப் பார்ப்பார்கள். சாலைகளில் அத்தனை வண்டிகள் போகும்.  ஆனால் ஒரு காரின், அல்லது லாரிகளின் ஹாரன் ஒலியே கேட்காது.

அதோடு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மரங்கள் கட்டாயமாய் வளர்க்கப்பட வேண்டும் என்பது அங்கே மிக முக்கியமான ஒன்று. இங்கே ஒரு கிரவுண்டில் ஒரு குடும்பம் குறைந்த பட்சமாக நான்கு அல்லது ஐந்து, ஆறு பேர் இருந்த காலி மனையில் கிட்டத்தட்ட எட்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிக் குறைந்தது ஒரு வீட்டுக்கு நான்கு என்ற கணக்கில் முப்பது பேருக்கும் மேலாக வருகின்றனர். அப்போ சுற்றி இடம் எங்கே விட முடியும். இரு பக்கமும் இருக்கும் அடுத்த வீடுகளில் இடம் கொடுத்தால் அதையும் சேர்த்துக் கட்டுவாங்க போல. அப்படி கொஞ்சம் கூட இடம் விடாமல் கட்டிடறாங்க. இதை எப்படி அரசு அநுமதிக்கிறது என்பது புரியவில்லை.

இதற்கென விதிமுறைகளை அரசு எப்படி வகுத்திருக்கிறது என்பதைப் புரிய வைக்கவேண்டும். முக்கியமாய் அந்த அந்த நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சித் துறைகள் இவற்றை அநுமதிக்கும் முன்னர் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறாத நகராட்சிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பை முழுதும் தடை செய்யாவிட்டாலும் ஒரு கிரவுண்டு காலி மனையில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டக் கூடாது எனத் தடை செய்யலாம். தனி வீடாக இரண்டு கட்ட மட்டும் அநுமதிக்கலாம். மூன்று கிரவுண்டு காலி மனையில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிக்கவேண்டும்.

அதுவும் சுற்றிலும் மரங்கள், செடிகள் வளர்க்க இடம் விட்டுப் பின் பக்கம் இரண்டு தென்னை மரமாவது வைத்துவிட்டு, முன்பக்கம் நிழல் தரும் வேப்ப மரம், அசோக மரம், வேறு ஏதேனும் மரங்களை வைக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு, பாதிப்பு என ஒரு பக்கம் அலறிக்கொண்டே இன்னொரு பக்கம் இருக்கும் வீடுகளில் உள்ள மரங்களை எல்லாம் உயிரோடு வெட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறோம். இது குறித்து………

(தொல்லைகள் தொடரும்…..

=====================================

படத்துக்கு நன்றி: http://www.soviethistory.org

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 2

  1. அசோகமரம் வருடங்கள் பிடிக்கும் வளர. யூகலிப்டஸ் நீர் உறிஞ்சும். வேண்டாம். இந்தக் கட்டுரையின் மையச் செய்தியை பார்ப்போம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு நற்பெயர். இங்கு தான், நம் கேவலங்கள்.

    ‘…இரு பக்கத்திலும் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கும் எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவருக்கும் (காம்பவுண்ட்) இரண்டடி கூடக் கிடையாது…’

    இங்கிலாந்தில் ஒரு நிகழ்வு, ஆலோசனை மன்றத்தில். இங்கு இரண்டு வீடுகளுக்கு ஒரே காம்பவண்ட் சுவர் அதிகம். ஏனெனில் சட்டப்படி, பழைய வீடுகளை மாற்றியமைக்க முடியாது, மரபு காக்க. ஆனால், யார் எதற்குப் பொறுப்பு என்பது கிரய பத்திரத்தில் இருக்கும். புகார்: பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கும் சாயம் எனக்குப் பிடிக்கவில்லை. சட்டரீதியான கடிதம் எழுதிக் கொடுத்தேன். பதில்: அவரிடம் கொடுக்க முடியாது. அவர் படிக்கமாட்டார். ஏன்? அவருக்கு வயது 100. சொன்னாலும் கேட்கமாட்டார். தனக்காகவும் தெரியாது. சரி என்று நாங்களே போய் அந்தப் பெரியவரைக் கண்டு சமாதான வழியில் பேசினோம். அவருடைய பதில்: சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கச் சொல்லுங்கள். அதற்கான பதில் இதோ! சாங்கோபாங்கமா இருந்தது. அந்த அளவுக்கு, அண்டை வீட்டு உரிமைகள் காப்பாற்றப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *