முன்னேற்றம்
தேவா
முன்னோர்கள் கண்ட கனவு
பின்னோர்கள் வந்தும் கனவாகவே நின்றது
முன்னேறும் நாடு என்று மூன்று தலைமுறை முடிந்துவிட்டது ,
எங்கள் தலை முடிகள் தான் உதிர்ந்துபோனது
வசதிகள் பல வந்துவிட்டதாம்
மாற்றங்கள் பல நடந்துவிட்டதாம் – அட
உலகம் இன்று சுண்டு விரலில் வந்து விட்டதாம்
கணினியில் உலகம் காட்டப்படுகிறதாம்
கணினி பசிக்கு உணவளிக்குமா ?
வறுமை கோட்டை ”டிலிட்”செய்யுமா ??
பாவம் அது என்ன செய்யும்
மின்சாரம் இல்லாமல் அது மூச்சை விடுகிறது
மின்சாரம் தாக்கியவன் மட்டுமே மடிவான்
மின்சாரம் இல்லாமல் பல சம்சாரங்கள் மடிகிறது
இதுவும் முன்னேற்றம்தான்.!!
விவசாயி இன்னும் அம்மணமாகத்தான் திரிகிறான்
எலிக்கறி கூட கிடைப்பது அரிதானது
எலிகள் எல்லாம் இன்று பட்டணத்து பிள்ளைக் கறிக்கு பழகிப்போனது
விலைமதிக்க முடியாத உயிர்களை எல்லாம்
விலைவாசி முடித்து விட்டது
தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கும் நாட்டில்
முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பது ???????
படத்துக்கு நன்றி: http://blog.sysomos.com/2010/05/19/twittera-as-a-resource-tool/question-mark/

தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கும் நாட்டில்
முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பது ???????
“கேள்விக்குறியே” என்பதை “???????” என குறிப்பில் விட்டிருப்பது அருமை தேவா.
இதற்கே ஆயிரம் பொற்காசுகள் தரலாமே (வழக்கம்போல் வரிகள் பிடித்தம் செய்த பின்பே அளிக்கப்படும்)
…தேமொழி
நல்ல வரிகள். “எலிக்கறி கூட கிடைப்பது அரிதானது
எலிகள் எல்லாம் இன்று பட்டணத்து பிள்ளைக் கறிக்கு பழகிப்போனது” வேதனை பட வேண்டிய வரிகள். உன் ஆதங்கம் புரிகிறது, அது அடங்கும் நேரம் தான் தெரியவில்லை.
விசாகை மனோகரன்