நான் அறிந்த சிலம்பு – 51 (31.12.12)
புகார்க்காண்டம் – 07. கானல் வரி
(4)
ஆற்றினில் புதுப்புனல் கண்ட
உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசை,
நீர் மதகுதனில்
நிறைந்து வடிகின்ற ஓசை,
கரைகளை வரப்புகளை
உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசை,
புதுப்புனல் விழாவில்
களித்து மகிழும் மாந்தர்
எழுப்பி நிற்கும் பல்வித ஓசை,
இவை அனைத்தும் கரையின்
இருபக்கமும் ஆர்ப்பரிக்க
நின் கடமையாகிய
நல்லொழுக்கம் தவறாது
நடந்து செல்லும் காவிரியே,
நீ வாழ்க!
சோழனின் வளத்தை
அதிகரிக்க எண்ணியே
நீ அங்ஙனம் நடந்து செல்கிறாய்!
உன் வளத்தில் கொழித்திருக்கும்
போர் மறவர் வாயை மூடாமல்
ஆரவாரித்துக்கொண்டே இருக்கின்றர்.
அத்தகு வளத்துக்குக் காரணமான
காவிரியே நீ வாழ்க!
(காப்பியத்தின் திருப்புமுனை – மாதவி தவறாகப் புரிந்து கொள்ளுதல்
தான் உடன் இருப்பதால், பரத்தையருடன் கூடி மகிழ முடியாத கோவலன் வருந்துகிறான்;
மாதவி தன்னிடம் இருக்கும் வளமெல்லாம் தான் அருளிய வளம்தான் என்று பாடுகிறான்;
இவ்வாறாக மாதவியின் சந்தேகம் அதிகரித்தது.
இந்த இப்பகுதிதான் காப்பியத்தின் திருப்புமுனையாக அமைகிறது.)
(5)
சார்த்து வரி- முகச் சார்த்து
புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல்
தோழி தலைமகன் முன் நின்று வரைவு கடாதல்
கருங்குவளை மலர்போலும்
நீண்ட கண்களை உடையவள்
எம் தலைவி;
அவளிடம்
கடலின் பெருந்தெய்வமான
வருணனைச் சுட்டிக் காட்டிச்
சாட்சியாக வைத்திருந்து
நின்னைப் பிரிய மாட்டேன்;
விரைவில் மணம்புரிந்து கொள்வேன்
என அன்று கூறிய எம் தலைவர்
அச்ச்சுளுரைகள்
நிறைவேற்றாமல் பொய்த்துவிட்டார்.
ஐயனே!
அறனில்லாதவர் அவர் என்று
எங்ஙனம் நாங்கள் அறிவோம்!
நிலத்தில் கிடக்கின்ற வெண்சங்குகளையும்
வெண்முத்துகளையும் கண்டு
அவைதாம் தம்மை மலர்விக்க வந்த
வெண்மதியும் விண்மீன்களும் என்றெண்ணி
மொட்டவிழும் ஆம்பல்கள்
பகலை இரவென்று
தவறாக நினைக்கும்
தன்மை வாய்ந்த
புகார் அன்றோ எம் நகரம்!
(ஆம்பல் பொழுது கண்டு ஏமாந்தது போல, தலைவனின் இயல்பு குறித்துத் தவறாக
நாங்கள் புரிந்து கொண்டோம்…என்பது கருத்து)
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html
படத்துக்கு நன்றி:
http://www.eegarai.net/t77585-topic