திரும்பிப் பார்க்கிறோம்

பவள சங்கரி

தலையங்கம்

இந்தியாவின் 64வது  குடியரசு தினம் கொண்டாடும் இந்த வேளையில் நம் நாட்டைச் சுற்றி வளைத்திருக்கும் சிக்கல்களை எப்படி, எப்போது விடுவித்து நம் பாரத மாதாவை மகிழ்ச்சியுறச் செய்யப்போகிறோம்?

பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிப்பு, மின்வெட்டு பிரச்சனையால் தொழில்கள் பாதிப்பு, அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் சிறுதொழில் பாதிப்பு, ஊட்டச் சத்து குறைபாட்டினால் இரண்டில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ள அபாயம், கடுமையான விலைவாசி ஏற்றம், இவையனைத்திற்கும் மேலாக பெண்களின் மீது பாலியல் வன்கொடுமை. வேலியே பயிரை மேய்வது போல பள்ளி மாணவிகளுக்கு ஆசியர்களால் தொல்லை, அனைத்திற்கும் மேலாக பெண்கள் வெளியே தலையே காட்ட முடியாதவாறு பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என அமைதியற்ற சூழலே நிலவுகிறது.

டாஸ்மாக் உபயத்தினால் இன்று தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக, ‘குளோபல் சர்வே’ என்ற ஆய்வு நிறுவனம் கண்டறிந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுவிற்கு அடிமையான இவர்களாலேயே பாலியல் வன்கொடுமை, போக்குவரத்து விபத்து, கொலை, கொள்ளை போன்ற பலவிதமான பிரச்சனைகளின் அதிகரிப்பு.  இதைவிட மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக,  தற்போது தமிழ்நாட்டில் சராசரியாக 13 வயதிலேயே  மது குடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான்.  இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரப்பிரதேசத்தில் அதிகமானோர் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது அந்த ஆய்வறிக்கை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6900 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் சூழலில் சிறுவர்களும் அதற்கு அடிமையாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகிறது.

இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் கொடுமை வழக்குகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து, அதற்கான 13 உத்தரவுகளையும் பிறப்பித்தது பாராட்டிற்குரியது.

நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உள்ள சட்டங்களைக் கடுமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள், வரவேற்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 60,000 பரிந்துரைகள், நம் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ளதும் அதனை அரசு கவனத்தில் கொள்வதும், பாலியல் வழக்குகளை பெண் வழக்கறிஞர்களும், பெண் நீதிபதிகளுமே விசாரணை செய்ய வேண்டும் என்ற ஆணை பிறப்பித்திருப்பதும் வரவேற்பிற்குரியது. மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் பயனுள்ள வகையில் அமையலாம். பாலியல் வன்முறைகள் புரியும் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதும் ஆறுதலான விசயம். மருததுவச் செலவையும் அரசே ஏற்பதும் பேருதவியாக இருக்கும். வணிக வளாகம், கல்லூரி, போன்ற பொது இடங்களில் இரகசியக் கண்காணிப்பு புகைப்படக்கருவி பொருத்துவதால் பிரச்சனை முழுவதுமாக தீரப்போவதில்லை என்றாலும் அத்து மீறல்களைத் தடுக்க ஓரளவிற்குப் பயனுள்ளதாகலாம்.

பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்தும் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கும், வாச்சாத்தி சம்பவம் மறந்திருக்க முடியாது.  பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்களில் வெகு சிலரே அதுபற்றிப் பேச முன்வருகிறார்கள். மற்றவர்கள் அதைப்பற்றி தூண்டித்துருவிக் கேட்டு மேலும் அசிங்கப்படுத்தும் சில காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து, அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரும் அதை வெளியில் சொல்லத் தயங்கி மறைக்கவே முற்படுவதும், குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், இது போன்று ஒரு சம்பவத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண், புகார் கொடுக்கப்போன இடத்தில் காவல்துறையினர் மேலும் கொடுத்த தொந்தரவுகளால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டப் பெண், சம்பவம் நடந்தவுடன், தன் உடலில் தங்கிய தடயங்கள் அழியும் முன்பாக, ஒரு மாவட்ட ஆட்சியரோ அல்லது மாவட்ட நீதிபதி போன்ற முக்கிய பதவி வகிப்பவர் முன்பாகவோ புகார் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை, தடய அறிவியல் ஆய்வு, போன்றவற்றை உடனடியாக செயல்படச் செய்வதன் மூலம்  சமபந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழிவ்குக்கலாம். ஆனால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத சூழலில் அப்பெண்களுக்கு உதவிட மகளிர் அமைப்புகளும், சேவை மையங்களும், தொண்டு நிறுவனங்களும் தயங்காமல் உதவி செய்ய வேண்டும். 18 வயதிற்குக் குறைந்தவர்களும் கூட இது போன்று குற்றங்களை இழைப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு, அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் தில்லியில் பிசியோதெரபி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தின் கொந்தளிப்பு அடங்காத நிலையிலும் மேலும் பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வல்லுறவில் ஈடுபடுவோர் மட்டுமே அல்லாமல், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களிடம் தகாத் முறையில் நடந்து கொள்ளும் உயரதிகாரிகள், உடன் பணிபுரியும் சகாக்கள், ஆகியவர்களும் கண்காணிக்கப்படவேண்டும். பேச்சிலோ, செயலிலோ பெண்களை  பாலியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்பவர்கள் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். பாதுகாப்பான, போக்குவரத்து வசதி, இரவு நேரத்தில் சாலைகளில் உருப்படியாக எரியும் விளக்குகள்,  இரவு நேர போலீஸ் ரோந்துப்பணி. இவையெல்லாம் தடங்கலில்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளுக்குள்ளேயே குமுறி, குமைந்துப் போகும் பெண்களுக்கு தங்கள் உரிமையும், அதனைப் பெறும் துணிச்சலும் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும்.

இப்பொழுதெல்லாம் கணினித் துறையில் பணிபுரியும் பெண்கள் அதிகமாக இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. அந்த நேரங்களில்,அலுவலகத்தினுள்ளும், செல்லும் வழியிலும் பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் தலையாய கடமையாகும்.

ஊடகங்களும் விளம்பரங்கள் செய்வதில் ஒரு வரையறை நிர்ணயிக்க வேண்டும். ஆண்கள் பயன்படுத்தும் சில வாசனை திரவியங்களுக்கான விளம்பரங்கள் படு மோசமாக இளைஞர்களின் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பது எப்படி தணிக்கைத் துறையின் கண்களில் படாமல் போகிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இது போன்ற விளம்பர நிறுவனத்தாருக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இராமல் சமுதாய நல்லுணர்வும் கொள்ள வேண்டும். கொலை,கொள்ளைகளை தூண்டக்கூடிய வகையில் பல விளம்பரங்கள் அமைந்துள்ளதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு உடனடியான தீர்வு காண வேண்டியது அவசியம்.

அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். உடை உடுத்துவதில் ஆகட்டும், சக மாணவர்களிடமோ, உடன் பணியாற்றுபவர்களிடமோ ஒரு எல்லைக்குள் பழகும் வழமை வேண்டும். ஒரு பெண் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் மற்றனைத்தையும்விட மிக உறுதியானது என்பதில் ஐயமில்லை. அதற்கான தற்காப்புக கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் ஏதோவொரு தற்காப்புக்கலை கட்டாயமாக்கப்பட வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளின் மீது முழுமையான கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். தங்கள் குழந்தைகளின் மனமாற்றங்களோ, செயல் மாற்றங்களோ குறித்த ஆழ்ந்த கவனம் கொண்டிருத்தல் இந்த காலகட்டத்தில் மிக அவசியமாகிறது. நம் கடமைகளை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட்டாலே நம் நாடு முழுமையான குடியரசு நாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வாழ்க பாரதம்!

  1. ஆசிரியர் பவள சங்கரி அவர்கள் எழுதியுள்ள வரிகள் ஒவ்வொன்றும் சத்தியத்தில் தோய்த்து எடுக்கப்பட்டவை. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருவது குறித்துப் பெருமை கொள்வதா அல்லது நாகரிகத்திலும், பண்பாட்டிலும் இன்றைய இளைய தலைமுறை மிகவும் சீர்கெட்டு வருவது குறித்து வெட்கித் தலைகுனிவதா என்றே புரியவில்லை.
    குற்றம் புரிவோர்க்குக் கடுமையான தண்டனையைக் காலந் தாழ்த்தாது நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் தண்டனைகளுக்கு அஞ்சியேனும் கயவர்கள் குற்றம் புரியாதிருப்பர்.
    இந்த ஆண்டேனும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகள் குறைய வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
    அருமையான கருத்துக்களை வழங்கிய ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்!!

  2. இந்திய குடியரசு தினச் செய்தியாக பவள சங்கரி எழுதியுள்ள தலையங்கம் பயன்மிக்கது. நாட்டில் நிலவும் பல்வேறு சமுதாயச் சீர்கேடுகளை அலசி ஆராய்ந்து அவற்றுக்கான சில வழிமுறைகளும் தந்துள்ளார்.

    முக்கியமாக தற்போது பரவலாகப் பேசப்படும் பாலியல் கொடுமைகள்பற்றி குறிப்பிட்டு, அவை அதிகரிக்கக் காரணம் பெருகிவரும் மதுப்பழக்கம் என்றும் கூறியுள்ளார். இது ஓரளவு உண்மைதான். மதுவும் மங்கையும் என்றும் ஒன்றாய் இணைந்துதானே கவிஞர்கள் வரிகள் எழுதுகின்றனர்?

    ” ஒரு கோப்பையிலே என் குடியிறுப்பு

    ஒரு கோல மயில் … ” என்றுதானே கவிஞரும் எழுதினார்? மது உள்ளே போனதுமே மங்கையின் எண்ணம் தானே வருமோ என்னவோ!

    ஆனால் இந்த மதுப் பழக்கம் உலக நாடுகள் அனைத்திலுமே இருக்கும்போது இந்தியர்கள் மட்டும் என் அளவோடு குடிக்காமல் இப்படி குடிகாரர் எனும் பட்டம் பெறுகின்றனர். மற்ற நாடுகளில் மக்கள் குடிக்கலையா? அங்கே வருமானம் அதிகம் இருந்தும் அளவோடு குடிக்கின்றனர் ஆனால் இங்கோ கையில் கிடைக்கும் காசை குடித்து முடித்துவிட்டு நிதானம் இழந்த நிலையில் குற்றச் செயல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.

    இந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவில் நிச்சயமாக பன்னெடுங்காலமாகவே இருந்திருக்கலாம். ஆனால் அவை வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம். தற்போதைய தகவல் சாதன வளர்ச்சியால் இது உடனுக்குடன் தெரிய வருகின்றது.

    இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக வெளியில் தனியாக செல்ல நேர்வதால் எப்போதுமே இதுபோன்ற ஆபத்துகள் அவர்களைச் சுற்றி நிழல்போல் தொடர்கின்றன. யாருக்கு எப்போது என்ன நேரும் என்ற உறுதியற்ற சூழல் நிலவி வருவது முற்றிலும் உண்மையே.

    பெண்களுக்கு விடுதலை என்ற நிலையில் பெண் என்பவள் இன்னும் பாதுகாப்பற்ற ” விடுதலையில் ” தான் வாழ்ந்துவருகிறாள் . கல்விச் சாலைகள் முதல் பணி மனைகள்வரை அவள் sexual harrasment எனும் பாலியல் தொல்லைக்குமே உட்படுகிறாள். சக ஊழியர்கள், மேலதிகாரிகள், என எல்லாராலுமே இந்த அவலம் நேரும் வாய்ப்புள்ளது. இதை வெளியில் சொன்னால் விபரீத விளைவுகளை அவள் எதிர்நோக்கவேண்டியுள்ளது. இதனால் அவள் வாய்மூடி மௌனியாகவே வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

    இதற்கு என்ன பரிகாரம்?

    1. பெண்கள் தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளை உணர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடையிலும், உடையிலும், செல்லும் இடங்களிலும் நடந்துகொள்ளவேண்டும்.

    2. சட்ட ஒழுங்கு காக்கும் காவலர்கள் உண்மையானவர்களாக, ஒழுக்கம் நிறைந்தவர்களாக அதிக அளவில் ரோந்துப் பணிகளில் ஈடுபடவேண்டும்.

    3. குடிப்பழக்கம் பற்றிய விழிப்புணர்வு பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் உண்டாக்கும்வகையில் ஆவன செய்யவேண்டும்.

    4. மக்களிடையேயும் குடியின் தீமைகளை அதிகமாக விளம்பரப்படுத்த வேண்டும்.

    5. பாலியல் குற்றத்தில் பிடிபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

    சமுதாய நலனில் அக்கறையுடன் இக்கட்டுரையைப் பதிவு செய்துள்ள பவள சங்கரிக்கு எனது பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்!…டாக்டர்.ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.