எல்லோரும் இந்நாட்டு மன்னர்
சக்தி சக்திதாசன்
இங்கிலாந்திலே ஒரு கூட்டரசாங்கம் அமைந்து, இரண்டு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
பல அரசியல் அதிர்வுகளைத் தமது அரசியல் சாசனங்களாகக் கூட்டரசாங்கம் அமைந்த போது அதில் பங்கு கொண்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் கட்சியும் முன்வைத்தன. இதுவரை இங்கிலாந்திலே இத்தகையதோர் கூட்டரசாங்கத்தை எதிர்கொண்டிராத மக்களின் எதிர்பார்ப்புகளும் அதற்கேற்ப அதிக அளவிலே அமைந்திருந்தன.
இந்த அரசாங்கம் ஆறுமாத காலம் கூடத் தாக்குப் பிடிக்காது என்று கணித்தவர்கள் ஒருபுறம், ஏதாவது குழப்பம் பண்ணி இந்த அரசாங்கத்தை வீழ்த்தி விடவேண்டும் என்று எண்னுவோர் மறுபக்கம், சரி ஏதோ ஆட்சியைக் கைப்பற்றி விட்டார்கள். மக்களாகிய நாங்கள் தானே இத்தகைய நிலைக்கு வாக்களித்தோம், ஏன் இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கக் கூடாது என எண்ணுவோர் இன்னொரு பக்கம் என அபிப்பிராயங்கள் பல வடிவெடுத்தன.
பொருளாதாரச் சிக்கல் ஒருபுறம், அதைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளில் அரசாங்கச் செலவுகளை மட்டுப்படுத்துவதினால் ஏற்படப் போகும் வேலையற்றோர் தொகையுயர்வு என ஏற்படப் போகும் சிக்கல்களைச் சமாளிக்கும் வழி வகைகளை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளில் திளைத்திருக்கும் இப்புதிய கூட்டரசாங்கம் கைக்கொள்ளும் ஒருவித புது விதமான யுத்தியை நோக்கிய பார்வையே இக்கட்டுரையின் மையக் கரு.
தேர்தல் பிரசாரத்தின் போது கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், தற்போதைய இங்கிலாந்துப் பிரதமருமாகிய டேவிட் கமரன், தாம் பதவிக்கு வந்தால் அமைக்கப் போகும் அரசாங்கம் மக்களோடு பங்கு வகிக்கும் ஒரு அரசாங்கமாக இருக்கும் எனவும் தமது அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் மக்கள் பெரும்பான்மையோரின் விருப்புகள் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தாம் மக்கள் பங்களிக்கக்கூடிய வழிவகைகளைக் கையாளுவேன் என்றும் கூறியிருந்தார்.
இதன் பின்னணியில் இரு காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
1. தோற்கடிக்கப்பட்ட லேபர் அரசாங்கம் தனது இறுதி வருடங்களில் ஒரு சர்வாதிகாரப் போக்கைக் கைக்கொண்டிருந்தார்கள் என்பது போன்று மக்கள் எண்ணியதால் அதை முக்கிய காரணியாக்க முனைந்தது.
2. எந்தக் கட்சி அரசாங்கம் அமைத்தாலும் இங்கிலாந்து எதிர்நோக்கும் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு எடுக்கப் போகும் நடவடிக்கைகள், மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையிலே அமையவேண்டியிருந்தது. அத்தகைய சூழலில் தாம் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் மக்களுக்கும் பங்கிருந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தம் அரசாங்கத்தின் மீது ஏற்படப் போகும் அதிருப்தியின் வீதத்தைக் குறைக்கலாம் என டேவிட் கமரன் கணித்திருந்தது.
சரி, பதவிக்கு வந்த பின்னர் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டாமா? தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகள் வழக்கம் போல கயிறறுந்த பட்டம் போல பறந்து போயின என்னும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டயாம் கூட்டரசாங்கத்தின் தலையில் விழுந்தது.
“மக்களே உங்களுக்கு பிடிக்காத சட்ட மூலங்கள் எவை எவையெனக் குறிப்பிடுங்கள். அவற்றில் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு தலைசாய்த்து நாம் அவற்றைச் சட்டத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம்” என்றோர் அறிவித்தலைச் செய்து, மக்கள் தமது கருத்துகளை இணையத்தளத்தின் மூலம் அறிவிக்கலாம் என்றும் அறிவித்து அதற்கான இணையத்தளத்தை விளம்பரப்படுத்தினார்கள்.
விளைவு! இணையத்தளம் மக்களின் முற்றுகையினால் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அது மட்டுமல்ல, மனிதாபிமானற்ற தண்டனை எனப் புறந்தள்ளப்பட்ட மரண தண்டனையைத் திரும்பக் கொண்டுவா என்னும் கோரிக்கையிலிருந்து வெளிநாட்டவரின் குடியேற்றத் தடுப்புக்கு உகந்த கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது வரை பல வகையான கடும்போக்குக் கொண்ட மக்களின் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எப்படியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம் என அந்நடவடிக்கைகளினால் பாதிக்கப்படப் போகிறவர்கள் எனக் கருதப்பட்ட அரச இலாகா ஊழியர்களிடமே ஆலோசனைகளைக் கோரி அதற்கென ஒரு இணையத்தளம் அறிவிக்கப்பட்டது.
அந்த இணையத்தளத்திலும் பல விதமான சர்ச்சைக்கு உரிய, ஆச்சரியத்தை உணடு பண்ணக்கூடிய பல கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சிலவற்றை எடுத்துப் பார்க்கையில் இவை நிறவெறி கொண்ட மக்கள் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும் ஒரு இணையத்தளமோ என எண்ணும் வகையில் சில கருத்துகள் மிகவும் கடுமையான போக்கினைக் கொண்டிருந்தன.
பல முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
தேர்தல் என்னும் ஜனநாயக முறையில், மக்கள் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் படித்து அவர்களின் கொள்கைகளை ஆராய்ந்து, தலைவர்கள், மற்றும் பல முக்கிய பொறுப்புகளில் இருப்போரின் தொலைக்காட்சி நேர்காணல்களைக் கண்டு, யார் தமது அபிலாஷைகளுக்கு ஒத்துப் போகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள்.
அப்படித் தேர்ந்தெடுக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் நாட்டைத் தகுந்த முறையில் நடத்திச் செல்லும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.
அதன் பின்னால் அந்த அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் மக்கள் தமது பங்களிப்பைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது பேசுவதற்கும், எழுதுவதற்கும் வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் எத்தனை வீதம் சாத்தியமாகும்? என்பது கேள்விக்குறியே.
தமது அன்றாடத் தேவைகளுக்கான நடவடிக்கைகள் கொடுக்கும் தலைவலிகளையே தாங்க முடியாமல் தவிக்கும் சாமான்ய மக்களின் தலையில் இத்தகைய பொறுப்புகளை அரசாங்கம் திணிப்பது எவ்வகையில் நியாயமாகும்?
இந்தக் கேள்வி ஒருபுறம் எழுகிறது.
ஒவ்வொரு மனிதனின் அபிப்பிராயமும் வேறுபடுகிறது, இதன் காரணத்தாலேயே அறுதிப் பெரும்பான்மை எடுப்பவர்கள் அரசமைக்கும் தகுதி பெறுகிறார்கள். அவர்கள் தமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, தமக்கு எதிராக வாக்களித்தவர்களின் கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய கடமை உடைவர்களாகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தமது கருத்தை, தமக்குப் பிடித்தமானவற்றை இணையத்தளைத்தில் குறிப்பிட்டால் அனைவரது கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது சாத்தியமா? இல்லையே! அங்கேகூட பெரும்பான்மையானவர்களின் அபிலாஷை தானே நிறைவேற்றப்படுவது சாத்தியமாகும்.
இப்படி மற்றொரு புறம் கேள்விகள் எழுகிறது.
அது மட்டுமா?
அரசியல்வாதி என்று ஒருவரை நாம் குறிப்பிடும்போது அவருக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வேறுபாடு? சாதாரண மனிதன் தனது உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு அவசரமான முடிவெடுக்கத் தலைப்படுவான். ஆனால் பண்பட்ட அரசியல்வாதியோ தான் எடுக்கும் முடிவு சட்டரீதியாகச் செல்லுபடியாகுமா?, மனித தர்மத்துக்கு உட்பட்டதா?, எடுக்கப் போகும் முடிவினால் சமுதாயத்தினுள் விரிசல்கள் ஏற்படுமா? என்பதையெல்லாம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்.
அதன் அடிப்படையில் பார்த்தால் மக்கள் இணையத்தளத்தில் தாம் எதிர்பார்ப்பவை என்னும் பட்டியலின் கீழ் தமது இதய உணர்ச்சிகளின் அடிப்படையில் உந்தப்பட்டு, எதை எதையோ எழுதுவார்கள். ஆனால் உண்மையான அரசியல்வாதிகளாலோ, அரசாங்கங்களினாலோ அதை அப்படியே அமுலாக்குவது சத்தியமாகாது.
இதுதான் யதார்த்தம்.
அப்படியானால் எதற்காக இந்த மக்களுடனான கலந்தாலோசிப்பு? சிந்தித்துப் பார்த்தால் இது வெறும் கண்துடைப்பே என்பது புலனாகும். இப்படியான விளம்பரங்களின் மூலம் ஓரிரு நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு மாயையைத் தோற்றுவிக்கலாம். இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கம். அனைத்தையும் எம்மைக் கலந்தாலோசித்துத்தான் புரிகிறார்கள் என்ற ஒரு கற்பனையை சிருஸ்டிப்பதற்கான வேலைகளே இவையெல்லாம்.
இன்றைய இங்கிலாந்துச் சூழலிலே எமக்கு முன்னே தெளிவாகத் தெரியும் உண்மை ஒன்று. நாட்டின் கடன் 160 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கு அதிகமாக உள்ளது. இதைக் குறைத்து, பொருளாதார நிலையைச் சீராக்குவதே இன்றைய அரசாங்கத்தின் முன்னாலுள்ள முக்கியமான பணி. இந்நடவடிக்கை, நிச்சயம் மக்கள் அனைவரையும் ஏதாவது ஒருவகையில் தாக்கத்தான் போகிறது. ஆனால் இதை அறியா அளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர்.
வீணான மாயைகளைத் தோற்றுவிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு நாட்டின் நிலையைச் சீராக்கும் பணியை முண்ணெடுத்தால் நிச்சயம் அதன் விளைவுகளின் மூலம் அரசாங்கத்தின் மீது மக்கள் எழுதும் தீர்ப்பு நியாயமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கியமான பணி மக்கள் தங்களிடம் கையளித்த பணியைச் செவ்வனே செய்து முடிப்பது.
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்” கேட்பதற்கு இனிமையாக உள்ளது, எத்தனையோ லட்சம் மன்னர்களால் ஒரு நாட்டை ஆள முடியுமா?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஆனால் மக்களே மகேசனாக ஆக முடியுமா?