கணவன்
என். சுரேஷ்
அந்தச் சந்தைக் கடையின் இரண்டு தெருக்களின் இரு புறங்களும் காய்கறி வர்த்தகம் சத்தமாக நடந்துகொண்டிருந்தது.
எறும்புகளிடமிருந்தும் நாகரிகம் கற்றிடாத மனிதர்களின் கூட்டம், அந்த சந்தைக் கடை எங்கும்!
நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே ஒற்றை நிலவாய் அதோ அந்தப் பேரழகி! அவளும் தீவிர காய்கறி வியாபாரத்தில்…
இரவில் மட்டும் மதுவை நேசிக்கும் கணவன், இவளின் வியாபாரத்திற்கு எப்போதும் பேருதவி செய்வான்!
இவளுக்கா இரண்டு பெண்பிள்ளைகள் என வியந்தனர் மங்கையர்களும்!
அவளிடமிருந்த அழகுணர்வோ, ஆடம்பர வாழ்க்கையின் மீது அவள் கொண்ட மோகமோ, மனசாட்சியைத் தூக்கி எறிந்த மனநிலையோ, அதில் எது என்று காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு கோடீஸ்வரனிடம் இருந்த ஈர்ப்பைக் கண்ட சில நாட்களிலேயே அதைக் காதலென்று நம்பி ஓர் இரவு, இரகசியமக அவள், அவன் தந்த வீடு சென்று அவனுக்குத் தாசியானாள்!
இந்தச் செய்தி, சந்தைக் கடை முழுக்கத் தெரிந்தது தெளிவாக!
அவளின் ஏழைக் கணவனும் பெண் பிள்ளைகள் இருவரும் கொடுமையான இந்தப் பிரிவாலும் வெட்கத்தாலும் அதிர்ந்தனர். அன்றிரவு முதல் அவன் மதுவைத் தொடவில்லை!
இரு மாதங்கள் கடந்ததும் கோடீஸ்வரனில் இருந்தது காதலே அல்ல, காமமே – என்றறிந்ததும் சுதந்திரம் தேடினாள். அடிமை தனக்கு இனியேது வாய்ப்பென்று மனம் தளர்ந்தாள், உறக்கமின்றித் தவித்தாள்!
குற்ற உணர்வின் உச்சத்தில் அகத் தீயை அணைக்கத் தன்னுடலைத் தீயால் குளிப்பாட்டினாள்!
உயிர் தப்பித்தது; அழகு அசிங்கமானது!
அடையாளங்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து, இனி என்ன செய்ய? – என்ற கேள்விக்குப் பதில் தேடி, மருத்துவமனையிலிருந்து ஓர் இரவில் ஏழைக் கணவனின் கருணை தேடிச் செல்ல, அவளைச் சந்தைக் கடைச் சமூகம் அவள் தாயின் தலைமையில் விரட்டினார்கள்! செத்துத் தொலையச் சபித்தார்கள்!
உறக்கத்திலிருந்து விரைந்தோடி வந்த ஏழைக் கணவன், ‘சமூகமே! நீங்களும் இனி இவளைத் தண்டிக்க வேண்டாம். இவளை மன்னிக்கும் மனம் என்னிடம் உள்ளது” என்றதும் சந்தைக் கடை மக்கள் வியப்புடன் அமைதியாகினர்!
அவளை அவன் அன்போடு அழைத்துச் சென்றான், தனது குடிசைக்குள்!
=======================================
ஓவியம் – எஸ்.விஜய்
நன்றி – http://www.desipainters.com/market-girl
ஆண்கள் பாலியல் தொழிலாளியிடம் சென்று வந்தால் காலம் காலமாய் ஏற்கணும் பெண்..
ஆனால் பெண் சோரம் போனால் அது பணத்துக்காக என எப்படியெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையோடு இந்தக் காலமும் எழுத முடியுதோ…?
எழை என்ற இளக்காரம்தானே?..
பணத்துக்காக ஒருபோதும் சோரம் போகமாட்டாள்.. அப்படியானால் பாலியல் தொழிலாளி ஆகிடுவாள்..
அதிலும் இரண்டு குழந்தைக்குத் தாய்…
நம்பும் படியான கதையுமில்லை.. பெண்களில், அதிலும் ஏழைப் பெண்னை மட்டம் தட்டும் கதை..
முதலில் பெண்களைப் புரியணும் எழுத்தாளர்.. அடுத்து ஏழைகளை..
இதுதான் உண்மையான காதல்.
நானும் இக்கருத்துடன் ஒத்துப் போகிறேன், ஐயா சுரேஷ் – உங்கள் திறமைக்கு ஏன் கீழ்த்தரமாக எழுதுகிறீர்கள்.. உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வெளிப்படையான் சிறந்த உணர்வுகளை.
——————————————-
N Suresh Chennai
இது ஒரு கற்பனைக் கதை அல்ல! நிஜமாகவே நடந்த சம்பவம். சில வேளைகளில் உண்மை கசப்பானதே. என்ன செய்ய? இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் பலருக்கும் இந்தியாவில் நடக்கும் பலவற்றைத் தொலைக்காட்சிகளிலும் கணினியிலும் மட்டுமே கண்டறிய முடியாது. சண்டை போட வேண்டும் என்று கணினிக்கு முன் யாராவது இருப்பின் அவர்களோடு எனக்கு நட்பில்லை. கருத்துப் பரிமாற்றத்தை வரவேற்கிறேன். தனி மனிதத் தாக்குதல் தவறு என்று அனுபவங்கள் போதித்தும் திருந்தாதோர் மீது ஆழ்ந்த வருத்தங்கள்.
———————————————-
சுரேஷ் உங்களைத் தாக்க என்ன தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் கோபமா எனக்கு..? ஆனால் உங்கள் எழுத்து நடையை ரசிப்பவன் நான். இது வாசித்தவுடன் ஒன்றும் எழுத முடியவில்லை…. சற்று குறைவாகவே இருந்தது… பின்பு உங்கள் பக்கத்தில் இருந்து தான் அது எடுத்துப் போட்டேன்… அந்த விமர்சகரும் தனிப்பட்ட ரீதியில் தாக்கவில்லை என்றே நம்புகிறேன்… ஆண்கள் தவறு விடும்போது அதைக் கவனிக்காமல் பெண்கள் தவற்றைப் பெரிசு படுத்துவதைக் கண்டித்தார்… உண்மையாயின் நம்பத்தான் வேண்டும்… தீக்குளித்தது அந்தப் பெண்ணின் முட்டாள்தனம்.. அந்தப் பெண்ணுக்கு ஆதரவு கொடுக்காத சமூகத்தைக் கண்டிக்க வேண்டும்… அந்தப் பெண்ணை தீக்குளிக்க வைத்த சமூகத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்… 5 ஆண்களுடன் உறவு கொண்ட திரௌபதிக்கு கோயில் கட்டும் சமூகம், ஏன் அந்தப் பெண்ணைத் தீக்குளிக்க வைக்க வேண்டும்….
50 வயது வந்தாலோ, இரண்டு பிள்ளை பிறந்தாலோ, உணர்வுகள் அற்றுவிடும் என்று எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை.. அந்தப் பெண் தான் சமூகத்தில் பிழை விட்ட முதல் பெண்ணுமில்லை… வள்ளுவர் காலத்துக்கு முன்பே களவொழுக்கம் இருந்தது …வள்ளுவர் அதற்கு ஒரு சிறு அதிகாரமே எழுதியிருக்கிறார்.. நாம் வயது முதிர்ந்த இளைஞர்களாகப் பெண் சுகம் தேடும் பொழுது அப்பெண் தேடினால் என்ன தவறு… அப்பெண்ணைத் தீக்குளிக்க வைத்த சமூகமும் கணவனும் திரௌபதி அம்மன் கோவில்களுக்குத் தீ மூட்டத் தயாரா? உங்கள் எழுத்தில் சம்பவத்தில் உண்மை இருந்தாலும் , பெண்மீது குற்றம் சாட்டியது மிகத் தவறு… இக்கருத்தை என் அண்னன் என்ன,அப்பா என்ன, உற்ற நண்பன் என்ன, என் காதலி என்ன… யார் சொன்னாலும் குற்றம் குற்றமே.. ஆனால் இதில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கு என்று , பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது…… சுரேஷ் உங்கள் எழுத்தை ரசிக்கிறேன்… விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
……..
அன்புத்தம்பி சுரேஷ்,
வாழ்க்கையின் அல்லல்களை, ஒவ்வொருவருக்கும் மனதின் உணர்ச்சியலைகள் கொடுக்கும் தாக்கத்தை, மிகவும் அழகாக சுருக்கமாக அற்புதமான கதையாகத் தந்துள்ளீர்கள். எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு பல சமயங்களில் விளக்கம் கிடைப்பதில்லை. ஒரு ஏழைப் பெண்ணை மையமாக வைத்தி நீங்கள் உருவகப்படுத்திய இக்குறுங்கதை. சமுதாயத்தின் பால் மக்கள் கொள்ள வேண்டிய விழிப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. எமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சில சமய்ங்களில் சில நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன. என்ன செய்வது சமுதாயத்தின் சாபக்கேடு அது.
அன்புடன்
சக்தி
//*அவளைச் சந்தைக் கடைச் சமூகம் அவள் தாயின் தலைமையில் விரட்டினார்கள்! செத்துத் தொலையச் சபித்தார்கள்*!//
அடடா , இதே சந்தைக்கடை சமூகம் மட்டும் ஆண்களையும் இப்படி விரட்டியிருந்தா?…:)
இதே போல செத்துத் தொலையச் சொல்லியிருந்தா , வெளங்கியிருக்குமே.. (நன்றி – தமிழ் மேட்ரிமோனி.காம்)
//அந்தப் பெண்ணுக்கு ஆதரவு கொடுக்காத சமூகத்தைக் கண்டிக்க வேண்டும்… அந்தப் பெண்ணை தீக்குளிக்க வைத்த சமூகத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்//
மிக்க நன்றி பத்மனாபன் சார்,,
எனக்கு நீங்க அறிமுகமில்லை..
இருப்பினும் பெண்களை சமமாக பாவித்து, மிகத் தெளிவாகக் கேள்வி எழுப்பியிருக்கும் உங்களுக்கு நன்றி..
N Suresh Chennai
இது ஒரு கற்பனைக் கதை அல்ல! நிஜமாகவே நடந்த சம்பவம்.//
:)))
ஹஹ. சிரிப்புத்தான் வருது.. இது உண்மையாகவே இருக்கட்டும்.. ஆனால் இதே போல ஆண்கள் எத்தனை பேர் தினமும் பாலியல் தொழிலாளி வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதும், அவர்கள் அப்படி போகிறார்கள் எனத் தெரிந்தும் வேறு வழியின்றி, உள்ளுக்குள் அழுதுகொண்டே ஏற்கும் எண்ணற்ற மனைவிமார்களும் இருக்கின்றனர்..?
ஏன் அவர்களைப் பற்றி உயர்வாக எழுதத் தோணுவதில்லை நமக்கு.. ஏன்னா அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது..
கிளி மாதிரி மனைவி இருந்தாலும் ஆண் போகத்தான் செய்வான். ஏற்கத்தான் செய்யணும் என்றே கற்பிக்கப்பட்டு அதுவே கற்பாகவும் சொல்லப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்..
” ஆம்பிளைன்னா அப்படித்தான் இருப்பாங்க, நீதான்மா அட்ஜஸ்ட் செய்துட்டு போகணும்,..” இதுதானே நீங்க சொல்வது…?
சென்னையில் முடிந்தால் எய்ட்ஸ் மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள்.. எத்தனை பெண்கள், குழந்தைகள் கணவன் மூலமாக எய்ட்ஸ் நோய்க்குப் பலியாகி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிறார்கள்.. (என் தோழி அங்கே மருத்துவர்)
ஆக சமூகத்துக்கு, சமூக மாற்றத்துக்கு ஏற்ப கதைகள் வல்லமையில் வருமென ஆசைப்படுகிறேன்.. இப்படியான ஆணாதிக்கச் சிந்தனையோடு இன்னும் பெண்களை அடிமைப்படுத்தும் விதமாக அல்ல..
இது பெண்ணுக்கு மட்டும் கஷ்டம் தரப் போவதில்லை.. ஆணாதிக்கத்தனத்தோடு வளர்க்கப்படும் குழந்தைகளுமே பாதிக்கப்படுவார்கள்.. பெண்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆக, ஆண் குழந்தைகளிடம் பெண்களைச் சக தோழியாக மதிக்கச் சொல்லித் தருவோம்.. தெய்வமாக பூஜித்து, பின் குப்பையில் போடும் விதமாக அல்ல..
வல்லமை, பெண்களை வல்லமையாக்கட்டும்..
நம்ம நாட்டில் ஆணுக்கு இருக்கும் அதே அளவு கஷ்டங்கள் பென்ணுக்கும் இருக்கு..
ஆனால் ஆண்கள் டாஸ்மாக் , அல்லது பாலியல் தொழிலாளியிடம் சென்று விடுகிறார்கள்..
ஒரு பெண் தன் கஷ்டம் மறக்க இப்படி டாஸ்மாக் போக ஆரம்பித்தால்..?
வெளிநாட்டில் மனைவி இல்லத்தரசியாக இருந்தாலுமே இருவரும் சேர்ந்தே எல்லா வேலையும் செய்தாகணும்.. ஒன்றாகக் குடிக்கிறார்கள்..
தாங்குவீர்களா, இப்படி ஒண்ணு மட்டும் நம் நாட்டில் நடக்குமானால்..?
இன்னும் எத்தனை காலம் தான் பெண்ணைக் குறை சொல்லியே அடக்கி ஆள போகிறீர்கள்..?..
அவ சோரம் போனாளாம், சமூகம் அடிச்சுத் தொறத்துமாம், குடிகாரன் திருந்தி ஏத்துக்குவானாமாம்.. :))
ஒருவேளை அரசு மட்டும் எல்லாப் பெண்களுக்கும் ஆயுசுக்கும் வாழ வழி செய்கிறோம்னு சொல்லிச்சுனு வையுங்க.., 50% மேல் பெண்கள் கணவனை விட்டுவிட்டு குழந்தைகளோடு வரத் தயாரா இருப்பாங்க..
இதுதான் நம் நாட்டின் நிலைமை..
பெண்கள் மட்டும் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்தால் அவர்களை ஒண்ணும் செய்ய முடியாது.. அன்பால் மட்டுமே அடிமைப்படுத்திட முடியும்.. அதிகாரத்தால் அல்ல..
ஏற்கனவே நம் நாட்டில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.. இனியாவது அவளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கப் பழகுவோம்..
ஆண் என்றால் என் வீட்டு ஆணும் , பெண் என்றால் உங்க வீட்டு பெண்ணும் என நினைத்து எழுதுங்கள்..
எறும்புகளிடமிருந்தும் நாகரிகம் கற்றிடாத மனிதர்களின் கூட்டம், அந்த சந்தைக் கடை எங்கும்!//
இதைப் போல பொதுவாக ஒரு சமூகத்தை, விளிம்பு நிலை மனிதர்களை எழுதாதீர்கள்..
நாகரிகம் என்பது என்ன முதலில்..?
அடுத்தவர்களை எவ்வகையிலும் காயப்படுத்தாமல் இருப்பதும் நாகரிகம்.. அது நமக்கு இல்லையே….?
நமக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது, ஏழைகளை சந்தைக் கடையில் இருப்பவர்களை ஒட்டுமொத்தமாக நாகரிகமற்றவர்கள் என விமர்சிக்க..?
ஏன்னா நமக்குப் பணம், உடுத்த நல்ல உடைகள், நல்ல மதிப்பான வேலை.. கொண்டாட நட்புகள், குடும்பம்.. ஆக இது நாகரிகம் என நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.:)
நாடகத்தனமான பேச்சு, முகத்தில் போலித்தனமான புன்னகை இருந்தால் அது நாகரிகம்..
?.
முடியல..:)
We are just hypocrites..
அன்புள்ள சுரேஷ் அண்ணனுக்கு
உங்க கதை மிக அருமை. வாழ்த்துகள். மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.
இந்த கதையில் ஒரு பெண் அவள் காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டால், அவளை ஏழையாக சித்திரிதிருந்தலும் பணக்காரப் பெண்களும் கூட இப்படி நடந்து கொள்வதைப் பார்க்கின்றோம். தம்பி சுரேஷ் உண்மைச் சம்பவத்தைக் கதையாகத் தந்திருக்கிறார்.
தன் குடிப் பழக்கத்தால் அழகிய மனைவியை இழந்த கணவன், குடிகாரர்களுக்கு ஒரு பாடம். ஆண்களும் சரி, பெண்களும் சரி, ஒரு சிறு நிமிடத்தில் தவறான முடிவு எடுத்து, விரலைச் சுட்டபின் தவறை உணர்கின்றோம்.
நாம் வயது முதிர்ந்த இளைஞர்களாகப் பெண் சுகம் தேடும் பொழுது அப்பெண் தேடினால் என்ன தவறு? தவறே இல்லை. ஆனால் அவளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எம்மில் எத்தனை பேருக்கு இருக்கு? இயேசு நாதர் சொன்னார்கள், ‘உங்களில் யார் இந்தத் தவறு செய்ய வில்லையோ, அவர்கள் கல் எடுத்தும் இவளை அடிக்கட்டும்’ – ஒரு நிமிடத்தில் இடம் காலி.
ஏழைகள் மத்தியில் கவுரவமும் கண்ணியமும் உயர்வாக மதிக்கப்படுகிறது. அதனால் தான் இது போன்ற சம்பவங்கள் பெரிதாகத் தெரிகிறது, தெரியப்படுத்தப்படுகிறது அங்கே. பணக்காரர்கள் மத்தியில் இதெல்லாம் சகஜம். பெரிதுபடுத்தப்படுவது இல்லை. மூடி மறைக்கப்பட்டு விடுகிறது.