கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு

1

கணையாழி சிற்றிதழின் நிறுவனர் கி.கஸ்தூரிரங்கன், 2011 மே 4 அன்று காலை ஆறு மணி அளவில் காலமானார். இவருக்கு வயது 78. இவரது இறுதிச் சடங்குகள், மே 6 அன்று காலை சென்னையில் நடைபெற்றன.

Kasturirangan_kanaiyazhi

கி. கஸ்தூரிரங்கன் (சனவரி 10 1933 – மே 4 2011) தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்

கி.கஸ்தூரிரங்கன். 10-1.1933இல் பிறந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் களத்தூர் சொந்த ஊர். சென்னைப் பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1961இல் தில்லிக்குச் சென்று நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபராகப் பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார்.

1981 முதல் 1991 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். பொதுச் சேவைக்காக ஸ்வச்சித் என்ற அமைப்பை நிறுவி, செங்கல்பட்டு மாவட்டக் கிராமங்களில் களப் பணி ஆற்றினார்.

கஸ்தூரிரங்கன், புதுக்கவிதையில் ஆர்வம் கொண்டவர். இவரது கவிதைகள், முன்னோடி சிற்றிதழான ‘எழுத்து’வில் வெளிவந்துள்ளன. தில்லியில் இருக்கும் காலத்தில் அங்கே வாழ்ந்த முக்கிய எழுத்தாளர்களான க.நா.சுப்ரமணியம், ஆதவன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.

இவர்களின் கூட்டு முயற்சியால் சென்னையில் இருந்து கணையாழி தொடங்கப்பட்டது. முதலில் அதை ஓர் அரசியல் விமர்சன இதழாகவே நடத்தி வந்தார்கள். பின்னர் அது இலக்கிய இதழாக வெளிவந்தது. அசோகமித்திரன், இதன் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கணையாழியில் சுஜாதா எழுதிய கடைசிப் பக்கங்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட பலரும் கணையாழியில் எழுதினர். கணையாழி தமிழிலக்கியத்தில் ஓர் இயக்கமாகவே செயல்பட்டது.

கஸ்தூரிரங்கன் நான்கு நாவல்களும் எழுதியிருக்கிறார். ஞானவெட்டியான் என்ற பேரில் கவிதைகள் எழுதினார்.

கஸ்தூரிரங்கனின் கவிதை ஒன்று –

கடவுளும் கவர்மெண்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழி சேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்: காதுகள்.
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளும்; பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்.
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மெண்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்ன்மெட்தான்.

[ஆகஸ்ட் 1965]

இடையில் நின்றிருந்த கணையாழி, இப்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இந்த வகையில் கஸ்தூரிரங்கனின் இருப்பினைக் கணையாழி தொடர்ந்து காத்து வருகிறது.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை நல்கிய கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு வல்லமை, தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

==========================================
வாழ்க்கைக் குறிப்புக்கு நன்றி – விக்கிப்பீடியா
படத்திற்கு நன்றி – http://tamilanveethi.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *