மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை எம்.பி.கள் உதவலாம்
நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அடித்தட்டு மக்களுக்கு உதவவும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயனுள்ள வகையில் செலவு செய்யவும் இந்த நிதி வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் டாக்டர் எம் எஸ் கில் இத்திட்டத்தை வகுத்துள்ளார். இதற்கான வழிமுறைகளை கண்டறியவும் நடைமுறையில் பயனுள்ள வகையில் இந்த நிதியைச் செலவு செய்ய மக்களுக்குப் பயன்படும் திட்டங்களைச் செயல்படுத்த இது மிகவும் அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து வேண்டுகோள் விடப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவதால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது மத்திய அரசின் பொதுக் கொள்கையாக இருந்து வருகிறது. எனவே, இவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் அவசியத்தை உணர்ந்த அமைச்சகம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்படும் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.பத்து லட்சம் வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும், இதனால் ஒரு சில திட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வாங்கவும் செயற்கை கை கால்கள் பொருத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற உதவிகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற சான்றிதழுடன் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் ஆகியோர் இந்த விண்ணப்பங்களிலிருந்து தகுதியானவர்களைத் தெரிவு செய்வார்கள். இத்திட்டம் 2011 ஜுன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை