வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 8

3

பவளசங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariமாறன் எப்போதும் மிக ஆவலாகத் தந்தையின் அழைப்பிற்காகக் காத்துக்கொண்டிருப்பவன், அன்று மட்டும் ஏனோ அந்தத் தொலைபேசியின் அழைப்பு மணி, ஏதோ தனக்கு வேண்டிய ஒன்று மறுக்கப்பட்டதன் விளைவாக ஒரு குழந்தையின் அழுகையாக ஒலிப்பது போலக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை இது தம்முடைய மனப் பிரமையாக இருக்குமோ?

“ஹலோ மாறன், எப்படிப்பா இருக்கிறாய்?”

“அப்பா…….சொல்லுங்கோப்பா. நீங்களும் அம்மாவும் நலம்தானே?”

“நன்னா இருக்கோம்ப்பா… நீ சௌக்கியமா இருக்கியோன்னோ?”

“இருக்கேம்ப்பா……..ம்ம்..”

“என்னப்பா… என்னமோ சொல்லத் தயங்கறாப் போல இருக்கு. எதானாலும் சொல்லுப்பா”

‘அடேய் பாவி, இப்பாவாவது உன் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுடா. அவந்திகா மட்டுமே உன் வாழ்விற்கு ஒரு வழி காட்ட முடியும் என்பதை எடுத்துச் சொல்லுடா… இப்ப விட்டா இனி எப்பவுமே அது பகல் கனவாயிடும்டா…….’

மாறனின் மனச்சாட்சி, இடித்துரைத்தும் ஏனோ இன்னும் அவன் மனம் மௌனம் சாதிக்கவே செய்கிறது. பெற்ற பாசம், அந்த நல்ல உள்ளங்கள் வேதனை படக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம், அவன் வாயை மட்டுமல்லாமல், தன் மனக் கதவையும் மூடி வைக்கச் செய்கிறது. தந்தை அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற வேதனை ஒரு புறம் வாட்டினாலும், ஒரு நல்ல மகனாகத் தன் கடமையில் இருந்து சற்றும் தவறக் கூடாது என்பதிலும் தெளிவாகவே அவனால் சிந்திக்க முடிந்தது! இந்தப் பெரும் போராட்டம் ஒரு நாள் நல்ல விதமாக முடிவுறும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

“ம்ம்..ஒன்னுமில்லைப்பா………அம்மா இருக்காங்களா?”

“இருப்பா தறேன். நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நாங்க உன் கௌரி அத்தை ஆத்திற்கு சென்று இருந்தோம்ப்பா. அவளோட பெண்ணை நாங்கள் ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் பார்க்கிறோம். நன்னா லட்சுமி கடாட்சமா, களையான முகம். குடும்பத்துக்குத் தோதான பெண். பூஜை, புனஸ்காரம் எல்லாம் ஒழுங்கா செய்யறா. இந்தக் காலத்தில படிச்ச பொண்ணு இவ்வளவு ஆச்சாரமா பார்க்கிறது அபூர்வம்தான். அதுவும் நாங்க போகும் போது அவா வீட்டு வாசல்ல, பசு மாடும் கன்றுமா ஒரு நல்ல காட்சி கிடைத்து. சகுனமும் அருமையா, மனத்திற்கு நிறைவா இருந்ததுப்பா. அவளோட போட்டோவும் உனக்கு அனுப்பறேன். பார்த்துட்டு நீ சொன்னால் மேற்கொண்டு பேச சௌகரியமா இருக்கும்……..”

“அப்பா….”

“ம்ம்… சொல்லுப்பா. எதுவானாலும் சொல்லு. ஏன் தயங்கறே? ஜாதகம் எல்லாம் அருமையா பொருந்தி இருக்கு. பெண்ணும் அஸ்தம் நட்சத்திரம். எல்லா ராசிக்காராளோடும் எளிதா ஒத்துப் போற குணாம்சம் இருக்கும். நம்ம வீட்டிலும் எல்லோரோடும் நன்னா அனுசரணையா இருப்போ…… நீ அத பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம்ப்பா”

“அதில்லைப்பா….சரிப்பா அம்மாவிடம் போனைக் குடுங்களேன்.”

“சரிப்பா…… என்னமோ மென்னு முழிங்கிண்டிருக்கே. உங்க அம்மாகிட்ட தான் சொல்லுவேன்னா அதையாவது செய். ஏன்டி, மங்களா…. வாடி உன் செல்லப் புத்திரன் உன்னாண்டத்தான் பேசுவானாம், இந்தா…”

“ஹலோ, எப்படிப்பா இருக்கே…..?”

“ம்ம்ம்… அம்மா..நீ நல்லாயிருக்கியாம்மா…?”

“ம்ம்.. சொல்லுடா ராஜா…. என்ன உன் குரலில் உற்சாகமே காணோமே…. என்னப்பா… உடம்புக்கு எதானும் பிரச்சனையா? ஒழுங்கா சாப்பிடறையோன்னோ?”

“அதெல்லாம் நன்னாத்தானம்மா சாப்பிடறேன். என்னமோ தெரியலம்மா. எனக்கு உன் மடியில தலை வச்சுப் படுத்து அழணும் போல இருக்கு.”

“மாறன்… என்னப்பா ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் சொல்லற? ஊருக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போலாமில்ல….? நீ வந்து இரண்டு வருசம் ஆச்சேப்பா. அதான் உனக்கு வீட்டு நினைவு வந்துவிட்டது போல இருக்கு….’’

“ம்ம்ம்….வர்றேன்மா.. என்னம்மா அப்பா எதோ சொன்னாரே… பெண் பார்த்துவிட்டு  வந்தோம்னு…?”

“ஆமாம்ப்பா….உங்க கௌரி அத்தையோட பெண் அனுராதாவைத்தான் பார்த்துட்டு வந்தோம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பெண். மனத்திற்கு நிறைவா இருக்குன்னு அப்பா சொல்லிண்டிருக்கார். ஜாதகமும் சகுனமும் நன்னா இருக்குன்னு சந்தோசமா இருக்கார்.”

“நீ, என்னம்மா சொல்றே…..உனக்கும் பிடிச்சிருக்கா…?’’

“ஆமாம்ப்பா. நீ விரும்பற மாதிரி நல்லா, அழகா பாட்டு பாடறா. இந்தக் காலத்துல இப்படி படிச்ச பொண்ணுங்க இருக்கறது அபூர்வம். அதனாலேயே எனக்கும் பிடிச்சிருக்கு’’

“அம்மா……. அதெல்லாம் சரி. ஒரு சின்ன விசயம். கௌரி அத்தைக்கு ஏதேனும் வாக்கு கொடுத்தீங்களா..?’’

“புரியலயேப்பா……. என்ன கேட்கறேன்னு….. என்ன வாக்கு கொடுக்கறது…?”

“இல்லம்மா…. அவங்க பெண்ணைக் கட்டிக்கறதா, ஏதாவது வாக்கு கொடுத்துட்டீங்களான்னு கேட்டேன்’’

“ஏம்ப்பா……..என்ன ஆச்சு? நீ இன்னும் பெண் போட்டோ கூட பார்க்கலியே. அதுக்குள்ள என்ன ஆச்சு? சொந்தம் வேண்டாம்னு நினைக்கறியா….?’’

“இல்லம்மா…..அப்பா எங்கே இருக்கார்?’’

“தெரியலப்பா. அவர் பெட் ரூம் பக்கம் போனார். சத்தம் காணோம். தூங்கறாரோ என்னமோ தெரியல.”

“அம்மா….. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கதானே…….’’

‘ஏதோ பெரிய பீடிகையாப் போடப் போகிறானோ….. என்னன்னு தெரியலியே. ஆரம்பத்தில் பெண் பார்க்க ஆரம்பிக்கும் போது அவனைக் கேட்டுவிட்டுத்தானே ஆரம்பித்தோம். அதற்குள் என்ன ஆச்சுன்னு தெரியலியே…. அவர் வேறு ரொம்ப சந்தோசமா இருக்கார், நல்ல பெண்ணா அமைஞ்சிருக்கான்னு. இந்த நேரத்துல இவன் வேறு என்னமோ சொல்ல வரானே…’ என்று யோசிக்கும் போதே,

‘‘அம்மா, என்னம்மா, பேசாம இருக்கீங்க……..’’

‘‘இல்லப்பா… நீ என்னமோ சொல்ல வந்தாயே, அதை எதிர்பார்த்துத்தான் காத்திருக்கேன். வேறு ஒன்னுமில்லப்பா…’’

“அது வந்தும்மா…….அவந்திகா………….”

“மங்களம்…….” அப்பாவின் குரல்.

“என்னன்னா….. இருப்பா அப்பா என்னமோ இப்படி கூப்பிடறார்” என்று பதற்றமாகச் சொல்லிவிட்டு போனைக் கீழே வைத்துவிட்டு அம்மா சென்றுவிட, மாறனோ ஏதும் புரியாமல் 10 நிமிடமாக லைனில் காத்திருக்க, அம்மா திரும்பவும் வந்து அதே பதற்றத்துடன்,

“மாறன், அப்பா என்னமோ நெஞ்சு வலிக்கறா மாதிரி இருக்குன்னு சொல்றார். வேர்த்து விடறது. வாய்வா இருக்கும்னு சொல்லி, டாக்டரை இப்ப கூப்பிட வேண்டாம், பிறகு பார்க்கலாம்னு சொல்றார். நேக்கு ஒன்னும் புரியலப்பா…..’’

“அம்மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உடனே டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போங்க. பக்கத்தாத்து ராஜாராம் மாமா இருக்காருரில்ல. அவரைக் கார் எடுக்கச் சொல்லி, டாக்டர்கிட்ட கிளம்புங்க… வேற ஏதும் யோசிக்காதீங்க… பிளீஸ். கிளம்புங்க..”

“பக்கத்தாத்து மாமா ஊரில் இல்லைப்பா. அவரோட பெண் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஏதாவது டாக்சி எடுத்துக்கிட்டு போலாமான்னு பார்க்கிறேன்’’

‘‘இல்லம்மா யாராவது கூட வந்தால் பரவாயில்ல. சரி இருங்க. என்ன பண்றது……..”

அந்த நேரத்தில் உடனே நினைவிற்கு வந்தவர் கௌரி அத்தைதான்………..

“அம்மா உடனே கௌரி அத்தைக்குப் போன் செய்ங்கம்மா. அத்தையும் மாமாவையும் நேரே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு, நீங்க டாக்சி வரச் சொல்லி அப்பாவை கூட்டிக்கொண்டு கிளம்புங்கம்மா……..’’

மாறனுக்கு அப்பாவின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டது. அத்தையின் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டான். அம்மா அப்பாவை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரைப் பார்த்து பரிசோதனைக்குப் பிறகு அப்பாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ளும் வரை காத்திருப்பதைத் தவிர, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தன்னால் வேறு என்ன செய்ய முடியும்…..?

தாயே
வரமருள்வாய் நீயே
மாயமாய் மறையும் நிம்மதியே
தாயே மீண்டும் சேயாய் மாறி
உன் மடிசாய வேண்டுமம்மா
நித்தியச் சொரூபமே!
தாயே!

அவன் மனம் வேண்டுதலில் கரைந்தது…….

(தொடரும்……

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 8

  1. கவிதைச் சுவை கூட்டுகிறது. மேலும், ‘…மாறனின் மனச்சாட்சி, இடித்துரைத்தும் ஏனோ இன்னும் அவன் மனம் மௌனம் சாதிக்கவே செய்கிறது…’ என்பதைப் பற்றி, ஒரு வியாசமே எழுதலாம், புதுமைப்பித்தன் ஸ்டைலில். அப்பப்பா! இந்த மனச்சாட்சிக்கும், மனத்துக்கும் இடையே உள்ள இழுபறி!

  2. இப்படி ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸாகவே முடியுது, கதை நன்றாகப் போகுது அக்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *